

கர்நாடகா மாநிலத்தின் ஷிமோகா மாவட்டத்தில் துங்கா என்ற நதியின் கரைக்கு அருகில் அமைந்துள்ளது மட்டூர் (Mattur) என்ற கிராமம். மற்ற சாதாரண கிராமங்கள் போல் அல்ல மட்டூர். இந்தியாவில் பண்டைய மரபு வழி வந்த வேதங்களும் சாஸ்திரங்களும், பழமை வாய்ந்த சமஸ்கிருத மொழியில் இன்றும் பேசப்பட்டு வரும் ஒரு சில இடங்களுள் மட்டூர் கிராமமும் ஒன்று. இது "சான்ஸ்கிரிட் கிராமா" (Sanskrit Village) என பரவலாக அறியப்படுகிறது. இங்கு வாழும் மக்களுக்கு சமஸ்கிருதம் ஒரு மொழியாக மட்டுன்றி அவர்களின் வாழ்வியலை நடத்திச் செல்லும் வழிகாட்டியாகவும் உள்ளது.
மட்டூர் கிராமத்தின் அடையாளமே அங்கு ஆழமாக வேரூன்றியிருக்கும் மரபு வழி மொழியான சமஸ்கிருதம்தான் என்று கூறலாம். சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் சங்கேதிஸ் என்று கூறப்படும் ஒரு பிராமண சமூகத்தினர் கேரளாவிலிருந்து இடம் பெயர்ந்து மட்டூரில் குடியேறியுள்ளனர். பல நூற்றாண்டு காலமாக, அவர்கள் தம் சாஸ்திர சம்பிரதாயங்களையும், மொழியின் பாரம்பரியத்தையும் போற்றிப் பாதுகாத்து வந்துள்ளனர்.
மட்டூர் கிராமத்தில் பலர் சமஸ்கிருத மொழியின் கூறுகளை தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளுடன் இணைத்து சங்கேதி என்ற பெயரில் வட்டார வழக்கு மொழியாக பேசி வந்தனர்.
1981 ஆம் ஆண்டு சமஸ்கிருத மொழி ஒரு புதிய பாதைக்குள் நுழைந்தது. தன்னார்வலர்கள், 'சமஸ்கிருத பாரதி' என்றதொரு அமைப்பை உருவாக்கி பேச்சு வழக்கில் உள்ள சமஸ்கிருத மொழியை மேம்படுத்தும் நோக்கில் பத்து நாள் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தினர். மட்டூர் கிராமத்தில் நடைபெற்ற இப்பயிலரங்கம் ஒரு திருப்பு முனையாய் அமைந்தது. அப்போதிருந்து மட்டூர் மக்கள் கலப்படமற்ற சமஸ்கிருத மொழியை பேச ஆரம்பித்தனர். இதை அறிந்த பெஷாவர் மடாதிபதியான விஸ்வேஷ தீர்த்த சுவாமிஜி மட்டூரை 'சான்ஸ்கிரிட் வில்லேஜ்' என அறிவித்தார்.
அன்று முதல், சடங்கு ரீதியான மற்றும் அறிவார்ந்த பணிகளில் மட்டுமே பங்கேற்று வந்த சமஸ்கிருத மொழி அந்தக் கிராம மக்களின் தினசரி வாழ்விலும் ஒரு நிலையான இடத்தைப் பெற்றது. வீடுகள், கடைகளில் உள்ள மக்கள் மற்றும் தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் கூட தற்போது சமஸ்கிருதம் பேசுகின்றனர். இது அந்த மொழிக்கான அங்கீகாரம் மட்டுமல்ல. அந்தக் கிராம மக்களின் உயிர், உணர்வு, மூச்சுக் காற்று என அனைத்திலும் கலந்து விட்டதென்று கூறலாம்.
தெருப் பெயர்கள், கோவில்களில் உள்ள அறிவிப்புப் பலகைகள் மற்றும் கோவில் சுற்றுச் சுவர்களில் எழுதப்படும் கிறுக்கலான எழுத்துக்கள் கூட சமஸ்கிருதத்திலேயே உள்ளன.
இந்த அளவுக்கு சமஸ்கிருத மொழி வளர்ச்சி அடைந்ததற்கு முக்கிய காரணம் அங்குள்ள கல்விக்கூடங்களேயாகும். சிறு வயது முதலே மட்டூர் கிராம சிறுவர்களுக்கு சமஸ்கிருதம் பயில தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது. உள்ளூர் பள்ளிகளில் அவர்கள் வேத பாடங்களை இலக்கண சுத்தமுடன் கற்றுக்கொள்ளவும் வழிவகை செய்து தரப்படுகிறது.
பாரம்பரிய வழக்கப்படி வேத மந்திரங்களை சரியான உச்சரிப்புடன் ஓதுவதற்கு சிறுவர்கள் கற்றுக்கொள்ள ப்ரத்யேகமான வேத பாடசாலை ஒன்றும் மட்டூர் கிராமத்தில் உள்ளது. வேத சாஸ்திர படிப்போடு, நவீன கால கல்வி முறையும் இங்கு உள்ளது. சாரத விலாசா ஸ்கூல் என்னும் பள்ளியில், ஸ்லோகம் மற்றும் பழைய கால புத்தகப் படிப்புகளோடு, விஞ்ஞானம் உள்ளிட்ட மற்ற பாடங்களும் கற்றுத்தரப்படுகின்றன. இதனால் மொழியறிவில் தேர்ச்சி பெற்ற திறமைசாலிகளை உருவாக்குவது மட்டுமின்றி தொழில்நுட்ப வல்லுநர்களையும் உருவாக்கி பெருமை கொள்கிறது இந்த கிராமம். பழமை வாய்ந்த சமஸ்கிருத மொழியை காப்பாற்றிக் கொண்டு வந்ததில் சங்கேதி சமூகத்தாரின் அர்ப்பணிப்பு பெரும் பங்காற்றியுள்ளது.
பாட புத்தகங்களில் மட்டுமின்றி, பாட்டு, நடனம் மற்றும் கதை சொல்லுதல் போன்ற பலவகையான கலை சம்பந்தப்பட்ட துறைகளிலும் சமஸ்கிருதத்தின் ஆளுமை இருப்பது குறிப்பிடத் தக்கது. மட்டூர் கிராமம் இம்மொழியை அழிவின் விளிம்பிலிருந்து காப்பாற்றியதுடன் உயிர்ப்புடனும் துடிப்புடனும் நவீன காலத்திற்குப் பொருந்துமாறும் வைத்து சிறப்புப் பெறச் செய்துள்ளது.