கோடிக்கணக்கில் காப்பீடு - பல வண்ண தீம்கள்: மிரள வைக்கும் மும்பை விநாயகர் சதுர்த்தி 2026 ஸ்பெஷல்!

50வது பொன்விழா காணும் சஹ்யாத்ரி மற்றும் இந்தியாவின் பணக்கார கணபதி பந்தல் விபரங்கள்.
விநாயகர் சதுர்த்தி - Ganeshotsav 2026
விநாயகர் சதுர்த்தி - Ganeshotsav 2026Image credit: Gemini
மும்பை மீனலதா

வணக்கம். ஆர். மீனலதாவாகிய அடியேன், என்னைப் பற்றிய சில வரிகளைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். **சிறு வயது முதலேயே, என்னுடன் ஐக்கியமான எழுத்து, நடிப்பு, பேச்சு, பாட்டு, விளையாட்டு, பிறர்க்கு உதவுவது, புது மாதிரியாக யோசித்து ஆர்வத்துடன் செயல்படுவது போன்ற பல செயல்கள், சீனியர் சிட்டிசன் ஆன பிறகும் தொடர்கிறது. (சகலகலாவல்லி என்று அநேகர் என்னைக் குறித்து கூறுவதுண்டு😊) **கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறேன். **தமிழார்வம் கொண்டவள். **அனைத்தும் டிஜிட்டல் மயமாக ஆனபோதிலும், எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, எழுதுவதை அதிகம் விரும்புபவள். **கட்டுரை, நேர்காணல், சிறுகதை, சமையல், மோட்டிவேஷன், நகைச்சுவைக்கதை போன்ற பல்வேறு விஷயங்களைக் குறித்து எழுதி வருகிறேன். **பத்திரிகைகள் அளிக்கும் ஆதரவு, புது விஷயம் எழுத அளிக்கும் தூண்டுதல், அவ்வப்போது அவர்கள் கொடுக்கும் அருமையான டிப்ஸ் ஆகியவைகள் எனது எழுத்தினை மேன்மேலும் மெருகூட்ட மிகவும் உதவியாக உள்ளன.

Updated on

மும்பையில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாக் கொண்டாட்டம், உலமெங்கும் பேசப்படும் நிகழ்வாகும். பல்வேறு அருமையான கருத்துக்களைக்கொண்ட விதவிதமான விநாயகர்கள் அநேக இடங்களில் வைக்கப்பட்டு, கலை நிகழ்வுகள் விமரிசையாக நடத்தப்படுவதே இதன் காரணமெனலாம்.

மும்பையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங் களுக்கான பந்தல் தயாரிப்புகளும் ஊர்வலங்களும் சூப்பரோ சூப்பராக இருக்கும். பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை.

மும்பை நகரம் முழுவதும் உள்ள பல்வேறு கணேசோத்சவ மண்டல்கள் மற்றும் பக்தர்கள், விநாயகர் சிலைகளை வீடுகள் மற்றும் பந்தல்களுக்கு கொண்டு வர ஆரம்பித்துவிட்டனர். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 25, 2026 வரை நடைபெற உள்ளது.

மும்பை சா கணபதி பப்பா சிலைகள் வைக்கப்பட்டுள்ள சில முக்கியமான இடங்களுக்கு ஊர்வலம் செல்வோமா..!

சஹ்யாத்ரி க்ரீடா மண்டல் சா ராஜா

மும்பை செம்பூர் திலக் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சஹ்யாத்ரி க்ரீடா மண்டல், இந்த 2026 ஆம் ஆண்டு தனது 50-வது பொன்விழா ஆண்டை கொண்டாடுகிறது.

மும்பையின் மிகச்சிறந்த மற்றும் தனித்துவமான தீமிற்கும், அலங்காரங்களுக்கும் பெயர் பெற்ற இந்த கணபதி பந்தலின் 2026 ஆம் ஆண்டு கருப்பொருள் சூப்பர் ஹீரோக்கள்.

இந்த 50வது ஆண்டை முன்னிட்டு, பந்தலில் முதலாவதாக இந்திய சூப்பர் ஹீரோவான 'கிரிஷ்' அவதாரத்தில் பிரம்மாண்ட வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும்.

செப்டம்பர் 14, 2026 முதல் செப்டம்பர் 25, 2026 வரை விழாக் கொண்டாட்டம் நடைபெறும்.

லால்பாக் சா ராஜா

லால்பாக் சா ராஜா என்றாலே ஒரு கம்பீரம் கண்ணெதிரே தோன்றும். மும்பையின் மிகவும் பிரபலமான மற்றும் பக்தர்களின் அநேக வேண்டுதல்களை நிறைவேற்றும் விநாயகர் என்று போற்றப்படும் பந்தல், லால்பாக், திலக் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கில் இன்ஷூரன்ஸ் செய்யப்பட்டுள்ள ராஜா. தங்கமும், வைரமும், வைடூரியங்களும் அணிந்து ஜொலிக்கும் ராஜாதி ராஜா.

அந்தேரி சா ராஜா

கடந்த 6 சதாப்தங்களுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட பந்தல் அந்தேரி சா ராஜா. மற்ற பந்தல்களைப்போல அனந்த சதுர்தசி அன்று விசர்ஜனம் செய்யாமல், 'சங்கஷ்டி சதுர்த்தி' அன்று தாமதமாகவே இதன் விசர்ஜன ஊர்வலம் நடத்தப்படுகிறது. இவர், மும்பை அந்தேரி மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ராஜா.

கிர்காவ் சா ராஜா

இந்த ஆண்டு தனது 99-வது அடியை எடுத்து வைக்கிறார் கிர்காவ் சா ராஜா. சுமார் 24 அடி உயரமும் 3.5 டன் எடையும் கொண்ட, மும்பையிலேயே மிக உயரமான சுற்றுச்சூழல் நட்புடைய களிமண்ணால் உருவான விநாயகர் சிலையாகும். இவர் அமைக்கப்பட்டுள்ள இடம் - நிகாத்வாரி லேன், கிர்காவ்.

விநாயகர் சதுர்த்தி - Ganeshotsav 2026
விநாயகர் சதுர்த்தி - Ganeshotsav 2026

கோடச்சிவாடி சா ராஜா

கோடச்சிவாடி சா விநாயகர், இவ்வருடம், தனது 100-வது ஆண்டு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறார். காகிதக் கூழ் கொண்டு தனித்துவமாக. 10 அடி உயரத்தில் செய்யப்பட்டுள்ள சிலையின் அமைவிடம் வி.பி ரோடு, கிர்காவ். மும்பையின் பழமையான போர்த்துகீசிய பாணி வீடுகள் மற்றும் மரபுகள் நிறைந்த ஒரு பாரம்பரிய கிராமப்புறப் பகுதியாகும் கோடச்சிவாடி.

கேஷவ்ஜி நாயக் சால்

திரு லோகமான்ய திலகரால் தொடங்கப்பட்ட மும்பையின் மிக முதல் பொது கணபதி பந்தலாகிய கேஷவ்ஜி நாயக் சால் விநாயகர், வரலாற்றுச் சிறப்புடையதாகும். 133 ஆண்டுகளாகியும், இன்றும் பாரம்பரியமான முறையில், இரண்டு கட்டிடங்களுக்கு இடைப்பட்ட சிறிய திறந்தவெளியில் பந்தல் போட்டு, 2 அடி உயரமுள்ள களிமண்ணால் உருவாக்கப்பட்ட கணபதி சிலை வைக்கப்பட்டு, அதிக ஆடம்பரமின்றி கொண்டாடப்படுகிறது.

விஸ்வச்சா ராஜா (GSB சேவா மண்டல்)

செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 18 வரை மட்டும் கொண்டாடப்படும் இந்த சேவா மண்டல் கணபதி வீற்றிருக்கும் இடம், ஸ்ரீ சுக்ரீந்திர நகர், கிங்ஸ் சர்க்கிள், மாட்டுங்கா, மும்பை.

இங்கிருக்கும் விநாயகர் சிலை 66 கிலோ தங்கம் மற்றும் 335 கிலோவுக்கு மேற்பட்ட வெள்ளி நகைகளால் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகவும் பணக்கார கணபதி மண்டலானதால், பாதுகாப்புக்காக ரூ. 703 கோடிக்கு மேல் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

உபரி தகவல்கள்:

செப்டம்பர் 14, 2026 ஆம் தேதி கணபதி பப்பாவின் ஸ்தாபனம் மற்றும் சதுர்த்தி பூஜை செய்யப்பட்டு, செப்டம்பர் 25, 2026 அனந்த சதுர்தசியாகிய வெள்ளிக்கிழமையன்று விசர்ஜனம் செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மதுரா கிருஷ்ண ஜென்மபூமி: 5253-வது ஜெயந்தி விழா கோலாகலம்!
விநாயகர் சதுர்த்தி - Ganeshotsav 2026

பக்தர்கள், அவரவர்கள் சௌகரியப்படி, கணபதி பப்பாவை வீடு மற்றும் பந்தலுக்கு ராஜ மரியாதையுடன் அழைத்து வந்து 1 1/2 நாள், 3 நாள், 5 நாள், 7 நாள் 11 ஆவது நாள் என பூஜை செய்து, வருகின்ற அன்பர்களுக்கு பிரசாதம் மற்றும் விருந்தோம்பல் அளித்து அன்புடன் வழியனுப்பி வைக்கும் அழகே அழகு.

கணபதி பப்பா ஆலா ரே!

கணபதி பப்பா மோர்யா!

மங்கள் மூர்த்தி மோர்யா

என ஆடிப்பாடி வரவேற்று, கொண்டாடிய பிறகு

கணபதி பப்பாவை வழி அனுப்புகையில்,

கணபதி பப்பா மோர்யா!

புட்சா வர்ஷ லௌகர் யா!

எனக் கூறுவது வழக்கம்.

இதையும் படியுங்கள்:
பிள்ளையாரை எங்கு தொடங்கினாலும் ஏன் முதலில் வணங்க வேண்டும்? புராண ரகசியங்கள் இதோ!
விநாயகர் சதுர்த்தி - Ganeshotsav 2026
logo
Kalki Online
kalkionline.com