சென்னை மாநகராட்சியின் பொக்கிஷம்: ரிப்பன் கட்டிடத்தின் பிரமிக்க வைக்கும் வரலாற்று ரகசியங்கள்!

110 ஆண்டுகளைக் கடந்த சென்னையின் வெள்ளைக் அரண்மனை மற்றும் அதன் நுட்பமான கட்டிடக்கலை ரகசியங்கள்.
ரிப்பன் கட்டிடம் - Ripon Building Chennai
ரிப்பன் கட்டிடம் - Ripon Building Chennai
Updated on

சென்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளங்களுள் ஒன்றாகவும், இந்திய உள்ளாட்சி நிர்வாகத்தின் தூணாகவும் திகழ்வது ரிப்பன் கட்டிடம் (Ripon Building) ஆகும். சென்னை மத்திய ரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்திருக்கும் இந்த வெண்மையான மாளிகை, பாரம்பரிய கட்டிடக் கலைக்கும் நகர்ப்புற நிர்வாக வரலாற்றுக்கும் சான்றாக கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறது.

20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அன்றைய 'மெட்ராஸ் கார்ப்பரேஷன்' நிர்வாகப் பணிகள் அதிகரித்து வந்த நிலையில், மாநகராட்சி அமைப்பிற்கு எனத் தனியாக ஒரு பெரிய தலைமையகம் தேவைப்பட்டது. அதன்படி, அன்றைய சென்னை மாகாண நிர்வாகம் மாநகராட்சி பணிகளை ஒரே கூரையின் கீழ் ஒருங்கிணைக்கவும், தங்குதடையின்றி நிர்வகிக்கவும் ஒரு பிரம்மாண்ட கட்டிடத்தைக் கட்ட முடிவு செய்தது. சரி, இது யாரால், எப்பொழுது கட்டப்பட்டது தெரியுமா?

இக்கட்டிடத்தின் வரைபடத்தை ஆங்கிலேய கட்டிடக் கலைஞர் ஜி. டி. எஸ். ஹாரிஸ் (G. S. T. Harris) உருவாக்கினார். அப்பொழுது பிரிட்டிஷ் இந்தியாவின் வைஸ்ராய் ஆக இருந்த ' மிண்டோ' பிரபு, 1909-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி இதற்கான அடிக்கல் நாட்டினார்.

இக்கட்டுமானப் பணியை அன்றைய பிரபல இந்திய ஒப்பந்ததாரரான லோகநாத முதலியார் வெற்றிகரமாகச் செய்து முடித்தார்.

சுமார் நான்கு ஆண்டுகள் திறம்பட நடைபெற்ற கட்டுமானப் பணிகளுக்குப் பிறகு, 1913-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி இக்கட்டிடம் முறைப்படி திறக்கப்பட்டது. இந்திய உள்ளாட்சி அமைப்புகளில் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்து, இந்தியர்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கிய அன்றைய பிரிட்டிஷ் வைஸ்ராய் ரிப்பன் பிரபுவின் (Lord Ripon) நினைவாகவும் நன்றியறிதலாகவும் இக்கட்டிடத்திற்கு 'ரிப்பன் கட்டிடம்' எனப் பெயரிடப்பட்டது.

இதையும் படியுங்கள்:
மூர் மார்க்கெட் முதல் பட்டாணி சுண்டல் வரை... மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்!
ரிப்பன் கட்டிடம் - Ripon Building Chennai

இந்த இடத்தில், ' ரிப்பன் எங்கள் அப்பன்' என்று கூறப்பட்டு வந்த ரிப்பன் பிரபுவைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவலையும் அறிந்துகொள்வோம். லண்டனில் பிறந்த இவர், பள்ளியிலோ, கல்லூரியிலோ மழைக்குக்கூட ஒதுங்கவில்லை என்பது ஆச்சரியமான விஷயம். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்தது.

இந்தக் கட்டிடப் பரப்பளவும் கட்டுமான அமைப்பைப் பற்றி அறிந்துகொள்வோம்.

ரிப்பன் கட்டிடம் 'நியோ-கிளாசிக்கல்' (Neo-Classical) எனப்படும் இந்தோ-சாரசெனிக் மற்றும் கோதிக் கட்டிடக்கலைகளின் கலவையில் அமைக்கப்பட்டுள்ளது.

ரிப்பன் கட்டிடம் - Ripon Building Chennai
ரிப்பன் கட்டிடம் - Ripon Building Chennai

இக்கட்டிடம் 252 அடி (77 மீட்டர்) நீளமும், 126 அடி (38.4 மீட்டர்) அகலமும் கொண்டது. இதனுடைய தரைத்தளப் பரப்பளவு மட்டும் சுமார் 30,139 சதுர அடி ஆகும். ஒட்டுமொத்த வளாகமும் பரந்து விரிந்த சூழலில் அமைந்துள்ளது.

கட்டிட அமைப்பின் சிறப்புகள் தான் என்ன? இக்கட்டிடத்தின் மையப்பகுதியில் 132 அடி (40 மீட்டர்) உயரமுள்ள கடிகார கோபுரம் உள்ளது. இதில் உள்ள 8 அடி விட்டமுள்ள கடிகாரம் 'வெஸ்ட்மின்ஸ்டர் சைம்ஸ்' (Westminster chimes) மெல்லிசையுடன் மணியடிக்கும் தொழில் நுட்பம் கொண்டது.

ஆம். பிரிட்டன் வெஸ்ட்மினிஸ்டர் அரண்மணையில் உள்ள கடிகாரம் போலவே வடிவமைக்கப்பட்டதாம். சுவர்களில் செங்கற்களும், மெட்ராஸ் காரை பூச்சும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கட்டுமானச் செலவு

அக்காலகட்டத்தில், அதாவது 1910-களில் இந்த பிரம்மாண்டமான வெள்ளை மாளிகையைக் கட்டி முடிக்க ஆன மொத்தச் செலவு ₹7,50,000 (7.5 லட்சம் ரூபாய்) ஆகும். அந்த காலத்தில் இதுவே மிகப்பரிய தொகையாகக் கருதப்பட்டது.

தற்போதைய முக்கியத்துவம்

கட்டப்பட்டு நூறு ஆண்டுகளைக் கடந்த போதிலும், ரிப்பன் கட்டிடம் இன்றளவும் தன்னுடைய பழைய கம்பீர மாறாமல், பெருநகர சென்னை மாநகராட்சியின் (Greater Chennai Corporation) தலைமையகமாகச் செயல்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:
பாலே முதல் பெல்லி டான்ஸ் வரை: மேற்கத்திய நடனக் கலைகளின் வர்ணஜாலம்!
ரிப்பன் கட்டிடம் - Ripon Building Chennai

மேயர், மாநகராட்சி ஆணையர் மற்றும் முதன்மை அதிகாரிகளின் அலுவலகங்கள் இங்குதான் அமைந்துள்ளன. தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இக்கட்டிடம் பழமை மாறாமல் அண்மையில் புதுப்பிக்கப்பட்டு, சென்னை நகரத்தின் பாரம்பரியத்தை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

இந்த கட்டுரையைப் படிப்பதன் மூலம் சென்னை மாநகராட்சியின் தலைமையகமான ரிப்பன் கட்டிடத்தின் 100 ஆண்டுகால வரலாறு, அதன் தனித்துவமான கட்டிடக்கலை அதிசயங்கள் மற்றும் இந்திய உள்ளாட்சி நிர்வாகத்தின் தொடக்கம் குறித்த தெளிவான, துல்லியமான புரிதலைப் பெறுவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com