திருநெல்வேலி உங்களுக்கு அல்வா தானே ஞாபகம் வருகிறது?. ஆனால் அதே திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உலகப் புகழ்பெற்ற ஒரு பாரம்பரிய கலை பல தலைமுறைகளாக உயிர்ப்புடன் வாழ்ந்து வருகிறது. அதுதான் பட்டின் மென்மையும் உடலுக்குக் குளிர்ச்சியையும் தரக்கூடிய புவிசார் குறியீடு பெற்ற பத்தமடை பாய். இந்த உலகப் புகழ்பெற்ற பாயின் நெசவு முறை மற்றும் இதனை நெய்யும் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றி பதிவில் பார்க்கப் போகிறோம்.
கடினமான நெசவு முறை:
இந்த பாயை நெய்வது மிகவும் பொறுமை தேவைப்படும் ஒரு கலைநயமிக்க வேலை. தாமிரபரணி ஆற்றங்கரையில் விளையும் கோரைப்புற்களை அறுவடை செய்து பச்சையம் மாறும் வரை வெயிலில் உலர்த்துவார்கள். அதன் பிறகு அந்த உலர்ந்த கோரைகளை ஓடும் ஆற்றுத் தண்ணீரில் 3 முதல் 7 நாட்கள் வரை ஊறவைக்க வேண்டும். அப்போதுதான் அந்தப் புற்கள் பல மடங்கு பெருத்து பட்டுப் போன்ற மென்மையான தன்மையைப் பெறும்.
நன்கு ஊறிய கோரையின் நடுப்பகுதியை நீக்கிவிட்டு நெசவு செய்வதற்குத் தேவையான மிகவும் மெல்லிய இழைகளாகப் பிரித்து எடுப்பார்கள். அதன்பின் கொதிக்கும் வெந்நீரில் இயற்கை மற்றும் செயற்கைச் சாயங்களைக் கலந்து அந்த இழைகளுக்குத் தேவையான வண்ணங்களைப் பூசுவார்கள். மூங்கில் முக்காலி அமைப்பில் கட்டப்பட்ட தறியில் ஒரு நுணுக்கமான பட்டுப் பாயை முழுமையாக நெய்து முடிக்கக் குறைந்தது 5 முதல் 20 நாட்கள் வரை நேரம் எடுத்துக்கொள்ளும்.
தலைமுறை கடந்து வாழும் நெசவாளர்கள்!
இந்தப் பத்தமடை பாய் நெசவுத் தொழிலை லெப்பை சமூகத்தைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்கள் தங்களது பல தலைமுறை பாரம்பரியமாக மாபெரும் பண்பாட்டு அடையாளமாகச் செய்து வருகிறார்கள். இதில் வீட்டின் பெண்கள் பாய் நெய்வதில் முழுமையாக ஈடுபட ஆண்கள் புல் அறுவடை செய்வது, சந்தைப்படுத்துவது போன்ற கடினமான வெளி வேலைகளில் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.
இந்த பாய்களின் தரம் மற்றும் அதிலுள்ள வேலைப்பாடுகளைப் பொறுத்து 1 பாய் 50 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை கூட விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாகத் திருமண பாய்களில் மணமக்களின் பெயர்கள், அவர்களின் உருவப்படங்களை நெய்வதில் இந்தப் பெண்கள் தனித்துவமான திறமையைப் பெற்றுள்ளார்கள். இது அவர்களின் கலைத்திறனுக்குக் கிடைத்த ஒரு மிகப்பெரிய அங்கீகாரமாகும்.
சவால்கள்!
இவ்வளவு சிறப்புகள் இருந்தாலும் சமீப காலங்களாக நெசவாளர்களின் வாழ்க்கை பெரும் போராட்டமாகவே உள்ளது. எல்-நினோ வறட்சி காரணமாக ஆற்றில் தண்ணீர் இல்லாததால் கோரைப்புல் விளைச்சல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
விளைச்சல் குறைவால் மூலப்பொருட்களின் விலை 65 சதவீதம் வரை உயர்ந்து உற்பத்திக்கான செலவும் அதிகப்படியாக எகிறிவிட்டது. கடின உழைப்பிற்கு ஏற்ற வருமானம் கிடைக்காததால் பல இளைஞர்கள் இந்தத் தொழிலை விட்டு மாற்று வேலைகளுக்குச் செல்லத் தொடங்கிவிட்டார்கள்.
நமது பண்பாட்டின் அடையாளமாக விளங்கும் இந்த நெசவுக் கலை அழிந்து விடாமல் பாதுகாக்கக் கூட்டுறவு சங்கங்கள் பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்து வருகின்றன. நம்மால் முடிந்த அளவு பிளாஸ்டிக் பாய்களைத் தவிர்த்துவிட்டு இதுபோன்ற பாரம்பரியமான பாய்களை வாங்கிப் பயன்படுத்தினால் மட்டுமே இந்த அற்புதமான கலையையும் அதை நம்பி வாழும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தையும் நாம் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல முடியும்.