416-வது ஆண்டு மைசூர் தசரா: 750 கிலோ தங்க அம்பாரி மற்றும் ஜம்போ சவாரியின் பிரம்மாண்ட வரலாறு!

அக்டோபர் 11 முதல் 21 வரை நடைபெறும் உலகப் புகழ்பெற்ற கர்நாடக அரசு விழாவின் முழு விவரங்கள்.
மைசூர் தசரா - Mysore Dasara 2026
மைசூர் தசரா - Mysore Dasara 2026
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

உலகப் புகழ்பெற 416-வது ஆண்டு மைசூர் தசரா விழா கர்நாடக மாநிலத்தின் அரசு விழாவாக (நாடஹப்பா) ஆண்டுதோறும் மிக விமர்சையாகக் கொண்டாடப் படுகிறது. தீமையைக் கொன்று நன்மையை நிலைநாட்டிய சாமுண்டீஸ்வரி அம்மனின் வெற்றியைப் போற்றும் வகையில் 10 நாட்கள் இந்த நவராத்திரி மற்றும் விஜயதசமி திருவிழா பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது.

இந்த வருடம் அக்டோபர் 11 முதல் தொடங்கி அக்டோபர் 21, 2026 வரை 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறுகிறது. சாமுண்டி மலையில் உள்ள ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜையுடன் விழா தொடங்குகிறது.

தங்க அம்பாரியின் சிறப்புகள்:

10 நாட்கள் நடைபெறும் மைசூர் தசரா விழாவின் 10வது நாளான விஜயதசமி அன்று, விழாவின் முக்கிய நிகழ்வான ஜம்போ சவாரி மற்றும் தங்க அம்பாரி ஊர்வலம் அக்டோபர் 21 அன்று நடைபெறுகிறது. 750 கிலோ எடை உள்ள தங்க அம்பாரியில் அம்மனின் சிலை வைக்கப்பட்டு யானைகள் ஊர்வலமாகச் செல்லும்.

அலங்கரிக்கப்பட்ட பிரதான யானையின் மீது சாமுண்டீஸ்வரி அம்மனின் சிலை வைக்கப்படும் தங்க அம்பாரி மரத்தாலான உள் அமைப்பின் மீது 'ஸ்வர்ணகலா நிபுணா' சிங்கண்ணாச்சாரி என்பவரால் 85 கிலோ எடையுள்ள தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டு இந்த அம்பாரி உருவாக்கப்பட்டுள்ளது. இது நுணுக்கமான கலைவேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மன்னராட்சி காலத்தில் மைசூர் மகாராஜாக்கள் இந்த அம்பாரியில் அமர்ந்து ஊர்வலம் வந்தனர். மன்னராட்சி ஒழிக்கப்பட்ட பிறகு, தற்போதைய மரபுப்படி மைசூரின் காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மனின் சிலைக்கு பட்டு ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் அணிவித்து இந்த தங்க அம்பாரியில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இதன் உச்சியில் ஐந்து புனித கலசங்களும், கிரீடம் போன்ற விதானமும் அமைந்துள்ளன. இதன் உள் இருக்கைகள் வெள்ளியால் வடிவமைக்கப்பட்டவை.

இதையும் படியுங்கள்:
மதுரை நகரின் மர்மமான காவலன்: 2000 ஆண்டு பழமையான கூடலழகர் கோவிலின் இரகசியங்கள்!
மைசூர் தசரா - Mysore Dasara 2026

மைசூர் அரண்மனை வளாகத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பன்னிமண்டப மைதானம் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த யானை பவனி நடக்கிறது. ஜம்போ சவாரி ஊர்வலம் பன்னி மண்டபத்தைச் சென்றடைந்த பின்பு அங்கு நடைபெறும் 'பஞ்சின கவயத்து' நிகழ்ச்சியுடன் தசரா விழா நிறைவடைகிறது.

ஜம்போ சவாரி ஊர்வலம்:

நந்தி கொடி பூஜை:

ஊர்வலத்தின் தொடக்கமாக மைசூர் அரண்மனை வளாகத்தில் கர்நாடக முதலமைச்சர் மற்றும் அரச வாரிசுகளால் நந்தி கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. அதன் பின்னர் தங்க அம்பாரியில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு முக்கிய பிரமுகர்கள் மலர் தூவி ஜம்போ சவாரியை முறைப்படி தொடங்கி வைக்கின்றனர்.

தலைமை யானை அபிமன்யு:

இந்த 750 கிலோ எடையுள்ள தங்க அம்பாரியை சுமந்து செல்லும் பொறுப்பு, மிகவும் பலசாலியான மற்றும் பயிற்சி அளிக்கப்பட்ட முன்னணி யானைக்கு வழங்கப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் 'அபிமன்யு' என்ற பலசாலி யானை இந்தத் தங்க அம்பாரியை வெற்றிகரமாக சுமந்து கம்பீரமாக வலம் வருகிறது.

மைசூர் தசரா - Mysore Dasara 2026
மைசூர் தசரா - Mysore Dasara 2026

ஊர்வலப் பாதை:

மைசூர் அரண்மனையின் பலராம வாயிலில் தொடங்கும் இந்த ஊர்வலம் சய்யாஜிராவ் சாலை வழியாக பன்னிமண்டப மைதானம் வரை சுமார் 5 முதல் 5 1/2 கிலோமீட்டர் தூரம் நடைபெறுகிறது. தங்க அம்பாரி சுமந்த யானையைத் தொடர்ந்து, கர்நாடகாவின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைக் குழுக்கள், அலங்கார ஊர்திகள், காவல்துறையின் இசைக் குழுக்கள் மற்றும் பிற அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைப் படைகள் அணிவகுத்து செல்கின்றன.

இந்த பிரம்மாண்டமான ஜம்போ சவாரி பன்னெடுங்காலமாகப் போற்றி பாதுகாக்கப்படும் கர்நாடகாவின் அரசு பாரம்பரியத்தையும், கலாச்சார பெருமையையும் உலகிற்கு பறைசாற்றுகிறது.

மைசூரு அரண்மனை மின்விளக்கு அலங்காரம்:

தசரா விழாவின் 10 நாட்களின் பொழுதும் மைசூரு அரண்மனை சுமார் 1 லட்சம் மின் விளக்குகளால் தினமும் இரவு 7 மணி முதல் 10 மணி வரை ஜொலிக்கும். அரண்மனையின் பாரம்பரிய அழகை காப்பதற்காகவே, அதன் தனித்துவமான தங்க நிற ஒளியை உமிழும் சிறப்பு விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.

பன்னிமண்டபம்:

விஜயதசமி நாளன்று பன்னிமண்டபத்தில் 'பஞ்சின கவயத்து'(Panjina Kavayathu - தீப்பந்த வலம்) நடைபெறும்.

வரலாற்றுப் பின்னணி:

இந்த தசரா கொண்டாட்டம் 15ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசர்களால் தொடங்கப்பட்டது. பின்னர் உடையார் வம்சத்தின் முதலாம் ராஜா உடையார் காலத்தில், 1610 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் முறையாகத் தொடரப்பட்டு, இன்று வரை பாரம்பரியம் மாறாமல் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் சிறப்புகள் மற்றும் ஆன்மீக ரகசியங்கள்!
மைசூர் தசரா - Mysore Dasara 2026
logo
Kalki Online
kalkionline.com