
அமெரிக்காவிலுள்ள ஓரிகானில் மனிதர்கள் வசித்ததற்கான ஆரம்பகாலச் சான்றுகள் போர்ட் ராக் குகை (Fort Rock Cave) எனுமிடத்தில் கண்டறியப்பட்டன. இந்தக் குகையானது லேக் கவுண்டியில் ஃபோர்ட் ராக் ஸ்டேட் நேச்சுரல் ஏரியாவுக்கு அருகிலுள்ள ஃபோர்ட் ராக்கிலிருந்து சுமார் 1.5 மைல்கள் (2.4 km) தொலைவில் அமைந்துள்ளது. 1961 ஆம் ஆண்டில் ஃபோர்ட் ராக் குகை தேசிய வரலாற்று அடையாளமாக அறிவிக்கப்பட்டது. மேலும், 1966 ஆம் ஆண்டில் வரலாற்று இடங்களின் தேசிய பதிவேட்டிலும் சேர்க்கப்பட்டது.
ஓரிகான் பல்கலைக்கழகத் தொல்லியல் ஆய்வாளர் லூதர் கிரெஸ்மேனின் என்பவர் ஓரிகானில் 13,200 ஆண்டுகளுக்கு முந்தைய மனித வாழ்விடத்தை அடிப்படையாக கொண்டு 1938 ஆம் ஆண்டு ஃபோர்ட் ராக் குகையில் அகழ்வாய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் ஒரு வகை காட்டுப் புல்லால் நெய்யப்பட்ட சில ஜோடி செருப்புகளையும், சில ஒற்றைச் செருப்புகளையும் கிரெஸ்மேன் குழு மீட்டது. சுமார் 7600 ஆண்டுகளுக்கு முன்பு வெடித்த ஒரு எரிமலையின் குழம்புப் படிமத்துக்குக் கீழே இவை பாதுகாப்பாக இருந்தன. இந்தச் செருப்புகளை கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்புக்கு உட்படுத்தியதில், இவை 10,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையானவை என்பது கண்டறியப்பட்டது.
தற்போது இச்செருப்புகள் யூஜினில் உள்ள ஓரிகான் இயற்கை மற்றும் கலாச்சார வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் ஃபோர்ட் ராக் நகரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் செருப்பு பாணியானது ஃபோர்ட் ராக் பாணி என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில், அவை முதலில் அங்கு கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தினால் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இந்தச் செருப்பு பாணி மற்ற வகைகளிலிருந்து வேறுபட்டது. இவை தட்டையானவையாகவும், கால் விரல்களை மூடியவையாகவும், காலில் இருந்து கழன்று போகாமல் இருக்க பட்டை வைத்தவையாகவும் இருந்தன. மேலும், இவை கூகர் மலை, கேட்லோ குகைகள் போன்ற பிற தளங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
1970 ஆம் ஆண்டில் ஸ்டீபன் பெட்வெல்லால் ஃபோர்ட் ராக் குகையில், குகையின் அகழாமல் மீதமிருந்த பகுதிகளில் கூடை மற்றும் கல் கருவிகள் உட்பட பல வரலாற்று காலத்துக்கு முந்தையக் கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.