

குல்லு பள்ளத்தாக்கு 'தேவதைகளின் பூமி' (Valley of Gods) என்று அழைக்கப்படுகிறது. இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு பள்ளத்தாக்கில் (Kullu Valley) கொண்டாடப்படும் குல்லு தசரா, இந்தியாவின் மற்ற பகுதிகளை விட மிகவும் தனித்துவமானது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் 9 நாட்கள் நடைபெறும் நவராத்திரி திருவிழா பத்தாம் நாளான விஜயதசமி அன்று நிறைவடையும்.
ஆனால் குல்லு பள்ளத்தாக்கில் இந்தத் திருவிழா விஜயதசமி நாளன்று தான் தொடங்குகிறது. அன்றிலிருந்து தொடர்ந்து 7 நாட்களுக்கு இந்த சர்வதேச மெகா திருவிழா மிகக் கோலாகலமாக தால்பூர் மைதானத்தில் (Dhalpur Maidan) கொண்டாடப்படுகிறது.
குல்லு தசராவின் முக்கிய சிறப்பம்சங்கள்
இராவண வதம் கிடையாது:
இந்தியாவின் பிற பகுதிகளில் தசராவின் பொழுது 10ஆம் நாளான விஜயதசமி அன்று ராவணன், மேகநாதன், கும்பகர்ணன் ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்படுவது வழக்கம். ஆனால் குல்லு தசராவில் உருவ பொம்மைகள் எடுக்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியை உணர்த்தும் வகையில் 7ஆம் நாளில் லங்கா தகனம் (புற்களை எரித்தல்) மற்றும் விலங்கு பலி சடங்குகள் நடத்தப்படுகின்றன.
தெய்வங்களின் சங்கமம்:
இத்திருவிழாவின்போது குல்லு பள்ளத்தாக்கில் இருக்கும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 200 முதல் 300க்கும் மேற்பட்ட உள்ளூர் கிராமத்து தெய்வங்களின் சிலைகள் (தேவதைகள் மற்றும் தேவதாக்கள்) அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் தால்பூர் மைதானத்திற்கு கொண்டுவரப்படுகின்றனர்.
முதன்மை தெய்வம்:
இங்கு ராமபிரான் 'ரகுநாத் ஜி' என்ற பெயரில் பள்ளத்தாக்கின் தலைமை தெய்வமாக வழிபடப் படுகிறார். இந்த ஒட்டுமொத்த விழாவும் இந்த பள்ளத்தாக்கின் அதிபதியாகக் கருதப்படும் ரகுநாத் ஜி (ஸ்ரீராமர்) வழிபாட்டை மையமாகக்கொண்டே நடைபெறுகிறது. அரசர் ஜெகத் சிங் என்பவரால் அயோதியிலிருந்து இந்த சிலை கொண்டுவரப்பட்டு இங்கு நிறுவப்பட்டது என்ற வரலாற்றுப் பின்னணி இதற்கு உண்டு.
ரத யாத்திரை:
விழாவின் முதல் நாளில் ரகுநாத் ஜி மற்றும் பிற தெய்வங்களின் சிலைகள் பிரம்மாண்ட மர ரதத்தில் வைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க ரதயாத்திரை எனப்படும் தேரோட்டத்துடன் விழா களைகட்டும். விழாவில் இமாச்சலப் பிரதேசத்தின் பாரம்பரிய நாட்டுப்புற நடனமான 'நாட்டி' (Nati Dance) நடனத்தை ஆயிரக்கணக்கான கலைஞர்கள் பாரம்பரிய உடைகளுடன் இங்கு ஆடுவார்கள்.
வரலாற்றுப் பின்னணி:
17ஆம் நூற்றாண்டில் குல்லு பகுதியை ஆண்ட அரசர் ஜகத் சிங் என்பவரால் இந்தத் திருவிழா தொடங்கப்பட்டது. ஒரு பிராமணரின் சாபத்தால் கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட அரசர், அதற்குப் பரிகாரமாக அயோத்தியிலிருந்து ஸ்ரீ ரகுநாத் ஜியின் (ராமர்) திருவுருவச் சிலையை குல்லுவுக்குக் கொண்டு வந்து நிறுவினார்.
அதன் பிறகு தனது அரசையும், அதிகாரத்தையும் ரகுநாத் ஜியிடமே ஒப்படைத்தார். அன்று முதல் ரகுநாத் ஜி குல்லு பள்ளத்தாக்கின் முதன்மைத் தெய்வமாக வழிபடப் படுகிறார். அதன் நினைவாகவே 1650களிலிருந்து இன்றும் இந்தத் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த வருடம் 2026 அக்டோபர் 21ஆம் தேதி, விஜயதசமிக்கு அடுத்த நாள் முதன்மை விழாக்கள் தொடங்கும். அக்டோபர் 21 முதல் அக்டோபர் 27 வரை இக்கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இவ்விழா இமாச்சலப் பிரதேச அரசால் சர்வதேச திருவிழா என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. இதனால் உலகெங்கிலும் இருந்து ஆண்டு தோறும் 5 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.
இமாச்சலப் பிரதேசத்தின் பாரம்பரிய நாட்டுப்புற நடனமான 'நாட்டி', கலை நிகழ்ச்சிகள் மற்றும் சர்வதேச கலைஞர்களின் அணிவகுப்புகளுடன் சர்வதேச கலாச்சார நிகழ்ச்சிகள் மாலை வேளைகளில் அரங்கேறும். இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திருவிழாவாக (International Mega Festival) அரசால் அங்கீகரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. பாரம்பரிய கைவினைப் பொருட்கள், உடைகள் மற்றும் உள்ளூர் உணவுகள் விற்கப்படும் மாபெரும் திருவிழாச் சந்தை இந்த ஒரு வாரமும் அங்கு களைகட்டும்.
இறுதி நாள் சடங்கான லங்கா தகன்:
விழாவின் கடைசி நாளில் ரகுநாத்ஜியின் பிரம்மாண்டமான மரத்தேர் தால்பூர் மைதானத்தில் இருந்து பியாஸ் நதியின் கரைக்கு ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு, நதிக்கரையில் காய்ந்த புற்கள், இலைகள் மற்றும் மரக்குச்சிகளைக் குவித்து அதற்கு தீ வைக்கப்படுகிறது.
இது அனுமன் லங்கையை எரித்த நிகழ்வையும், தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றியையும் குறியீடாக உணர்த்துகிறது. லங்கா தகன் சடங்கு முடிந்தவுடன் இந்த தெய்வங்கள் தங்களின் மலை கிராமங்களுக்கு திரும்பத் தொடங்குவதுடன் இந்த சர்வதேசத் திருவிழா அமைதியான முறையில் நிறைவடைகிறது.
எப்படி செல்வது?
அருகில் உள்ள விமான நிலையம் பூந்தர் (Bhuntar) குல்லு-மணாலி விமான நிலையம். குல்லு நகரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அங்கிருந்து உள்ளூர் பேருந்துகள் அல்லது வாடகை டாக்ஸிகள் மூலம் செல்லலாம்.