கின்னஸ் சாதனை படைத்த இமாச்சலப் பிரதேசத்தின் 'நாட்டி' நடனம்: ஏன் இவ்வளவு சிறப்பு?

குல்லு பள்ளத்தாக்கின் கலாச்சாரப் பெருமையும், பெண் குழந்தை விழிப்புணர்வும் இணைந்த பிரம்மாண்ட நாட்டி நடனத்தின் முழு விவரங்கள்!
நாட்டி நடனம் - Kullu Dussehra
நாட்டி நடனம் - Kullu Dussehra
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

நாட்டி (Nati) என்பது இமாச்சலப் பிரதேசத்தின் குறிப்பாக குல்லு பள்ளத்தாக்கில் (Kullu Valley) மிகவும் பிரபலமாக ஆடப்படும் புகழ்பெற்ற ஒரு பாரம்பரிய நாட்டுப்புற நடனம் ஆகும். இது அந்த பிராந்தியத்தின் கலாச்சாரம், ஒற்றுமை, ஆன்மீகம் மற்றும் திருவிழாக் கொண்டாட்டங்களின் முக்கிய அடையாளமாக விளங்குகிறது.

நாட்டி நடனம் (Nati Dance):

பின்னணியும் முக்கியத்துவமும்:

இந்த நடனம் இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு பள்ளத்தாக்கில் தோன்றியதாக கருதப்படுகிறது. இது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவராலும் குழுவாக ஆடப்படும் ஒரு அழகான நடனம் ஆகும். இந்த நடனம் முதன்மையாக அறுவடைத் திருவிழாக்கள், திருமணங்கள், உள்ளூர் சந்தைகள் மற்றும் உலகப் புகழ்பெற்ற குல்லு தசரா திருவிழாவின் போது என மகிழ்ச்சியான தருணங்களில் ஆடப்படுகிறது.

உள்ளூர் கிராமிய மரபுகளின்படி, இந்நடனம் கிருஷ்ணர் மற்றும் கோபியர்களின் 'ராஸ் லீலா' கதைகளுடனும், இமயமலைப் பகுதி இந்து தெய்வங்களுக்கு நன்றி செலுத்தும் வழிபாட்டு முறையுடனும் தொடர்புடையது. உள்ளூர் தெய்வங்களை (தேவதாக்கள்) வரவேற்று கௌரவிக்கும் ஒரு வழிபாட்டு முறையாகவும் கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
கர்பா VS தாண்டியா: நவராத்திரி நடனங்களின் உண்மையான வேறுபாடு தெரியுமா?
நாட்டி நடனம் - Kullu Dussehra

நடன அமைப்பு:

இமாச்சலப் பிரதேசத்தின் பாரம்பரிய நாட்டுப்புற நடனமான 'நாட்டி' (Nati Dance) நடனத்தை ஆயிரக் கணக்கான கலைஞர்கள் பாரம்பரிய உடைகளுடன் இங்கு ஆடுவார்கள். ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் கைகளை கோர்த்துக்கொண்டு அல்லது இடுப்பை பிடித்தபடி வட்டமாகவோ அல்லது அரை வட்ட வடிவிலோ இந்த நடனத்தை ஆடுவார்கள்.

தொடக்கத்தில் மிகவும் மெதுவாகவும் நளினமாகவும் தொடங்கி, பின்னணி இசைக்கு ஏற்ப நடனத்தின் வேகம் படிப்படியாக அதிகரித்து விறுவிறுப்பான நிலையை அடையும். சிக்கலான பாத அசைவுகளும் கை கொட்டல்களும் இதன் சிறப்பம்சமாகும். நாட்டுப்புற வாத்தியங்களின் அதிரடி தாளங்களுக்கு ஏற்ப நடன கலைஞர்கள் தங்கள் காலடிகளை ஒருங்கிணைத்து ஆடுவார்கள்.

இசைக்கருவிகள்:

இந்நடனம் தோல் (Dhol), நகாரா (Nagara), ஷெனாய், தமவ் (Damau) மற்றும் கர்ணல் (karnal) ஆகிய பாரம்பரிய பஹாரி இசைக் கருவிகளின் பின்னணி இசைக்கு ஏற்ப இந்த நடனம் ஆடப்படுகிறது.

பாரம்பரிய ஆடைகள்:

நடனக் கலைஞர்கள் குல்லு பள்ளத்தாக்கின் பிரத்யேக பாரம்பரிய உடைகளை அணிகின்றனர். பெண்கள் தங்களுக்கு மேல் 'பட்டூ' (Pattu) எனப்படும் எம்ராய்டரி செய்யப்பட்ட பெரிய கம்பளி ஆடையை வெள்ளி சங்கிலிகளால் பிணைத்து அணிவார்கள். தலையை 'தத்து'(Dhatu) என்ற துணியால் மூடி, கைகளால் செய்யப்பட்ட 'புல்லாஸ்' (Pullas) என்ற காலணிகளை அணிவார்கள்.

நாட்டி நடனம் - Kullu Dussehra
நாட்டி நடனம் - Kullu Dussehra

மேலும், பாரம்பரிய வெள்ளி மற்றும் தங்க நகைகளை அணிகின்றனர். ஆண்கள் 'சோலா' எனப்படும் மடிப்புகள் கொண்ட நீண்ட கம்பளி அங்கியை இடுப்பில் துணியால் (Dora) கட்டிக்கொண்டு, சுதான் (Suthan) என்ற இறுக்கமான பேண்டை அணிவார்கள். தலையில் வண்ணமயமான நூல்களால் அலங்கரிக்கப்பட்ட இமாச்சலி தொப்பியை அணிந்து கொண்டு ஆடுவார்கள். பாரம்பரிய கம்பளி ஆடைகளை அணிந்துகொண்டு மக்கள் இந்த நடனத்தை ஆடுவது பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

கின்னஸ் சாதனை:

இந்த நடனம் 2016ல் கின்னஸ் சாதனையிலும் இடம்பெற்றுள்ளது. 26 அக்டோபர் 2015 அன்று இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு நகரில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சர்வதேச தசரா விழாவின் போது இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.

பாரம்பரிய உடைகளை அணிந்த 9,892 நடனக் கலைஞர்கள், பெரும்பாலும் பெண்கள் இந்த கூட்டு நடனத்தில் ஒரே நேரத்தில் பங்கேற்றனர். இது உலகின் மிகப்பெரிய தன்னார்வ நாட்டுப்புற நடனமாக கின்னஸ் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த பிரம்மாண்ட நடன நிகழ்வு "குல்லுவின் பெருமை" (Pride of Kullu) மற்றும் "பெண் குழந்தைகளைக் காப்போம்" என்ற விழிப்புணர்வு செய்தியை உலகிற்கு பறைசாற்றுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நடனத்தை நேரில் காண ஆசைப்பட்டால் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் சம்பா பகுதியில் நடைபெறும் மிஞ்சார் திருவிழாவின் (Minjar Fair) போது காணலாம். அத்துடன் அக்டோபர் மாதத்தில் இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு பள்ளத்தாக்கில் உள்ள தல்பூர் மைதானத்தில் ஒரு வாரம் முழுவதும் நடைபெறும் சமயத்தில் காணலாம்.

இதையும் படியுங்கள்:
உலகமே ஒரு நாடகம்: பாரம்பரிய தமிழ் நாடகங்களின் சுவாரஸ்யமான பக்கங்கள்.
நாட்டி நடனம் - Kullu Dussehra
logo
Kalki Online
kalkionline.com