சாப்ஸ்டிக் இருந்தால் காதல் வெற்றி! பூண்டு இருந்தால் காதல் தோல்வி! - எங்கே?

Valentine's Day
Valentine's Day
Published on

ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பிப்ரவரி 14ஆம் தேதி, காதலர் தினம் என்று சொல்லப்படும் வாலண்டைன் தினம் கொண்டாட்டப்படுகிறது. இந்த நாளை கொண்டாடும் முறை நாடுகளுக்கிடையே மாறுபடுகின்றன.

வட அமெரிக்கா, கனடா -

சிறு வயது முதலே பள்ளிகளில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில் உடையணிந்து வந்து மாணவ, மாணவியர் ஒருவர்க்கொருவர், வாழ்த்து அட்டைகளும், சாக்லெட் மற்றும் பரிசுப் பொருட்களும் பகிர்ந்து கொள்கின்றனர். 25 குழந்தைகள் இருக்கும் வகுப்பில், ஒவ்வொரு குழந்தையும், மற்ற 24 குழந்தைகளுக்கும் அவர்கள் பெயரிட்டு, கார்ட்டூன் பாத்திரம் போட்ட வாழ்த்து அட்டையை அளிக்கும். பெரியவர்கள், இதயம் வடிவிலுள்ள வாழ்த்து அட்டைகள், சாக்லெட் பெட்டிகள், டெட்டி கரடி பொம்மைகள், உடைகள், அழகு சாதனங்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
மாதம் முழுவதும் 'காதல் திருவிழா' - அடேங்கப்பா, அப்பவேவா?!
Valentine's Day

பிரான்ஸ் -

முதன் முதல் காதலர் தின வாழ்த்து அட்டை உருவானது பிரான்சு நாட்டில். 1415 ஆம் ஆண்டு, ஆர்லியன்ஸ் நகர பிரபு, தன்னுடைய மனைவிக்கு வாழ்த்து அட்டை அனுப்பினார். வாலண்டைன் என்ற பிரான்சு கிராமம், பிப்ரவரி 12 முதல் 14 வரை, காதல் வாழ்த்து அட்டைகள், வண்ண மலர்கள், காதலை ஏற்றுக் கொள்ள வேண்டும் விண்ணப்பங்கள் என்று வீதிகளிலும், வீட்டின் முன் பகுதியிலும், மரங்களிலும் அலங்கரித்து வைப்பார்கள்.

பிலிப்பைன்ஸ் -

இந்த நாள் இளம் காதலர்களுக்கு முக்கியமான நாள். அரசு ஏற்பாடு செய்து நடத்துகின்ற விழாவில், காதலர்கள் திருமணம் அரசின் செலவில் நடைபெறும்.

கானா -

2007ஆம் வருடம் முதல், இந்த நாளை, ‘தேசிய சாக்லெட் தினம்” என்று கொண்டாடுகிறார்கள். சாக்லெட் தயாரிக்கத் தேவையான ‘கோகோ’ மூலப்பொருளை அதிக அளவிற்கு உற்பத்தி செய்யும் நாடு கானா.

இதையும் படியுங்கள்:
காதல் ஒரு காட்டாறு… தெரிஞ்சுக்கோங்க இந்த மேட்டரு!
Valentine's Day

பல்கேரியா –

காதலர் தினம் இங்கு ‘சான் டிரிஃபோன் ஜர்தான்’ அதாவது ‘ஒயின் தயாரிப்பாளர் நாள்’ என்று அறியப்படுகிறது. காதலர்கள், இந்த நாளை, மது அருந்திக் கொண்டாடுகிறார்கள்.

டென்மார்க் -

கைகளால் செய்யப்பட்ட வாழ்த்து அட்டைகளை மட்டுமே உபயோகிப்பார்கள். சாக்லெட், ரோஜா ஆகியவற்றுடன் பனித்துளிகள் என்று சொல்லப்படும் வெள்ளைப் பூக்களை காதலன், காதலி ஒருவர்க்கொருவர் பரிமாறிக் கொள்வார்கள்.

எஸ்டோனியா -

இந்த நாளை, ‘நட்பு நாள்’ என்று அழைக்கிறார்கள். தம்பதிகளுக்கு மட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என்று எல்லோருக்கும் பரிசுகள் பரிமாறி அன்பை தெரிவிக்கிறார்கள்.

ஜப்பான் -

பெண்கள், தங்கள் கணவர் அல்லது காதலருக்கு பரிசுகள் மற்றும் சாக்லெட் வழங்குவார்கள். ஆனால், ஆண்கள் மார்ச் 14ஆம் தேதி வரை, பெண்களுக்குப் பரிசு பொருட்கள் எதுவும் அளிக்கக் கூடாது. மார்ச் 14 “வெள்ளை நாள்” என்று சொல்லப்படுகிறது.

ப்ரேசில் -

இந்த நாள் “டையா டோஸ் நமோரடோஸ்” என்று அறியப்படுகிறது. வழக்கமான பரிசுகள் பரிமாறப்படுவதுடன், குடும்பத்துடன் இரவு உணவு உண்பது முக்கிய அங்கம் வகிக்கிறது.

இதையும் படியுங்கள்:
விமர்சனம் - 'காதல் என்பது பொதுவுடைமை' - சமுதாயம் ஏற்குமா?
Valentine's Day

இங்கிலாந்த் -

காதலர் தினத்தில், பெண்கள் தங்கள் தலையணைகளில் ஐந்து இலைகளை வைத்துக் கொள்வார்கள். அதனால், கனவில் வருங்காலக் கணவர் வருவார் என்பது நம்பிக்கை.

இத்தாலி -

இந்த தினம் வசந்த விழா. திருமணமாகாத பெண்கள், இந்த நாளில், விடியற்காலையில் எழுந்தால், தங்களுடைய வருங்காலக் கணவரைப் பார்க்க முடியும் என்று நம்புகிறார்கள்.

ஸ்லோவேனியா -

பிப்ரவரி 14, வசந்த காலத்தின் முதல் நாள். தாவரங்கள், இந்த நாளிலிருந்து மீண்டும் முளைக்கத் தொடங்கும் என்பது அவர்களது நம்பிக்கை. இந்த நாளில் பறவைகள் ஒன்றுக்கொன்று காதலை முன்மொழிகின்றன என்றும், பனியில் உறைந்து கிடக்கும் வயல் வெளியில் வெறும் காலுடன் நடந்தால் அதைக் காண முடியும் என்றும் நம்புகிறார்கள்.

செக் குடியரசு -

மே 1ஆம் தேதி காதலர் தினம். அந்த நாளில், காதல் தம்பதிகள், கவிஞர் கரோல் ஹைனெக் மச்சாவின் சிலைக்குச் செல்வார்கள். காதலர்கள், அதிர்ஷ்டம் வேண்டி, செர்ரி மரத்தின் அடியில் முத்தமிட்டுக் கொள்வார்கள்.

இதையும் படியுங்கள்:
காதலிக்க நேரமிருக்கு... ஆதலினால் காதல் செய்வீர்!
Valentine's Day

ருமேனியா -

பிப்ரவரி 24, காதலர் தினம். அன்று திருமண நிச்சயதார்த்தம் செய்து கொள்வார்கள். வண்ண மலர்கள் தேடி, இளம் காதலர்கள் காட்டுக்குச் செல்வார்கள். காதலர்கள், பனியால் முகத்தைக் கழுவிக் கொண்டால், அதிர்ஷ்டம் ஏற்படும் என்று நம்புகிறார்கள்.

வேல்ஸ் -

ஜனவரி 25 காதலர் தினம். இது ‘சான் டுவின்வென் நாள்’ எனப்படுகிறது. அழகான வேலைப்பாடுகள் செய்யப்பட்ட மரக்கரண்டிகளை, காதலர்கள், ஒருவர்கொருவர், பரிமாறிக் கொள்வார்கள். இந்த வழக்கம் 16ஆம் நூற்றாண்டிலிருந்து பழக்கத்தில் உள்ளது.

தென் கொரியா -

காதல் ஜோடிகள், எல்லா மாதங்களிலும் 14ஆம் தேதியை காதல் தினமாக கொண்டாடுகிறார்கள். உதாரணத்திற்கு, மே மாதம் ‘ரோஜாக்கள் தினம்’. ஜூன் ‘முத்தங்கள் தினம்’, டிசம்பர் ‘அணைத்துக் கொள்ளும் தினம்’. காதல் துணை கிடைக்காதவர்களுக்கு, ஏப்ரல் 14, ‘கருப்பு தினம்’. அன்று கருப்பு நூடுல்ஸ் சாப்பிடுவார்கள்.

அர்ஜென்டினா -

ஜூலையில் ‘இனிப்பு வாரம்’ என்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது

சைனா -

மார்ச் 15 காதலர் தினம். வண்ண ஆடைகள், வெள்ளி நகைகள் அணிந்து பெண்கள் பல வண்ணத்தில் சாதம் சமைப்பார்கள். அதனை, பட்டுத் துணியில் வைத்து, வீதிகளில் வரும் இளம் ஆண்களுக்கு அளிப்பார்கள். இளைஞர்கள் எடுத்துக் கொண்ட வண்ண சாதத்தில் இரண்டு சாப்ஸ்டிக் இருந்தால் காதல் கைகூடியது. பூண்டு இருந்தால் காதல் தோல்வி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com