

நவராத்திரி என்றாலே வண்ணமயமான கொலு படிகள், அழகிய தெய்வத் திருவுருவங்கள், வீடு தேடிவரும் விருந்தினர்கள், இனிய சுண்டல் வாசனை எனப் பல காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. ஆனால், படிகளில் அணிவகுத்திருக்கும் பொம்மைகள் வெறும் அலங்காரப் பொருட்கள் மட்டுமல்ல; அவை நம் பண்பாடு, குடும்ப நினைவுகள், மனித உறவுகள், வாழ்க்கைப் பாடங்கள் ஆகியவற்றை அமைதியாகச் சொல்லும் சிறிய ஆசிரியர்கள்.
பொம்மைகளில் பொதிந்திருக்கும் பாரம்பரியம்!
கொலுவில் கடவுளர், முனிவர்கள், அரசர்கள், கிராமிய மக்கள், விலங்குகள், பறவைகள் எனப் பல உருவங்கள் இடம்பெறுகின்றன. புராணக் கதைகளை நினைவூட்டும் பொம்மைகளுடன், அன்றாட வாழ்க்கையைச் சித்தரிக்கும் சிறிய கடைகள், திருமணக் காட்சிகள், விவசாயம் போன்ற அமைப்புகளும் இடம் பெறுகின்றன. இவை வழியாக நம் முன்னோரின் வாழ்க்கை முறையையும் தொழில்களையும் குழந்தைகள் அறிந்துகொள்ளலாம். ஒரு சிறிய பொம்மை கூட வரலாற்றையும் பண்பாட்டையும் அறிமுகப்படுத்தும் காட்சிப் பாடமாக மாறுகிறது.
தலைமுறைகளை இணைக்கும் பொம்மைகள்!
பல வீடுகளில் பாட்டி காலத்திலிருந்து பாதுகாக்கப்படும் மரப்பாச்சி பொம்மைகள் அல்லது பழைய கொலு பொம்மைகள் இருக்கும். அவற்றை ஆண்டுதோறும் பெட்டியிலிருந்து எடுத்து, சுத்தம் செய்து, அலங்கரித்துப் படிகளில் வைப்பது ஒரு குடும்ப நினைவுச் சடங்காகவே மாறுகிறது. எந்தப் பொம்மை யாரிடம் இருந்து வந்தது, அதை வாங்கிய இடம் எது, எந்த ஆண்டில் வாங்கப்பட்டது என்று பகிரப்படும் கதைகள் குடும்ப வரலாற்றைப் பாதுகாக்கின்றன. புதிதாக வாங்கும் பொம்மைகள் இந்த நினைவுச் செல்வத்தில் மேலும் ஒரு பக்கத்தைச் சேர்க்கின்றன.
கைவினைக் கலைஞர்களின் உழைப்பு!
களிமண், மரம், காகிதக்கூழ் போன்ற பொருட்களால் பொம்மைகளை உருவாக்கும் கலைஞர்களின் பொறுமையும் திறமையும் ஒவ்வொரு உருவத்திலும் தெரிகிறது. வடிவமைத்தல், உலர்த்துதல், வண்ணம் தீட்டுதல் எனப் பல கட்ட உழைப்புக்குப் பிறகே ஒரு பொம்மை நம் வீட்டு கொலுவை அடைகிறது. உள்ளூர் கலைஞர்களிடம் பொம்மைகள் வாங்குவது பாரம்பரியக் கைவினைக்கும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் ஆதரவாக அமையும்.
பொம்மைகளின் தனித்துவம்!
தஞ்சாவூரின் தலையாட்டிப் பொம்மை சிறிய அசைவிலேயே மீண்டும் நிமிர்ந்து நிற்கும் தன்மையால் வாழ்க்கையில் தளர்ந்தாலும் மீண்டு எழவேண்டும் என்ற நினைவூட்டலாகப் பார்க்கப்படுகிறது. மரப்பாச்சி பொம்மைகள் பல குடும்பங்களில் தலைமுறை மரபின் அடையாளமாகத் திகழ்கின்றன. சிலர் கோயில் சிற்பங்கள், பாரம்பரிய இசைக் கலைஞர்கள், கிராமியத் தொழில்கள் ஆகியவற்றைச் சித்தரிக்கும் பொம்மைகளையும் சேர்க்கிறார்கள்.
இவ்வாறு ஒவ்வொரு வீட்டுக் கொலுவும் அந்தக் குடும்பத்தின் ரசனை, நினைவுகள், மதிப்புகள் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் தனித்துவமான காட்சியாகிறது. பொம்மையை வாங்கும்போது அதன் பின்னணியையும் குழந்தைகளுக்கு விளக்கலாம்.
குழந்தைகளுக்கான வாழ்க்கைப் பாடங்கள்!
கொலு அமைப்பதில் குழந்தைகளையும் ஈடுபடுத்தலாம். பொம்மைகளை வரிசைப்படுத்துதல், கதைகளைச் சொல்லுதல், இயற்கை மற்றும் தொழில்களை அறிதல் போன்ற செயல்கள் அவர்களின் கற்பனைத் திறனையும் உரையாடல் திறனையும் வளர்க்க உதவும். விருந்தினர்களை வரவேற்பது, பகிர்ந்து கொள்வது, பெரியவர்களை மதிப்பது போன்ற பண்புகளையும் அவர்கள் இயல்பாகக் கற்றுக்கொள்கிறார்கள். மேலும், பயன்படுத்தக்கூடிய பழைய பொம்மைகளைப் பாதுகாத்து மீண்டும் பயன்படுத்துவது வீணாக்கத்தைக் குறைக்கும் நல்ல பழக்கத்தையும் வளர்க்கிறது.
கொலு சொல்லும் சமூகச் செய்தியும் சுற்றுச்சூழல் பார்வையும்!
கொலுவில் இடம்பெறும் பொம்மைகள் சமத்துவம், ஒற்றுமை, உழைப்பின் மேன்மை, போன்ற பல செய்திகளை உணர்த்துகிறது.. அரசர் முதல் சாதாரண குடிமகன் வரை பல்வேறு உருவங்கள் ஒரே படியில் இடம் பெறுவது ஒவ்வொருவருக்கும் சமூகத்தில் தனித்துவமான பங்கு உண்டு என்பதை நினைவூட்டுகிறது.
விவசாயி, குயவர், நெசவாளர், இசைக்கலைஞர் போன்றோரின் உருவங்களை வைப்பதன் மூலம் நம் வாழ்க்கைக்கு அடிப்படையாக விளங்கும் பல தொழில்களின் மதிப்பை உணர்த்தலாம்.
இன்றைய காலத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் கொலு அமைப்பதும் முக்கியமானது. புதிய பொம்மைகளை ஒவ்வொரு ஆண்டும் வாங்குவதற்குப் பதிலாக வீட்டில் இருக்கும் பொம்மைகளைப் பழுது பார்த்து மீண்டும் பயன்படுத்தலாம்.
காகிதம், அட்டைப்பெட்டி போன்றவற்றைக்கொண்டு மலை, குளம், தோட்டம், கிராமம் போன்ற காட்சிகளை உருவாக்கலாம். இதனால் குழந்தைகளுக்கு மறுசுழற்சியின் அவசியத்தையும் இயற்கையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பையும் கற்றுக்கொடுக்க முடியும்.
பாரம்பரியத்தையும் புதுமையையும் இணைக்கும் இத்தகைய முயற்சிகள் கொலுவை அழகான கொண்டாட்டமாக மட்டும் அல்லாமல் பயனுள்ள வாழ்க்கைப் பாடமாகவும் மாற்றுகின்றன.
கொலுவில் மலரும் கலை உணர்வு!
கொலு படிகளை அழகாக அமைப்பதில் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து செயல்படுவது படைப்பாற்றலையும் ஒத்துழைப்பையும் வளர்க்கிறது.. வண்ணக் காகிதங்கள், சிறிய விளக்குகள், இயற்கை பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு அலங்கரிப்பது குழந்தைகளின் கற்பனைத் திறனை தூண்டுகிறது. ஒவ்வொரு ஆண்டும் புதுமையான கருப்பொருளில் கொலு அமைப்பது பாரம்பரியத்தைப் பாதுகாப்பதுடன் புதிய சிந்தனைகளுக்கும் வழி வகுக்கிறது.
கொலு என்பது ஒன்பது நாட்களுக்கான அலங்காரம் மட்டுமல்ல; அது நம் பண்பாட்டை நினைவூட்டும் அருங்காட்சியகம், குடும்ப நினைவுகளைப் பாதுகாக்கும் பெட்டகம், குழந்தைகளுக்கான திறந்தவெளிப் பள்ளி. ஒவ்வொரு பொம்மையையும் வெறும் பொருளாகப் பார்க்காமல், அதன் பின்னால் இருக்கும் கதையையும் உழைப்பையும் உணர்ந்தால் நவராத்திரியின் மகிழ்ச்சி இன்னும் ஆழமாகும். இந்தக் கொலு மரபை அடுத்த தலைமுறைக்கும் அன்போடு கொண்டு செல்வதே அதன் உண்மையான சிறப்பு.