

கேரளா மற்றும் தமிழகத்தின் சில எல்லைப் பகுதிகளில் கும்மட்டிகளி (Kummattikali) என்று அழைக்கப்படும் ஒரு பாரம்பரிய பழங்குடி சார்ந்த முகமூடி நாட்டுப்புற நடனக்கலை வடிவம் ஆகும். கேரளாவின் திருச்சூர், பாலக்காடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் இந்தக் கலை வடிவம் மிகவும் பிரபலமாக உள்ளது. பழங்காலத்தில் பழங்குடி மரபுகளுடனும், இயற்கையுடனும் நெருங்கிய தொடர்புடையதாக இருந்த கும்மட்டிகளி நடனம், இன்று ஒரு முக்கிய கலாச்சார விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
புராணப் பின்னணியும் தோற்றமும்:
திருச்சூரில் உள்ள புகழ்பெற்ற வடக்குநாதன் சிவன் கோவில் புராணக் கதையின்படி, சிவபெருமான் தனது பூதகணங்களை அழைத்து, தற்காலிகமாக பூமிக்கு வரும் மகாபலி மன்னரை வரவேற்பதற்காக ஒரு சிறப்பான நடனத்தை ஆடுமாறு பணிக்க, பூதகணங்கள் ஆடிய நடனமே பின்னாளில் கும்மட்டிகளி என்று மாறியதாக நம்பப்படுகிறது.
இந்த நடனத்தை ஆடுபவர்கள் உடம்பு முழுவதும் புற்களைச் சுற்றிக்கொண்டு, மரத்தால் செய்யப்பட்ட வண்ணமயமான முகமூடிகளை அணிந்திருப்பார்கள். இந்த நடனம் சிவபெருமானின் பூதகணங்களின் நடனத்தைக் குறிப்பதாக கருதப்படுகிறது.
வண்ணமயமான முகமூடிகள்:
கும்மட்டிக்களி நடனத்தின் முக்கிய சிறப்பம்சமே அதன் ஆடைகளும், முகமூடிகளும்தான். கலைஞர்கள் பலா மரம், முள்முருங்கை போன்றவற்றின் மரக்கட்டைகளால் செய்யப்பட்ட, கைவினைத்திறன் மிக்க பெரிய முகமூடிகளை அணிந்து ஆடுவார்கள். இந்த முகமூடிகள் கிருஷ்ணர், சிவன், நாரதர், பத்ரகாளி, அனுமன், தாரிகா மற்றும் சிவ கணங்கள் (பூதகணங்கள்) போன்ற இந்து புராணக் கதாபாத்திரங்களை சித்தரிக்கும் வகையில் பிரகாசமான வண்ணங்களில் வரையப்பட்டிருக்கும். இதில் 'தல்லா' (கிழவி) என்ற முகமூடி முதன்மையானது.
கும்மட்டிகளி நடன ஊர்வலத்தை முன்னின்று வழிநடத்துவது 'தல்லா கும்மாட்டி' அல்லது 'தம்மா' என்ற வயதான பெண்மணி கதாபாத்திரமாகும். பற்கள் இல்லாத வாய், பெரிய காதுகள் கொண்ட இந்த வேடிக்கையான முகமூடி அணிந்த கதாபாத்திரம் கையில் ஒரு நீண்ட தடியுடன் நடனக் குழுவை வழி நடத்தும். இது பிரபஞ்சத்தின் தாயைக் குறிப்பதாக நம்பப்படுகிறது.
புற்களால் ஆன இயற்கை ஆடைகள்:
நடனக் கலைஞர்கள் தங்களின் உடல் முழுவதும் 'கும்மட்டி புல்லு' (ஒரு வகையான மருத்துவப் புல்/ பசும்புல்) மற்றும் காய்ந்த இலைகளைக் கயிறுகளால் பிணைத்து ஆடையாக அணிந்து கொள்கிறார்கள்.
இது பார்ப்பதற்கு பச்சை பசேலென இயற்கையோடு இணைந்த ஒரு தோற்றத்தைத்தரும். இது மனிதர்களுக்கும் இயற்கைக்குமான ஆதி காலத்துப் பிணைப்பை வெளிப்படுத்துகிறது.
ஓணம் பண்டிகை மற்றும் நடனம்:
இக்கலை முதன்மையாக கேரளாவின் அறுவடைத் திருநாளான ஓணம் பண்டிகையின் பொழுது நிகழ்த்தப்படுகிறது. கலைஞர்கள் குழுக்களாக இணைந்து கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று புராணக்கதைகள் மற்றும் பழங்குடி மக்களின் வாய்மொழிக் கதைகளை பாடல்களாகப் பாடி, நடனமாடி மக்களை மகிழ்விப்பார்கள். இந்த நடனக் கலைஞர்கள் வீட்டிற்கு வருவது வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தரும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. அதற்கு பிரதிபலனாக மக்கள் அவர்களுக்கு பரிசுகளையும், தானியங்களையும் வழங்குவார்கள்.
இசைக்கருவி:
இந்த நடனத்திற்கு 'ஓணவில்லு' என்ற தனித்துவமான வில் போன்ற கம்பு மற்றும் மூங்கில் நாண்களால் செய்யப்பட்ட தம்புரா போன்ற இசைக்கருவி பயன்படுத்தப்படுகிறது. கமுகு மரத்தின் பட்டையால் செய்யப்படும் இந்த வில்லின் நாணைக் குச்சியால் தட்டி இசை எழுப்புவார்கள். இதன் தாளத்திற்கு ஏற்பவே கலைஞர்கள் தங்கள் உடல் அசைவுகளை மேற்கொள்கிறார்கள்.
இந்த நடனம் தீமையை அழித்து நன்மை வெல்வதைக் குறிக்கும் ஒரு குறியீட்டு நடனமாகவும், சமூக ஒற்றுமையை வளர்க்கும் ஒரு விழாவாகவும் பார்க்கப்படுகிறது. நன்மைகளையும் செழிப்பையும் வரவேற்கும் ஒரு வழிபாட்டு வடிவமாகக் கருதப்படும் இந்த முகமூடி நடனம் ஓணத்தின் மகிழ்ச்சியைக் கொண்டாட அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து ரசிக்கும் ஒரு மதசார்பற்ற கலையாகத் திகழ்கிறது.
இன்றுவரை கேரளாவின் முக்கிய கலாச்சார அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் இந்தக் கலை வடிவம், பழங்கால பழங்குடி நடனக் கூறுகளையும் பக்தி மற்றும் நகைச்சுவையையும் தன்னுள் கொண்டு தலைமுறை கடந்து வாழ்கிறது.
இந்த அபூர்வக் கலை வடிவத்தின் வரலாற்று நுணுக்கங்களையும் கலாச்சார முக்கியத்துவத்தையும் அறிந்துகொள்வதன் மூலம், தென்னிந்தியப் பழங்குடி மற்றும் ஆன்மீகப் பாரம்பரியத்தைப் பற்றிய ஆழமான புரிதலையும், ஓணம் பண்டிகைக் கொண்டாட்டங்களின் உண்மையான பின்னணியையும் நீங்கள் உணர்வீர்கள்.