
உண்மையில் நடந்த சம்பவம் இது. தன்னையே எரித்துக் கொண்டு கவிதை பாடினார் ஒரு சம்ஸ்கிருத கவிஞர். வரலாற்றில் பதிவாகி விட்ட அந்தக் கவிஞரின் பெயர் சுகுமாரர். அவர் 'சுகுமார கவி' என்று அழைக்கப்படுகிறார்.
சுகுமாரர் ஒரு குருவிடம் கல்வி பயின்று வந்தார். அவர் நன்றாகப் படிப்பில் தேறி வந்த போதிலும் குரு அவரை அவ்வப்பொழுது கடிந்து கொள்வார். ஒருநாள் அனைவரின் முன்னாலும் சுகுமாரரை மிகக் கடுமையாகத் திட்டிவிட்டார் குரு. இதனால் மனம் நொந்த சுகுமாரர் வகுப்பிலிருந்து வெளியேறினார்.
மிகவும் துக்கமடைந்த அவர் அன்றிரவு தனது குருவைக் கொன்று விடுவது என்ற முடிவுக்கு வந்தார். இரவு நெருங்கியது. யாருக்கும் தெரியாமல் ஒரு பெரிய பாறாங்கல்லைக் கையில் எடுத்துக் கொண்டு குருவின் வீட்டிற்குள் ரகசியமாகப் புகுந்தார் சுகுமாரர். குருவின் தலையில் கல்லைப் போட்டு அவரைக் கொல்வதே அவரது திட்டம்!
அங்குள்ள விட்டத்தின் மீது அவர் ஏறி அமர்ந்து கொண்டார். குருவின் பத்னி அவரை உணவருந்தக் கூப்பிடும் போது குரு வர மறுத்து விட்டார். ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள் என்று மனைவி வினவ குரு, “இன்று சுகுமாரனை மிகக் கடுமையாகத் திட்டி விட்டேன். அதனால் மனம் ஏகமாய் வருத்தப்படுகிறது.” என்றார். உடனே மனைவி, “சுகுமாரன் சிறந்த மாணவன் ஆயிற்றே. அவனைப் போய்த் திட்டலாமா?” என்றார்.
“உண்மை தான்! திட்டி இருக்கக் கூடாது. சிறந்தவனாக இருப்பவன் இன்னும் அதிகமாக முன்னேறி முதலிலும் முதல் மாணவனாக ஆக வேண்டும் என்றுதான் நான் அவனைத் திட்டுகிறேன். ஆனால், இன்று நான் செய்தது பெரிய தப்பு. அவனைப் போல ஒரு மாணவனைப் பார்க்கவே முடியாது. அவனை நமது மகனை விட அதிகமாக நான் நேசிக்கிறேன். சரி, வா, தூங்குவோம்” என்றார் குரு.
அவர்கள் தூங்கப் போனதும் விட்டத்திலிருந்து இறங்கினார் சுகுமாரர். அவர் மனம் எல்லையில்லாத வேதனை அடைந்தது. கண்களில் நீர் கசிந்தது. 'இப்படிப்பட்ட குருவைக் கொல்ல எண்ணிய தனக்கு விமோசனம் உண்டா?' என்று எண்ணலானார்.
மறுநாள் காலை வகுப்பில் அனைவரும் வந்து அமர்ந்தனர். வகுப்பும் முடிந்தது. சுகுமாரர் நேராக குருவிடம் சென்று, “குருவே! ஒரு சந்தேகம். ஒரு மகா பாவி தன் குருவைக் கொலை செய்ய முயன்றால் அவனுக்குப் பாவ பரிகாரம் என்ன?" என்று கேட்டார்.
“ஐயோ! குருவைக் கொலை செய்வதா? இதற்குப் பரிகாரமா? கம்பத்தில் வைக்கோல் போரைச் சுற்றி அதில் தன்னையும் சேர்த்துக் கட்டிக் கொண்டு எரிந்து மெதுவாகச் சாவதுதான் அதற்குப் பரிகாரம்” என்றார் குரு.
“அந்த மகா பாவி நான் தான்” என்று ஆரம்பித்த சுகுமாரர் முதல் நாள் இரவில் நடந்ததைக் கூறினார். குரு சமாதானம் செய்து அவர் எரிந்து சாவதைத் தடுக்க முயன்றார்.
சுகுமாரர் சமாதானம் அடையவில்லை. ஊரைக் கூட்டி கம்பத்தை நட்டார். அதில் தீ மூட்டினார். அவரது வாயிலிருந்து கவிதை மழை பொழியலாயிற்று. 'ஶ்ரீ கிருஷ்ண விலாஸம்' என்ற அற்புதமான நூல் மலர்ந்தது.
12வது ஸர்க்கம் முடிந்தது. 66வது செய்யுள் வந்தது. ஶ்ரீ கிருஷ்ணர் சத்யபாமைக்கு சொர்க்கத்திலிருந்து பாரிஜாத மலரைப் பறித்துக் கொடுத்து விட்டு அவருக்கு ஒவ்வொரு ராஜ்யமாகக் காண்பித்துக் கொண்டு வருகிறார்.
சோழமண்டலத்தையும், பாண்டிய மண்டலத்தையும் காண்பித்த பிறகு சப்த கொங்கணா என்ற ஏழு கொங்கண நாடுகளை விவரிக்க ஆரம்பிக்கிறார்.
அப்போது மெதுவாகப் பரவி வந்த தீ சுகுமாரரின் நாக்கில் பரவவே அவர் நாக்கு வெந்தது. அவரால் பாட முடியாமல் போய் விட்டது. அத்துடன் கவிதை நிற்க அவர் எரிந்து சாம்பலானார்.
அற்புதமான அவரது கவிதை நூலான ஶ்ரீ கிருஷ்ண விலாஸம் உலகம் போற்றும் நூலாயிற்று. பின்னொரு காலத்தில் மகாகவி காளிதாஸ் அதைப் பூர்த்தி செய்ய முனையும் போது ஒரு அசரீரி தோன்றி, “அது அப்படியே இருக்கட்டும்; அதை யாராலும் அந்த அழகுடன் பூர்த்தி செய்ய முடியாது” என்று சொல்லவே அவர் அதைத் தொடர்ந்து பாடி முடிப்பதைக் கைவிட்டார்.
இந்த நூல் இணையதளத்தில் அதன் மூலமான சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும், தெலுங்கிலும் இன்னும் இதர மொழிகளிலும் இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளக் கிடைக்கிறது!
தன்னையே எரித்துக் கொண்டு கவி பாடிய ஒரே கவிஞர் உலகிலேயே சுகுமார கவி ஒருவர் தான்!