நாம் பொங்கலை தமிழர் திருவிழாவாக கொண்டாடுகிறோம்.ஆனால் ,பொங்கல் தேசம் முழுக்கவும் அதையும் தேசம் தாண்டியும் கொண்டாடப்படும் பெரிய பண்டிகையாக உள்ளது. இந்த திருவிழாவின் முக்கிய கருவாக கடும் குளிர்காலம் முடிந்து வரும் வசந்த காலத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடவும் , உலகை உய்விக்கும் சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கவும் , அறுவடைத் திருநாளை கொண்டாடவும் , நிகழ்த்தப்படுகிறது.
தேசம் முழுக்க அறுவடைத் திருநாள் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.தமிழ் நாட்டில் போகி திருநாள் அன்று பழைய பொருட்களுக்கு தீ வைத்து அழிக்கப் படுகிறது , இது தீமைகள் அழிவதை குறிக்கிறது.அடுத்த நாள் பொங்கல் திருநாள் அன்று சூரிய தேவனுக்கு பொங்கல் வைத்து நன்றி செலுத்தப்படுகிறது.மூன்றாம் நாள் வீட்டு மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் அவைகளை குளிப்பாட்டி, மாலையிட்டு அலங்காரம் செய்யப்பட்டு ,பொங்கல் வைத்து மரியாதை செய்யப்படுகிறது.
நான்காவது நாள் காணும் பொங்கல் அல்லது கன்னிப் பொங்கல் என்றழைக்கப்படுகிறது.அன்றைய நாளில் ஊர் கூடி போட்டிகள் நடத்தி மக்கள் களிப்புடன் இருப்பார்கள்.ஆண்கள் கபடி ,ஜல்லிக்கட்டு , இளவட்டக்கல் தூக்குதல் ,பெண்களுக்கும் உரி அடித்தல் , உரல் தூக்குதல் போன்ற போட்டிகள் நடைபெறுகிறது. அன்றைய தினம் பெண்கள் வீடு விடாக சென்று கும்மி கொட்டி மகிழ்ச்சி அடைவார்கள் .
கேரளா , கர்நாடகா , ஆந்திரா , தெலுங்கானா ,ஒடிசா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சூரியன் மகர ராசியில் நுழைவதை மகர சங்கராந்தியாக கொண்டாடப்படுகிறது.கேரளாவில் பெரும்பாலான பகுதிகளில் தமிழர்களை போன்றே சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மற்ற தென் மாநிலங்களில் வீடுகளில் இனிப்பு செய்யப்பட்டு சூரியன் வழிபடப்படுகிறார். தெலுங்கு பிரதேசத்தில் போகி , சங்கராந்தி , கணுமா( மாட்டுப் பொங்கல்) , முக்கணுமா( கன்னிப் பொங்கல்) என்று 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
உத்திரப்பிரதேசம் , உத்தரகாண்ட் , மே.வங்கம் போன்ற கங்கை நதி பாயும் மாநிலங்களில் மகர சங்கராந்தி மிகவும் புனிதமான நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இதை உத்தராயன், கிச்சடி, குகுடி என்ற பலபெயர்களில் அழைக்கின்றனர். இன்றைய தினத்தில் அரிசி பருப்பு சேர்த்த உணவினை தயாரித்து சிவபெருமானுக்கு படையலிடுகின்றனர்.அன்றைய நாளில் புனித நதிகளில் நீராடி கோயில்களில் வழிபாடு செய்கின்றனர். கும்பமேளா போன்று திருவிழாக்கள் இக்காலங்களில் நடைபெறுகிறது.பீகார் ,ஹரியானா,டெல்லி மற்றும் திரிபுராவில் கூட இதே முறையில் சங்கராந்தியை கொண்டாடுகின்றனர்.
அசாமில் தமிழர்களை போன்றே அறுவடை திருநாளாக மாக் பிஹூ கொண்டாடப்படுகிறது.அங்கு முதல் நாள் போகலி பிஹூ அன்று வைக்கோல் போரில் வீடு போல செய்து எடுக்கப்படுகிறது. இது தீமை அழிந்து மகிழ்ச்சி மற்றும் செல்வத்தின் வரவினை குறிக்கிறது.அடுத்த நாள் மாக் பிஹூ அன்று பாரம்பரியமான உணவுகளான டீல் பிதாக்கள் மற்றும் பிற உணவு வகைகளை மகிழ்ச்சியுடன் தயார் செய்து இறைவனுக்கு படைத்து கொண்டாடுகின்றனர். ஊர் கூடி மீன் பிடித்து தங்கள் ஒற்றுமையை உறுதி செய்கிறார்கள்.
பஞ்சாபில் அறுவடை முடிந்து லோஹ்ரி அன்று நெருப்பு முட்டி அதை சுற்றி வருகிறார்கள்.பஞ்சாபி பாரம்பரிய உடையை அணிந்த கலைஞர்கள், அறுவடை மாதத்தைக் கொண்டாடவும், சூரியனுக்கு நன்றி செலுத்தவும் நடனமாடுகிறார்கள்.மறுநாள் இனிப்பு செய்து மகிழ்ச்சியடைகிறார்கள். ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் அட்ரயான் என்ற பெயரில் போகியும், புனித நீராடுதலும் நடைபெறுகிறது. சங்கராந்தி அன்று இனிப்புகளை செய்து கொண்டாடுகின்றனர்.
குஜராத், ராஜஸ்தான், பீகார்,மத்திய பிரதேச மாநிலங்களில் மகர சங்கராந்தி அன்று ஊர் கூடி பட்டம் பறக்க விட்டு களிக்கின்றனர். அன்றைய நாளில் பீனி பால் ,கஜக், கீர், கேவர், பகோடி, புவா, டில்-லட்டு மற்றும் பருப்பு வெல்லம் சேர்த்த பாரம்பரிய இனிப்பு வகைகள் செய்து பரிமாறப்படுகிறது.