சரியான மாவு அளவுகளுடன் ஓமப்பொடி மற்றும் ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி?

நமத்துப் போகாமல் 20 நாட்கள் மொறுமொறுப்பாக இருக்க மாவு பிசையும் சரியான பதம் இதோ!
ஓமப்பொடி - Omapodi recipe Tamil
ஓமப்பொடி - Omapodi recipe Tamil
இந்திராணி தங்கவேல்

தஞ்சாவூரைச் சேர்ந்த இந்திராணி தங்கவேல், மங்கையர் மலரில் வெளியான முதல் கட்டுரை மூலம் எழுத்துப் பயணத்தைத் தொடங்கியவர், இன்று கல்கி ஆன்லைனில் தொடர்ந்து எழுதி வருகிறார். அருமையான சிறுகதைகளும் பயனுள்ள பல கட்டுரைகளும் எழுத வல்லவர்.

Updated on: 

ஓமப்பொடி மற்றும் ரிப்பன் பக்கோடா ஆகிய இரண்டுமே தீபாவளி மற்றும் விசேஷ நாட்களில் மட்டுமல்லாது மற்ற மழை நாட்கள் மற்றும் தேவைப்படும் விடுமுறை நாட்களில் வீடுகளில் செய்யப்படும் மிக முக்கிய நொறுக்கு தீனிகள். இவை இரண்டும் நன்றாக மொறுமொறுப்பாகவும், நீண்ட நாட்கள் நமத்துப் போகாமலும் இருக்க மாவு பிசையும் பதமும், சேமித்து வைக்கும் முறையும் மிக முக்கியம்.

​அவற்றைப் பற்றிய தெளிவான விளக்கங்களை இப்பகுதி கூறுகிறது.

​ஓமப்பொடி மற்றும் ரிப்பன் பக்கோடா இரண்டிற்கும் அடிப்படையான மாவு அளவுகள் மற்றும் பிசையும் பதம் இரண்டும் ஒன்றுதான். ரிப்பன் பக்கோடா விற்கு வெள்ளை எள் மற்றும் மிளகாய் பொடி சேர்ப்போம். ஓமப்பொடிக்கு ஓமம் சேர்க்கும் முறை வித்தியாசப்படும்.

ஓமப்பொடி, ரிப்பன் பக்கோடா செய்ய

தேவையான பொருட்கள்:

கடலை மாவு- 2 கப்

பதமாக அரைத்து சலித்த மெல்லிய அரிசி மாவு - 1 கப் (2:1 என்ற விகிதம்)

வெண்ணெய் அல்லது சூடான எண்ணெய்- 1 முதல் 2 டேபிள் ஸ்பூன்

உப்பு & பெருங்காயத்தூள்: தேவையான அளவு

தனி மிளகாய்த் தூள் -ஒரு டீஸ்பூன்

வெள்ளை எள்- ஒரு டீஸ்பூன்

ஓமப்பொடிக்கு: 1 - 2 டீஸ்பூன் ஓமத்தை நீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்து, மிக்ஸியில் அரைத்து, வடிகட்டிய தண்ணீரை மட்டுமே மாவில் ஊற்றிப் பிசையவேண்டும். இதுதான் ஓமப்பொடிக்கு அடிப்படையான விஷயம். அப்படியே சேர்த்தால் அச்சுத்துளையில் அடைத்துக் கொள்ளும். பிழியவே முடியாது.

இதையும் படியுங்கள்:
"இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?" விடுமுறையில் சுட்டிக்குழந்தைகளை அசத்த 7 நாள் ஸ்பெஷல் மெனு!
ஓமப்பொடி - Omapodi recipe Tamil

ரிப்பன் பக்கோடாவுக்கு: இரண்டு பங்கு கடலை மாவுக்கு ஒரு பங்கு அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள், சூடான எண்ணெய் விருப்பப்பட்டால் சிறிது காரத்திற்கு தனி மிளகாய்த்தூள் மற்றும் 1 டீஸ்பூன் வெள்ளை எள் சேர்த்துக்கொள்ளலாம்.

ஓமப்பொடிக்கு:

கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயம், ஓம நீர் வெண்ணெய் அல்லது சூடான எண்ணெயைச் சேர்த்து, முதலில் மாவை கைவிரல்களால் நன்கு உதிரியாகத் தேய்த்துப் பிசையவேண்டும்.

உப்பையும் பெருங்காயத் தூளையும் தண்ணீரில் கரைத்து மாவில் ஊற்றி பிசைந்தால் உப்பு எல்லா இடத்திலும் ஒரே சீராக இருக்கும்.

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து, மாவைச் சப்பாத்தி மாவை விட சற்று தளர, அதாவது முறுக்கு மாவு பதத்திற்கு மென்மையாகப் பிசைய வேண்டும்​.

ஓமப்பொடி - Omapodi recipe Tamil
ஓமப்பொடி - Omapodi recipe Tamil

அப்படி பிசைந்த மாவு மிகவும் கெட்டியாக இருந்தால், அச்சிலிருந்து பிழியும் போது கை வலிக்கும்; அப்படி கை வலித்தாலே மாவை பிசைந்த பதம் சரியில்லை என்பதை புரிந்து கொள்ளலாம். மேலும் ஓமப்பொடி மெலிதாக வராமல் காராசேவு போல தடித்துவிடும்.

​மாவு மிகவும் தளர்வாக (தண்ணீராக) இருந்தால், எண்ணெயை அதிகம் உறிஞ்சிவிடும்; மொறுமொறுப்பு குறையும்.

பிசைந்த மாவை விரலால் அழுத்தினால் மாவு லேசாக அமிழும் அளவிற்கு மிருதுவாக இருக்க வேண்டும். இதுதான் ஓமப்பொடி ரிப்பன் பக்கோடா செய்ய சரியான பதம்.

பொரித்தெடுக்கும்போது கவனிக்க வேண்டியவை:

எண்ணெய் மிதமான சூட்டில் இருக்கவேண்டும். எண்ணெய் சூடு குறைந்தால் மாவு எண்ணெயைக் குடிக்கும்; அதிக சூடானால் வெளிப்புறம் உடனே சிவந்து, உள்ளே வேகாமல் நமத்துப்போகும்.

எண்ணெயில் பிழிந்ததும் நுரை கொப்பளித்து வரும். ஓமப்பொடி மிக மெல்லிதாக இருப்பதால் சில விநாடிகளிலேயே வெந்துவிடும். எண்ணெயின் ஓசையும் நுரையும் அடங்கியதும் உடனே திருப்பிப் போட்டு, பொன்னிறமாகும் முன் அதாவது லேசான மஞ்சள் நிறத்தில் வரும்போது எடுத்துவிட வேண்டும்.

ரிப்பன் பக்கோடா பிழியும்போது அந்த ஓட்டை சிறியதாக இருக்குமானால் அந்த மாவிற்குள் எள் போன்றவற்றை போடுவதை நிறுத்தி விடலாம். அப்பொழுது ரிப்பன் பக்கோடா தடைபடாமல் ஒரே சீராக எண்ணெய்யில் பொரியும்.

இதையும் படியுங்கள்:
டீ டைம் ஸ்பெஷல்: கிரிஸ்பியான பாரம்பரிய தட்டை செய்ய இத்தனை நாள் இது தெரியாம போச்சே!
ஓமப்பொடி - Omapodi recipe Tamil

மொறுமொறுப்பு போகாமல் (நமத்துப் போகாமல்) வைக்கும் முறைகள்:

பொரித்து எடுத்த ஓமப்பொடி அல்லது ரிப்பன் பக்கோடாவை ஒரு அகலமான தட்டிலோ அல்லது வடிதட்டிலோபரப்பி வைத்து, சூடு முற்றிலும் அறை வெப்பநிலைக்கு வரும் வரை பொறுமை காத்து ஆற வைக்க வேண்டும். சூட்டுடன் மூடினால் ஆவி பிடித்து நீர் சொட்டி நமத்துப் போய்விடும்.

பின்னர் நன்றாக ஆறின பிறகு, ஈரம் இல்லாத, காற்றடைக்கப்பட்ட டப்பாக்கள் ,சுத்தமான சில்வர் (Stainless Steel) அல்லது கண்ணாடி டப்பாவில் போட்டு இறுக்கமாக மூடி வைக்கவேண்டும்.

டப்பாவின் அடியில் ஒரு டிஷ்யூ பேப்பர் அல்லது வெள்ளை பேப்பர் போட்டு, அதன் மேல் பலகாரங்களை அடுக்கலாம். இது மேலதிக எண்ணெயையும், காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சி மொறுமொறுப்பை நீட்டிக்கச் செய்யும். கூடவே ஒரு வெள்ளைத் துணியில் உப்பை முடிந்து போட்டு அந்த டப்பாவின் அடியில் வைத்தும் பலகாரங்களை அடுக்கலாம் .இது பலகாரத்திற்கு நல்ல மொறுமறுப்பை கொடுக்கும்.

தினமும் சாப்பிடுவதற்குப் பெரிய டப்பாவை அடிக்கடி திறந்து மூடுவதைத் தவிர்த்து,ஒரு சிறிய டப்பாவில் 2-3 நாட்களுக்குத் தேவையானதை மட்டும் தனியாக எடுத்து வைத்துக்கொண்டு, பெரிய டப்பாவை எப்போதும் இறுக்கமாக மூடி வைத்து விட்டால் மொறுமொறுப்புக்கு குறைவிருக்காது.

பலகாரங்களை எடுக்கும்போது கைகளில் ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சட்னி அரைத்த கை,பாத்திரம் தேய்த்த கையோடு பலகார டப்பாவில் பலகாரம் எடுப்பதை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.

அவசரத்தில் பெண்கள் இதை செய்வதுண்டு. ஆதலால் சுத்தமான ஒரு டவலை அங்கே வைத்துவிடுங்கள் . அதில் கையை துடைத்துவிட்டு எடுங்கள்.

இந்த முறைகளைப் பின்பற்றிச் செய்தால், ஓமப்பொடியும் ரிப்பன் பக்கோடாவும் 15 முதல் 20 நாட்கள் வரை கடைகளில் வாங்குவது போலவே நல்ல மணத்துடனும் மொறுமொறுப்பாகவும் இருக்கும்!

குறிப்பாக ஓமப்பொடியையும், ரிப்பன் பக்கோடாவையும் அதிகமாக பிழிந்து வைத்துக் கொண்டால், நொறுங்கிய முறுக்கு, கலகலா, லட்டுக்கு பிழியும்போது மீதமான பூந்தி இவற்றுடன் சேர்த்து மிக்சராக கலந்து நொறுக்கு திணியாக பள்ளி விட்டு வரும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

இதை படிப்பதால் மெல்லிய ஓமப்பொடி, ரிப்பன் பக்கோடா செய்ய மாவு பிசையும் பதத்தையும், பலகாரம் நீண்ட நாட்கள் வாசனையும் சுவையும் மொறுமொறுப்பும் குறையாமல்

இருக்க நாம் கையாளும் வழிகளையும் அனைவரும் தெரிந்துகொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
மீதமான சாதம் இருக்கா? மொறுமொறு வடை முதல் பாயசம் வரை 5 அசத்தல் ரெசிபிகள்!
ஓமப்பொடி - Omapodi recipe Tamil