

உலகத்தில் நடக்கும் போர்களைப் பற்றி டிவியில் பார்க்கும் போது, மனித மனமே அன்புக்கு ஏங்குவது தானே! இருதரப்பு வீரர்களும் போரை நிறுத்திவிட்டு , ஓடி வந்து தோள்பற்றி கைகுலுக்கி அன்பை பரிமாறி கொள்ள மாட்டார்களா ? அதுபோல் எந்த போரிலாவது எப்பேற்பட்ட நிலையையும் மறந்து, அப்படி நடந்த சம்பவம் உண்டா ? அந்த சம்பவத்திற்கு அடிப்படை ஆதாரமாக அமைந்தது எது ?என்ற கேள்வி எழும்.
அதுபோல், 1914-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் உலகப்போரின்போது, துப்பாக்கிகளின் முழக்கத்தையும் போரின் கொடூரத்தையும் மீறி இசையும் மனிதநேயமும் வென்ற ஒரு வரலாற்று அதிசயம்தான் 'கிறிஸ்துமஸ் போர் நிறுத்தம்' (The Christmas Truce of 1914).
எந்தவொரு மேலதிகாரியின் உத்தரவும் இன்றி, போர்க்களத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட வீரர்களே தன்னிச்சையாக உருவாக்கிய இந்த அமைதி நிகழ்வின் விரிவான வரலாறு பற்றிய முழு தொகுப்பை இப்பதிவில் காண்போம்.
பின்னணி: 1914-ன் கொடூரமான போர்க்களம்
1914 ஜூலை மாதத்தில் தொடங்கிய முதல் உலகப்போர், சில மாதங்களிலேயே தீவிரமடைந்தது. பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தின் எல்லையோரப் பகுதியான மேற்கு முன்னணியில் (Western Front) பிரித்தானிய (British) படைகளும், ஜெர்மனியப் படைகளும் நூற்றுக்கணக்கான மைல் நீளத்திற்கு அகழிகளைத் (Trenches) தோண்டிப் போரிட்டு வந்தன.
மழை, சேறு, கடும் பனி மற்றும் சக வீரர்களின் சடலங்களுக்கு இடையே வீசப்பட்ட துப்பாக்கிச் சூடுகளுக்கு நடுவே வீரர்கள் கடும் மன அழுத்தத்திலும் குளிரிலும் வாடிக்கொண்டிருந்தனர்.
1914 கிறிஸ்துமஸ் இரவு: இசையால் தொடங்கிய மாற்றம்
1914 டிசம்பர் 24-ஆம் தேதி இரவு, பெல்ஜியத்தின் பிளான்டர்ஸ் (Flanders) பகுதியில் கடும் பனிப்பொழிவு இருந்தது. திடீரென ஜெர்மனிய அகழிகளிலிருந்து சிறிய மெழுகுவர்த்தி வெளிச்சங்களும், கிறிஸ்துமஸ் மரங்களின் (Christmas trees) அழகிய அலங்காரங்களும் தென்படத் தொடங்கின.
அதைத் தொடர்ந்து, ஜெர்மனிய வீரர்கள் தங்களின் பாரம்பரிய கிறிஸ்துமஸ் பாடலான "Stille Nacht" (Silent Night - அமைதியான இரவு)
அமைதியான இரவு! புனிதமான இரவு!
எங்கும் அமைதி, எங்கும் ஒளிமயம்!
அந்தப் பரிசுத்த தாயையும் சேயையும் சுற்றி,
மழலைத் தேவமைந்தன் எத்துணை மென்மையானவன்!
விண்ணக அமைதியில் தூங்குவாயாக,
விண்ணக அமைதியில் தூங்குவாயாக!
அமைதியான இரவு! புனிதமான இரவு!
இடையர்கள் அந்த ஒளியைக் கண்டு நடுங்குகின்றனர்,
விண்ணகத்திலிருந்து மகிமை பொழிகின்றது,
தேவதூதர்கள் அல்லேலூயா பாடுகிறார்கள்;
மீட்பரான கிறிஸ்து பிறந்துவிட்டார்!
மீட்பரான கிறிஸ்து பிறந்துவிட்டார்!
அமைதியான இரவு! புனிதமான இரவு!
இறைவனின் திருமகனே, உமது முகத்திலிருந்து
தூய அன்பின் ஒளி வீசுகின்றது,
நம் மீட்பின் விடியல் உம்மால் உதயமாகின்றது;
இயேசுவே, உமது பிறப்பில் அருளமைதி மலர்கின்றது!
என்ற பாடலைப் பாடத் தொடங்கினர். அந்த இனிய இசை பனி படர்ந்த அகழிகளின் வழியே பாய்ந்து எதிரிலிருந்த பிரித்தானிய வீரர்களின் காதுகளை அடைந்தது.
பாடலின் மெட்டையும் உணர்வையும் புரிந்துகொண்ட பிரித்தானிய வீரர்கள், அதற்குப் பதிலாக ஆங்கிலத்தில் "The First Noel" என்ற பாடலைப் பாடிப் பதிலளித்தனர்.
சிறிது நேரத்திலேயே இருதரப்பு வீரர்களும் சேர்ந்து "O Come, All Ye Faithful" (இலத்தீன் மொழியில் Adeste Fideles) பாடலை ஒரே குரலில் பாடி போர்க்களத்தையே இசைக்கூடமாக மாற்றினர்.
'யாருமில்லாப் பகுதிக்கு' வந்த வீரர்கள்
இசையால் உருகிய மனங்களுடன், அதிகாலையில் ஒரு ஜெர்மனிய வீரன் அகழியிலிருந்து வெளியேறி கையில் எவ்வித ஆயுதமுமின்றி "No Man's Land" (இருதரப்புக்கும் இடைப்பட்ட ஆபத்தான பகுதி) நோக்கி நடந்து வந்தான்.
அவனைத் தொடர்ந்து இருதரப்பு வீரர்களும் மெல்ல மெல்ல அகழிகளை விட்டு வெளியே வந்து கை குலுக்கிக் கொண்டனர். போர்க்களத்தில் தங்களிடம் இருந்த சிகரெட்டுகள், சாக்லேட்டுகள், மதுபானங்கள், தொப்பிகள் மற்றும் பொத்தான்களைப் பரிசாகப் பரிமாறிக் கொண்டனர்.
கால்பந்துப் போட்டி (Football Match): சில இடங்களில் வீரர்கள் ஒரு தோல் பந்தை வைத்து தன்னிச்சையாகக் கால்பந்து விளையாடி மகிழ்ந்ததாகவும் ,பின்னர் இப்போட்டியில் ஜெர்மனி 3-2 என்ற கணக்கில் வென்றதாகவும் சில குறிப்புகள் கூறுகின்றன.
இறுதிச் சடங்குகள்: இந்தப் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி, இருதரப்பிலும் இறந்து கிடந்த சக வீரர்களின் சடலங்களை மீட்டு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்குகளைச் செய்து, இணைந்து பிரார்த்தனை செய்தனர்.
மேலதிகாரிகளின் கோபமும் முடிவும்:
இந்தத் தன்னிச்சையான அமைதிச் செய்தி மேலதிகாரிகளுக்கும் ஜெனரல்களுக்கும் தெரிந்தபோது அவர்கள் கடும் கோபமடைந்தனர். "எதிரிகளிடம் இரக்கம் காட்டுவது தேசத்துரோகம்" என்று எச்சரித்த அதிகாரிகள், போரை உடனடியாகத் தொடருமாறு உத்தரவிட்டனர்.
டிசம்பர் 26 அன்று மீண்டும் துப்பாக்கிச் சூடுகள் தொடங்கின. அடுத்தடுத்த ஆண்டுகளில் (1915, 1916) இதுபோன்ற போர் நிறுத்தங்கள் நடைபெறாமல் இருக்கக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டன.
ஒரு கட்டத்தில் கடுமையான பொருளாதார பிரச்சனைகள் ஏற்பட போரிட்டவர்கள் மனம் மாறி போர் முடிவு ஒப்பந்தத்திற்கு ஒத்துக்கொண்டனர்.
துப்பாக்கிகள் மௌனமான நிமிடம்: அந்த ஒப்பந்தத்தின்படி, அதே ஆண்டு நவம்பர் 11-ஆம் நாள் காலை சரியாக 11:00 மணிக்கு (11th hour, of the 11th day, of the 11th month) மேற்கு முன்னணியில் இருந்த அனைத்துத் துப்பாக்கிச் சூடுகளும் முழுமையாக நிறுத்தப்பட்டன.
இந்த அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தின் மூலமாகவே முதல் உலகப் போர் முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது என்பது வரலாறு.
ஆதாரம்:
இப்படியெல்லாம் வரலாறு பேசினாலும் ,1914 கிறிஸ்துமஸ் போர் நிறுத்தம் என்பது அதிகார அமைப்புகளையும் ஆயுதங்களையும் தாண்டி, ஒரே ஒரு அமைதியான இசை மனித இதயங்களை இணைத்து போரையே நிறுத்தும் ஆற்றல் கொண்டது என்பதற்கான காலத்தால் அழியாத சான்றாக 1818-இல் ஜோசப் மோஹர் (Joseph Mohr) என்பவரால் எழுதப்பட்டு, ஜோசப் க்ரூபர் (Franz Xaver Gruber) என்பவரால் இசையமைக்கப்பட்ட இப்பாடல், இன்று உலகளவில் 300-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அமைதியின் அடையாளமாகப் பாடப்பட்டு வரும் இப்பாடல் அன்று முதல் உலகப்போரையே நிறுத்தும் அளவிற்கு புகழ்பெற்று விளங்கியதை மறக்க முடியாத நிகழ்வாக "இசைக்கு கிடைத்த மரியாதையாக" சித்தரிக்கலாம். எப்பேற்பட்ட கொடூரமான மனதையும் இசைய வைக்கும் தன்மை இசைக்கு உண்டு என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.
இதைப் படிப்பதன் மூலம் முதல் உலகப்போரின் சரித்திரத்தையும் அந்த சரித்திரத்தின் மூலம் "இசை அனைத்தையும் வெல்லும் தன்மை கொண்டது" என்பதையும் இதன் மூலம் புரிந்துகொள்ளலாம்.