

ஓணம் திருவிழா
அசுரக்குலத் தோன்றல் பிரகலாதன் எப்படி குணசீலனாக விளங்கினானோ, அதுபோலவே அவனுடைய பேரன் மகாபலியும் நற்குணங்களின் உறைவிடமாக திகழ்ந்தான்.
மகாபலி சக்கரவர்த்தி முற்பிறவியில் எலியாக இருந்தான். அப்போது சிவன் கோயில் ஒன்றில் சிவலிங்கத்துக்கு அருகில் ஏற்றப்பட்டிருந்த விளக்கு அணையும் நிலையில் இருந்தது. அந்த விளக்கில் ஏறிய எலியின் வால் தவறுதலாக திரியின் மீது படவும் அணையும் நிலையில் இருந்த விளக்கு தூண்டப்பட்டு பிரகாசமாக எரியத் தொடங்கியது.
இந்த நற்செயலாய் மகிழ்ந்த ஈசன் மறுபிறவியில் நற்குணமிக்க பார் புகழ் மன்னனாக சிறப்பாக ஆட்சி செய்வாய் என அனுக்கிரக ம் செய்தார். அதன்படி பரசுராம ஷேத்திரம் எனும் கேரளத்தை ஆண்டு, வாமனரால் பாதாள உலகுக்கு சென்றான் மகாபலி சக்ரவர்த்தி.
நாட்டு மக்கள் மீது அன்பு வைத்திருப்பதால் பாதாளத்திலிருந்து ஆண்டுக்கு ஒருமுறை தனது நாட்டிற்கு வந்து மக்களை கண்டு மகிழும் வரம் வேண்டினான் மகாபலி மன்னன். அதன்படி பாதாள உலகிலிருந்து பூலோகத்திற்கு மகாபலி வந்து செல்வதாக கேரள மக்கள் நம்புகிறார்கள். இந்த திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
எர்ணாகுளம் மாவட்டம் திருக்காட்கரையில் உள்ளது காட்கரையப்பன் தலம். மகாபலிக்கு வாமனர் முக்தி அளித்தது இங்குதான். நம்மாழ்வார் மங்களா சாசனம் செய்யப்பட்ட வாமனர் கோயில் என்றறியப்படும் 78வது திவ்யதேசமாகும். மகாபலி பூஜித்த சிவலிங்கம், சிம்மாசனம் ஆகியவை இங்குள்ளது.
பத்து நாட்கள் நடைபெறும், கொண்டாடப்படும் ஓணத்தில் மக்கள் கசவு எனப்படும் சுத்தமான வெண்ணிற ஆடை உடுத்துவர். பெரிய அளவில் பத்து வகையான பூக்களால் அழகு செய்வர். மகாபலியை வரவேற்க போடக்கூடிய கோலத்திற்கு அத்தப்பூ கோலம் என்று பெயர்.
முக்கியமான மருத்துவ குணம் கொண்ட விஷ்ணு கிராந்தி, கருகா, முயல் செவியன், திருத்தாளி, சேருலா, நிலப் பனை, கையோன்னி, பூவாம் குரு நில்லா, மூக்குத்தி, உழிஞா ஆகிய மலர்களால் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்ட 10 வட்டங்களைக் கொண்டுதான் அத்தப்பூ கோலம் அமைப்பர். இந்த பத்து வட்டங்களும் ஒவ்வொரு தெய்வத்தை இந்த நாளில் வீட்டிற்கு வரவேற்பதாக ஐதீகம்.
பத்து நாட்கள் நடைபெறும் ஓணத் திருவிழாவில் ஒவ்வொரு நாளுக்கு ம் தனித்தனி பெயர் சூட்டி கொண்டாடுவர்.
அத்தம்
இந்த நாளில் அத்தப்பூ கோலத்தில் முதல் வட்டம் வீடுகளில் போடுவார்கள். மஞ்சள் நிறப்பூக்களின் இதழ்களைக் கொண்டு இந்தக் கோலம் அமைக்கப்படும்
சித்திரா
பலவிதமான இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
கோடி (சுவாதி)
ஓணம் கோடி எனும் ஓணத்திற்காக புதிய ஆடைகள்,நகைகள் வாங்குவர்.
விசாகம்
ஓணசத்யா எனப்படும் ஓண விருந்திற்கான பொருட்களை வாங்குவதுடன் 9 சுவைகளில் 64விதமான உணவு வகைகளை தயாரிக்க ஆரம்பிப்பர்.
அனிழம்
இந்த நாளில்தான் கேரளாவின் புகழ் பெற்ற வல்லம்களி எனும் பாரம்பரிய படகுப்போட்டி பம்பை ஆற்றில் நடத்தப்படும்.
திருக்கேட்டை
இன்று கோயில்களுக்கும், தங்கள் மூத்தோரின் வீடுகளுக்கும் சென்று ஆசி பெறுவார்கள்.
மூலம்
ஓணசத்யா படைக்க துவங்கி விடுவார்கள். புலிக்களி, கை கொட்டுக்களி ஆகிய கேரள மாநிலத்தின் பாரம்பரிய நடனம் இந்த நாளில் அரங்கேறும்.
பூராடம்
புதிய மலர்களை கொண்டு பூக்கோலத்தை பெரிதாக போடுவர். கோலம் நடுவில் வாமனர், மகாபலி சிலைகளை வைத்து பூஜை நடத்தப்படும்.
உத்திராடம்
மகாபலியை வரவேற்க ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெறும். பலவித புதிய தானியங்களை கொண்டு பலவித உணவுகள் தயாரிக்கப்படும்.
திருவோணம்
மிகவும் முக்கியமான இந்த பத்தாவது நாளில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மகாபலியை வரவேற்க வீடுகளில் பூக்கள், மாவிலைகளால் அலங்கரித்து ஓணசத்யா விருந்து படைக்கப்பட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு பரிமாறப்படும்.
திருக்காட்கரையப்பன் அருளால் விழாவும் நிறைவுபெறும்.
இந்த கட்டுரையை வாசிப்பதன் மூலம் ஓணப் பண்டிகையின் ஆன்மீகப் பின்னணி, மகாபலி மன்னனின் பிறவி வரலாறு மற்றும் 10 நாட்கள் கொண்டாட்டங்களின் முழுமையான பாரம்பரிய வழிமுறைகளைத் துல்லியமாக அறிந்துகொள்ளலாம்.