காட்சிப் பொருளாகிவிட்ட நகரா தோல் இசைக்கருவி - இது என்னது?

Nagara Leather Instrument
Nagara Leather Instrument
Published on

நகரா என்பது ஒரு தோல் இசைக்கருவியாகும். மிகப் பெரிய வடிவம் கொண்ட இந்த இசைக்கருவி, பெரும்பாலும் கோவில்களில் நுழைவாயில் அருகே இடம் பெற்றிருக்கும். நித்ய பூசை நடைபெறும் காலங்கள், சிறப்பு அபிசேக ஆராதனைகள், பண்டிகைகள், கோவில் விழாக்கள், சாமி அல்லது அம்மன் ஊர்வலம் போன்ற முக்கிய நிகழ்வுகளின் போது நகரா என்ற இந்த இசைக்கருவி இசைக்கப்படுகிறது. பெரும்பாலும் கோவில் ஊழியர்களே இக்கருவியினை இசைக்கிறார்கள். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் போன்ற பெருங்கோவில்களில் காளை மாடு அல்லது யானையின் முதுகில் பொருத்தப்பட்டு தேரோட்டம் போன்ற நிகழ்வுகளில் இசைக்கப்படுகிறது.

நகரா இசைக்கருவியின் அடிப்பாகம் தாமிரம் (செம்பு) அல்லது பித்தளை போன்ற உலோகங்களில் செய்யப்பட்டு ஒரு பெரிய அரைவட்டச் சட்டி வடிவில் தோற்றமளிக்கும். மேல் பாகத்தைத் தோல் கொண்டு இழுத்துக் கட்டியிருப்பார்கள். மேலும், தோல் தளர்வுறாமல் இருக்க ஒரு இரும்பு சட்டத்தால் இறுக்கப்பட்டிருக்கும். கோவில் ஊழியர்கள் வளைந்த குச்சிகளைப் பயன்படுத்தி, அதனை அடித்து இசைப்பார்கள். கோவில்களில் நடைபெறும் நிகழ்வுகள் தொலைதூரத்தில் இருக்கும் மக்களுக்கு நகரா இசைப்பதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ள பையனூர் புனித மோதிரம்!
Nagara Leather Instrument

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கிழக்கு சன்னதி நேர் எதிரில் அமைந்த சிறிய மண்டபத்தில், நாள்தோறும் அதிகாலை 4.30 மணி முதல் ஐந்து மணி வரையும், மாலை 4.30 மணி முதல் ஐந்து மணி வரையும், மீனாட்சியம்மன் பூஜையின் போது இம்மண்டபத்தில் உள்ள நகரா முரசு கொட்டப்படும். நகரா முரசு அடிக்கப் பயன்படுத்தும் மண்டபத்திற்கு நகரா மண்டபம் என்று பெயர். மதுரை நாயக்க மன்னர் அச்சுதராயர் காலத்தில் இந்த நகரா மண்டபம் கட்டப்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான இம்மண்டபத்தில் தற்போது சில வணிகக் கடைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
அப்படி என்ன இருக்கிறது நோபல் பரிசு பதக்கங்களில்?
Nagara Leather Instrument

மதுரை மீனாட்சியம்மன் கோயில், இராமநாதபுரம் இராமநாதசுவாமி கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் இசைக்கப்பட்டு வந்த இக்கருவியின் பயன்பாடு வெகுவாகக் குறைந்து போயிருக்கிறது. இக்கருவியினை இசைக்கும் தகுதியுடைய கலைஞர்களின்றி பல கோயில்களில் இது காட்சிப் பொருளாகிவிட்டது என்பது வருத்தத்திற்குரியதே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com