புராணங்கள், ஏழு வகைப் பிறப்புகள் எவையெவை என்பன பற்றியும், அவை மனிதராகப் பிறந்தால் அவர்களின் குண நலன்கள் எப்படி இருக்கும் என்றும் ‘பரிபூரணம் 1200’ல் அகத்தியர் கூறும் தகவல்களைக் காண்போம். உயிர்களின் நல்வினை, தீவினை முடியும் வரை அவர்களின் வினைக்கேற்ப தேவர்களாக, மனிதர்களாக, மிருகங்களாக, பறவைகளாக, நீரில் வாழ்வனவாக, ஊர்வனவாக, தாவரங்களாகப் பிறப்பு எடுப்பார்கள்.
மேலே கூறிய ஒழுங்கின்படிதான் உயிர்கள் பிறப்பு எடுப்பார்கள் என்று கூற முடியாது. அவர்களின் வினைக்கேற்ப எந்த ஒழுங்கு முறையிலும் உயிர்கள் பிறப்பு எடுக்கும்.
தேவர்களும் மனிதராவர், மனிதர்களும் மனிதராவர், மிருகங்களும் மனிதராவர், பறவைகளும் மனிதராவர், நீர் வாழ்வனவும் மனிதராவர், ஊர்வனவும் மனிதராவர், தாவரங்களும் மனிதராவர். இந்த மனிதப் பிறப்பிற்கு முன்னர் எடுத்த பிறப்பிற்கேற்ப மனிதர்களின் குண நலன்கள் மாறுபடும்.
தேவர்கள் மனிதராகப் பிறந்தால் எப்போதும் சிவபெருமானையும் சக்தியையும் வணங்குவார்கள். தான, தர்மங்கள் செய்வார்கள். குருவைப் போற்றுவார்கள்.
மனிதர்கள் மனிதராகப் பிறந்தால் தவம் செய்வார்கள். தான் என்ற அகங்காரம் இல்லாமல் நல்லோரிடமும் பெரியோரிடமும் அன்பாக, பண்பாக நடப்பார்கள். அறுசுவை உணவுகளை வழங்குவார்கள்.
மிருகங்கள் மனிதராகப் பிறந்தால் முரண்பட்டுச் சண்டை செய்வார்கள். தான தர்மம் செய்யாமல் பேய் போல் திரிந்து அலைவார்கள்.
பறவைகள் மனிதராகப் பிறந்தால் பசிக்கிறது என்று கேட்டாலும் உணவு கொடுக்க மாட்டார்கள். நல்ல சொற்களைக் கேட்க மாட்டார்கள். நன்மை செய்ய மாட்டார்கள். எதற்கும் வெட்கப்பட மாட்டார்கள்.
நீரில் வாழ்வன மனிதராகப் பிறந்தால் தெரு தெருவாய் சுற்றித் திரிவார்கள். சண்டை செய்வார்கள். கொலை, களவு, சதி செய்வார்கள். குருவை, பெரியோரை மதிக்க மாட்டார்கள்.
ஊர்வன மனிதராகப் பிறந்தால் கடவுளை நம்ப மாட்டார்கள். புத்தி கெட்டு உழன்று பரிதவித்துத் திரிவார்கள். நல்ல வாசகங்களைக் கேட்கவோ பேசவோ மாட்டார்கள். நன்மை செய்ய மாட்டார்கள்.
தாவரங்கள் மனிதராகப் பிறந்தால் இன்பமானவற்றை செவி கொடுத்துக் கேட்க மாட்டார்கள். இன்ப. துன்பங்களை அறிய மாட்டார்கள். சிவபெருமானையும் சக்தியையும் வழிபட மாட்டார்கள். வேடமிட்டுப் பொய் பேசுவார்கள்.