
பொதுவாக, தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் வாழும் இந்துக்கள் எல்லா பூஜையிலும் தேங்காயை உடைத்து இறைவனுக்கு பூஜை செய்கிறார்கள். கோயிலில் பூஜை, வீட்டில் பூஜை, பூமி பூஜை, ஒரு புதிய பொருள் வாங்கி அதற்கு பூஜை செய்வது என இப்படி எல்லாவிதமான பூஜையிலும் தேங்காய் ஒரு முக்கியமான பிரசாதமாக இருக்கிறது. மேலும், நாம் மற்ற பிரசாதங்களை அதாவது வாழைப்பழம் வெற்றிலைப் பாக்கு போன்றவற்றை அப்படியே வைத்து படைக்கிறோம். ஆனால், தேங்காயை மட்டும் ஏன் உடைத்து படைக்கிறோம்? இதற்கு பலதரப்பட்ட காரணங்கள் இருக்கின்றன. அவற்றை இப்பதிவில் பார்க்கலாம்.
அந்தக் காலத்தில் ஏதாவது வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்றாலோ அல்லது நிறைவேறி விட்டாலோ அல்லது இறைவனை வழிபடும்போதோ மக்கள் விலங்குகளைத்தான் பலி கொடுத்தார்கள். நம்முடைய குருவான ஆதிசங்கரர்தான் இந்த விலங்குகளின் பலிக்கு பதிலாக தேங்காயை உடைத்து கடவுளுக்கு பலியாகக் கொடுக்கலாம் என்று அறிவுறுத்தினார். அப்போது முதல் இந்த தேங்காய் உடைக்கும் வழக்கம் ஆரம்பமானது.
தேங்காயில் உள்ள மூன்று கண்கள் பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரரை குறிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. ஆகவே, தேங்காய் ஒரு முக்கியப் பொருளாக பூஜையில் கருதப்படுகிறது. இந்த மூன்று கண்களுக்கு இன்னொரு விளக்கமும் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அதாவது, சிவபெருமானுக்கு மூன்று கண்கள் இருப்பதைப் போலத் தேங்காய்க்கும் மூன்று கண்கள் இருப்பது, அதற்குரிய மிக முக்கியமான சிறப்பு அம்சமாகும். இரண்டு கண்களுடன் பிறந்த மனிதன் நன்றாகப் பக்குவப்பட்ட பின்னர் அகக்கண் அல்லது ஞானக்கண்ணைப் பெறுகின்றான். மனிதன் பக்குவப்பட்டு ஞான நிலையை அடைய தேங்காய் ஒரு குறியீடாக உள்ளது. அதனால்தான் மூன்று கண்களுடன் இருக்கும் தேங்காய் இறை வழிபாட்டுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது.
பகவான் மகாவிஷ்ணு பூலோகத்தில் மனித அவதாரம் எடுத்து வந்தபோது மகாலட்சுமி தேவியுடன் தென்னை மரத்தையும் காமதேனுவையும் கொண்டு வந்தார். ஆகவேதான், பூஜையில் தேங்காயும் ஒரு முக்கியப் பொருளாக கருதப்படுகிறது.
நம் மனதில் ஆணவம், அகங்காரம், ஆசை என எல்லாம் எப்போதுமே நிறைந்திருக்கும். இறைவனை தொழும்போது அவற்றை எல்லாம் வெளியேற்றி தூய்மையான மனதோடு வழிபட வேண்டும் என்பதைத்தான் இந்தத் தேங்காய் உடைத்தல் வலியுறுத்துகிறது. அதாவது, இறைவனை தொழும்போது தலை குனிந்து நம்மிடமுள்ள ஆணவம், அகங்காரம், ஆசை, மாயை போன்றவற்றை தேங்காயை உடைப்பது போல் உடைத்து சுக்கு நூறாக்கி அதை மனதிலிருந்து வெளியேற்றிய பிறகு தூய்மையான உள்ளத்தோடும் பணிவோடும் வணங்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே தேங்காயை உடைத்த பின்புதான் அதை கடவுளுக்குப் படைக்கிறார்கள்.
இன்னொரு விஷயம் என்னவென்றால், முதலில் நாம் தேங்காயை பறித்த பிறகு அதன் மேலுள்ள நாரை அகற்றுகிறோம். பிறகு வெளிப்புறத்திலிருக்கும் கடினமான ஓட்டை உடைக்கிறோம். இதன் மூலம் அதிலிருக்கும் நீரானது வெளியேருகிறது. கடைசியில் நமக்கு வெள்ளை நிறத்தில் இருக்கும் பகுதி கிடைக்கிறது. அதைத்தான் இறைவனுக்குப் படைத்து விட்டு நாமும் உண்கிறோம்.
சரி இதற்கும் பூஜைக்கும் என்ன சம்பந்தம்?அதாவது, தேங்காயின் மேலிருக்கும் நாரைப் போல நம் உள்மனமும் முழுவதும் ஆசை என்கிற போர்வையால் சுற்றப்பட்டிருக்கிறது. ஆகவே, முதலில் அதை உரித்து அகற்ற வேண்டும். அடுத்தபடியாக, கடினமான ஓடு பகுதி என்கிற மாயையை உடைக்க வேண்டும். நாம் எல்லோருமே மாயஜாலத்தால்தானே பின்னப்பட்டிருக்கோம். ஆகவே, அதை உடைத்தாக வேண்டும். அடுத்தபடியாக உள்ளிருக்கும் நீர் வெளியேருகிறது. அதாவது, நம்முள்ளே இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் வெளியேறுகின்றன. கடைசியாக வெள்ளை பகுதியை அடைகிறோம். அதாவது பரமாத்மாவோடு இணைகிறோம்.
இன்னும் விளக்கமாக சொல்லப்போனால் நாம் நம்முடைய உள்மனதிலிருந்து ஆசையை அகற்றி, மாயையிலிருந்து விடுபடும்போது நம்முடைய உடலிலிருந்து எதிர்மறை எண்ணங்கள் வெளியேற்றப்படுவதால் நம் ஜீவாத்மாவானது பரமாத்மாவோடு இணைந்து விடும் என்பதே இதன் தத்துவமாகும்.
ஆகவே, இனிமேலாவது பூஜை செய்யும்போது தேங்காயை மட்டும் உடைத்து படைப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் உங்களிடம் இருக்கும் ஆசை, ஆணவம், அகங்காரம், மாயை என எல்லாவற்றையும் உடைத்தெறிந்து உங்களின் மனதையும் தூய்மையாக்கி இறைவனை வழிபடுங்கள்!