
பிரயாக்ராஜ் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அலாகாபாத் மாவட்டத்தின் தலைமை நகராகும். முன்னர் அலகாபாத் என்று அழைக்கப்பட்ட இந்த நகரம் இப்போது அதிகாரபூர்வமாக ப்ரயாக்ராஜ் என்றே அழைக்கப்படுகிறது.
கும்பம் என்றால் பானை அல்லது கும்பம்; மேளா என்றால் திருவிழா. கும்பமேளா என்றால் அமிர்தம் நிரம்பிய கும்பத் திருவிழா என்று அர்த்தமாகும்.
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமம் ஆகும் போது அந்த திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் நீராடுவர்.
கிரகங்கள் ராசிகளில் இருப்பதைப் பொறுத்து பிரயாக்ராஜில் கும்பமேளா நடைபெறும். குரு பகவான் ரிஷப ராசியிலும் சூரிய பகவான் மகர ராசியிலும் சஞ்சரிக்கும் போது இந்த மேளா நடைபெறும்.
45 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா 2025 ஜனவரி 13ம் தேதி துவங்கி பிப்ரவரி 26ம் தேதியுடன் முடிவடைகிறது.
த்ரிவேணி சங்கம நீர் சமுத்திரத்தில் கலக்கும் போது அமிர்தத்தை அருந்துவதற்காக தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே 12 நாட்கள் போர் நடைபெற்றது. தேவர்களுக்கு ஒரு நாள் என்றால் அது மனிதர்களுக்கு ஒரு வருடமாகும். ஆக தேவர்களின் 12 நாட்கள் மனிதர்களின் 12 வருடங்கள் ஆகிறது. ஆகவே 12 வருடங்களுக்கு ஒரு முறை வரும் இந்த கும்பமேளா சிறப்பான திருவிழாவாகிறது. பன்னிரெண்டு பன்னிரெண்டு ஆண்டுகள் அதாவது 144 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் இந்த 2025 திருவிழா மஹா கும்பமேளா என்று அழைக்கப்படுகிறது.
இந்த கும்ப மேளாக்களுக்கு மக்கள் வந்து புனித நீராடி புண்யம் அடைவது பற்றி ஏராளமானோர் வியந்து எழுதியுள்ளனர்.
உலகின் பிரபல நகைச்சுவை எழுத்தாளரான மார்க் ட்வைன் (பிறப்பு: 30-11-1835 இறப்பு: 21-4-1910) தனது ஆஸ்திரேலியப் பயணத்தை முடித்துக்கொண்டு 1896ம் ஆண்டு ஜனவரி மாதம் 18ம் தேதி இந்தியாவுக்கு வந்தார்.
காசியில் கங்கையில் ஒரு புறம் சடலங்கள் எரிந்த நிலையில் தள்ளிவிடப்படுவதையும் இன்னொரு பக்கத்தில் மக்கள் குளித்து விட்டு கங்கை நீரைக் குடிப்பதையும் பார்த்து அவர் அயர்ந்து போனார்.
அவர் அங்கு இருந்த சமயம் டாக்டர் ஹென்கின் என்ற விஞ்ஞானி கங்கை நீரை எடுத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். அவர் காலாராவினால் இறந்து மிதந்து கொண்டிருந்த சடலங்களின் அடியில் இருந்த நீரை எடுத்து ஆய்வு செய்த போது அந்த நீரில் காலரா கிருமிகள் துடிதுடித்துச் சாவதை வியப்புடன் நோக்கினார். தனது ஆய்வின் முடிவை உலகிற்குத் தெரிவித்தார்.
அன்று ஆக்ராவிலிருந்த மார்க் ட்வைன் உடனே, “எப்படி பழங்காலத்திலேயே அந்த நீரின் புனிதத் தன்மையை அவர்கள் கண்டறிந்துள்ளனர்! அவர்கள் கிருமிகள் பற்றி நன்கு அறிந்த விஞ்ஞானிகளா?” என்று வியந்து எழுதினார்.
அத்துடன், தனது ‘MORE TRAMPS ABROAD’ என்ற நூலில், “the one land that all men desire to see and having seen once, by even a glimpse, would not give that glimpse for the show of all the rest of the globe combined” என்று எழுதினார். என்ன மகோன்னதமான பாராட்டு. முழுப் பகுதியையும் படிப்போர் பிரமித்துப் போவார்கள்.
இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு மிக வியந்து இது பற்றி எழுதியது இது:
“This famous river (GANGA) OF INIDA....these journeys and visits of minds gave me an insight into the past. To a somewhat bare intellectual understanding, was added an emotional appreciation and gradually a sense of reality began to creep into my mental picture of India. The land of my forefathers became peopled with living beings, who laughed and wept, loved and suffered, among them were men who seemed to know life and understanding. With the art of their wisdom they have built a structure which gave India a cultural stability which lasted for thousands of years.”
'பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் பாரம்பரியத்தைப் பேணிப் பாதுகாத்து வருவது புனித கங்கை நீராடல்' என்ற அவர் கூற்றை மறுக்க முடியுமா?
அப்படிப்பட்ட நாடு! அப்படிப்பட்ட புனித நதிகள்! மூன்று புண்ணிய நதிகளின் சங்கமத்தில் ஒரு புனித விழா கும்பமேளா!
வியப்போம், தொழுவோம் – கங்கா யமுனா சரஸ்வதியை!