300 ஆண்டுகளாக அணையாத அடுப்பு: உலகின் பழமையான உணவகத்தின் மர்மம்!

ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் உள்ள காசா போட்டின் உணவகத்தின் வியக்க வைக்கும் வரலாறு!
பழமையான உணவகம் - Oldest restaurant
பழமையான உணவகம் - Oldest restaurant
கலைமதி சிவகுரு

கலைமதி சிவகுரு, 1983-ல் நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் பட்டம் பெற்றவர். இவரது படைப்புகள் மங்கையர் மலர், தேவதை, தினத்தந்தி குடும்ப மலர் இதழ்களில் வெளியாகிப் பரிசுகள் பெற்றுள்ளன. தற்போது கல்கி குழுமத்தில் எழுதுகிறார். சமையல், ஆன்மிக வாசிப்பு, தையல் கலையில் ஆர்வம் கொண்டவர்.

Updated on: 

ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் உள்ள காலி டி குச்சில்லெரோஸ் (calle de Cuchilleros – எண் 17) தெருவில் அமைந்துள்ள இந்த பழமையான உணவகம் உள்ளூர் மக்களாலும், சுற்றுலாப் பயணிகளாலும் காசா கோட்டின் (Casa Botin) என்றே அன்போடு அழைக்கப்படுகிறது.

இதன் அதிகாரப்பூர்வ பெயர் சோப்ரினோ டி போட்டின் (Sobrino de Botin) என்பதாகும். இந்தப் புகழ்பெற்ற உணவகத்தைப் பற்றிய மேலும் சில சுவாரஸ்யமான தகவல்கள் இங்கு பார்க்கலாம்.

1725-ஆம் ஆண்டு பிரெஞ்சு சமையல் கலைஞரான ஜீன் போட்டின் (Jean Botín) மற்றும் அவரது மனைவி இணைந்து இந்த உணவகத்தைத் தொடங்கினர். அவர்களுக்கு வாரிசு இல்லாததால், அவர்களது மருமகன் கான்டிடோ ரெமிஸ் (Candido Remis) இதைப் பொறுப்பேற்று நடத்தினார்.

ஸ்பானிஷ் மொழியில் ‘சோப்ரினோ’ (Sobrino) என்றால் ‘மருமகன்’ என்று பொருள்; அதனாலேயே ‘போட்டினின் மருமகன்’ என்ற பொருளில் இதற்குப் பெயர் சூட்டப்பட்டது.

இந்த உணவகம் அமைந்துள்ள காலி டி குச்சில்லெரோஸ் தெருவுக்கு ஒரு வரலாற்றுப் பின்னணி உண்டு. பழங்காலத்தில் கத்திகள் தயாரிக்கும் பட்டறைகள் (Cuchilleros என்றால் கத்தி செய்பவர்கள்) இந்தத் தெருவில் அதிகம் இருந்ததால் இப்பெயர் வந்தது. புகழ்பெற்ற ‘பிளாசா மேயர்’ (Plaza Mayor) சதுக்கத்திற்கு மிக அருகில் இது அமைந்துள்ளது.

இந்த உணவகம் இயங்கும் கட்டிடம் 1590- ஆம் ஆண்டில் கட்டப்பட்டது ஆகும். நான்கு அடுக்குகளைக் கொண்ட இந்த உணவகத்தின் தரைத்தளத்திற்குக் கீழே 16- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செங்கல் வளைவுகள் கொண்ட நிலவறை உள்ளது. இன்று அந்த நிலவறையும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்தும் இடமாக மாற்றப்பட்டு உள்ளது.

பழமையான உணவகம் - Oldest restaurant
பழமையான உணவகம் - Oldest restaurant

உணவகத்தின் சுவர்கள் கையால் வண்ணம் தீட்டப்பட்ட பாரம்பரிய ஸ்பானிஷ் செராமிக் ஓடுகளாலும் (Ceramic tiles), பழங்கால ஓவியங்களாலும், பழமையான மரப் படிக் கட்டுகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தளமும் அந்தக் காலத்து ஸ்பானிஷ் விருந்தினர் மாளிகையின் உணர்வைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
யுனெஸ்கோ பட்டியலில் செஞ்சிக் கோட்டை... 'கிழக்கின் ட்ராய்' என அழைக்கப்படுவது ஏன்?
பழமையான உணவகம் - Oldest restaurant

ஆரம்பக் காலங்களில், உணவகத்திற்குத் தேவையான ஒயின் பீப்பாய்கள் (Wine barrels) மற்றும் உணவுப் பொருட்களைக் குளிர்ச்சியாகப் பாதுகாத்து வைக்கும் கிடங்காகவே இந்த நிலவறை பயன்படுத்தப்பட்டது. நிலத்தடியில் இருப்பதால், கோடைக்காலத்திலும் இங்கு இயற்கையாகவே இதமான குளிர்ச்சி நிலவும்.

18-ஆம் நூற்றாண்டில் நவீன வெப்பமூட்டும் கருவிகள் இல்லாத காலத்தில், இந்தப் பழமையான கட்டிடத்தின் மேல் தளங்களைக் கதகதப்பாக வைத்திருக்க ஒரு தந்திரம் கையாளப்பட்டது. தரைத்தளத்தில் உள்ள விறகு அடுப்பிலிருந்து வெளியேறும் வெப்பம், செங்கல் சுவர்கள் வழியாக மேல் தளங்களுக்கும், குறிப்பாக ‘கஸ்டிலியன் அறை’ (Castilian Room) எனப்படும் முதல் தளத்திற்கும் பரவும் வகையில் கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

1725- ஆம் ஆண்டு அமைக்கப் பட்ட பாரம்பரிய ஓக் மர விறகு அடுப்பின் நெருப்பு, உணவகத்தை எப்போதும் வெதுவெதுப்பாக வைத்திருப்பதற்காகப் பல நூற்றாண்டுகளாக அணையாமல் பாதுகாக்கப் பட்டு வருகிறது. புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே இந்த உணவகத்திற்குத் தொடர்ந்து வருபவர்.

அவர் தனது ‘தி சன் ஆல்சோ ரைசஸ்' (The sun Also Rises) நாவலின் இறுதி பகுதியில் இந்த உணவகத்தைப் பற்றியும், இங்கு பரிமாறப்படும் வறுத்த இளம் பன்றி இறைச்சி (Cochinillo asado) பற்றியும் சிறப்பித்து எழுதியுள்ளார். சமையலுக்குத் தேவையான ரொட்டி வகைகளைத் தயாரிக்க, பல தசாப்தங்களாகப் பாதுகாக்கப்பட்டு வரும் பாரம்பரியப் புளித்த மாவு இன்றும் பயன்படுத்தப்படுகிறது.

இன்று இந்தப் பழமையான ஒயின் நிலவறை, மெழுகுவர்த்தி போன்ற மங்கலான ஒளியுடன் கூடிய மிக அழகான உணவருந்தும் கூடமாக மாற்றப்பட்டுள்ளது. பழங்காலச் செங்கல் சுவர்களுக்கு நடுவே அமர்ந்து உணவு அருந்துவது, 16-ஆம் நூற்றாண்டுக்கே சென்றது போன்ற ஒரு மாயாஜால அனுபவத்தை வாடிக்கையாளர் களுக்குத் தருகிறது.

இதையும் படியுங்கள்:
போர்க்களத்தில் ஒலித்த மெல்லிசை: உலகையே வியக்க வைத்த 1914 கிறிஸ்துமஸ் அதிசயம்!
பழமையான உணவகம் - Oldest restaurant