

வீட்டிலிருந்தே பொருள் வாங்குதல், உணவு சுவைத்தல், வேலை செய்வது போன்ற நவீன வசதிகள் காரணமாக உலக நாடுகளில் உடல் இயக்கம் குறைந்து சோம்பேறியான நாடுகளின் பட்டியல் உருவாகியுள்ளது.
இதில் இந்தோனேசியா முதல் இடம், சவூதி அரேபியா இரண்டாவது, மலேசியா மூன்றாவது, பிலிப்பைன்ஸ் நான்காவது, தென்னாப்பிரிக்கா, எகிப்து, பிரேசில், இந்தியா எட்டாவது இடம் பிடித்துள்ளன; ஆரோக்கியத்துக்காக நடை பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டியது அவசியம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
எந்த கடையில் எந்த பொருள் விலை குறைவு என தேடிப் பிடித்து வாங்குவது, விரும்பிய உணவை கடை கடையாக சென்று பார்த்து பார்த்து சுவைத்து ரசிப்பது, வேலை தேடி கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்குவது, கிடைத்த வேலையில் வெற்றிகரமாக சம்பாதிக்க காலையில் அலுவலகம்சென்று மாலையில் வீடு திரும்புவது உள்ளிட்ட பணிகள் அனைத்தும் மாறிவிட்டன.
நவீன வாழ்க்கை முறையால் அனைத்தும் வீட்டிலேயே கிடைப்பதால் மக்கள் நடக்க சோம்பேறித்தனம் படுகின்றனர். அந்த வகையில் உலகம் முழுவதும் சோம்பேறியான நாடுகளின் பட்டியல் வெளியாகி உள்ளது.
சோம்பேறியான நாடுகளின் பட்டியல்
இந்தியா
இந்தியாவில் உள்ள மக்கள் நாள் ஒன்றுக்கு சராசரியாக 4,297 அடிகள் மட்டுமே நடப்பதாக அறிக்கை கூறியுள்ளது. அதனால் சோம்பேறியான நாடுகளின் பட்டியலில் உலக அளவில் மக்கள் தொகையில் முதலிடம் பிடித்த இந்தியா எட்டாவது இடம் பிடித்துள்ளது.
இந்தியாவில் உள்ள பெரு நகரங்களான டெல்லி, மும்பை பெங்களூரு போன்ற வற்றில் உள்ள மக்களின் வாழ்க்கை முறை மாற்றங்களும், வாகனங்களின் மீது கொண்ட அதீத நம்பிக்கையும், உட்கார்ந்தே வேலை செய்வது போன்ற காரணங்களால் மக்கள் நடந்து செல்வது குறைந்துள்ளதாக அறிக்கையின் படி சொல்லப்பட்டுள்ளது.
பிரேசில்
தென் அமெரிக்காவின் மிகப்பெரிய நாடாகவும்,உலகின் ஐந்தாவது பெரிய நாடாகவும் விளங்கும் பிரேசிலில் நிலவும் சமூக, பொருளாதார வேறுபாடுகள் மக்களின் செயல்பாட்டை குறைத்துள்ளன. இதனால் பிரேசில் மக்கள் 4,289 அடிகள் மட்டுமே சராசரியாக நாள் ஒன்றுக்கு நடப்பதால் சோம்பேறியான நாடுகளின் பட்டியலில் ஏழாவது இடம் பிடித்துள்ளது.
மக்கள் அதிகமாக நடக்கவும்,சுறுசுறுப்பாக இருக்கவும் சமீபத்தில் அரசு மற்றும் சுகாதார துறைகள் பிரேசில் நாட்டில் ஊக்குவித்து வருகின்றன.
எகிப்து
வடக்கு ஆப்பிரிக்க நாடாகவும், உலகின் 15 வது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும் இருக்கும் எகிப்து மக்கள் ஒரு நாளைக்கு 4,315 அடிகள் மட்டுமே சராசரியாக நடப்பதால் சோம்பேறியான நாடுகளின் பட்டியலில் ஆறாவது இடம் பிடித்துள்ளது. இந்நாட்டில் நிலவும் அதிக வெப்பமும், நகரங்களில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலும் இங்குள்ள மக்களின் தினசரி நடை பயிற்சியை பாதிப்பதாக காரணங்கள் கூறுகின்றன.
தென்னாப்பிரிக்கா
ஆப்பிரிக்கா கண்டத்தின் தெற்கில் உள்ள தென்னாப்பிரிக்கா நாட்டில் வாழ்க்கை முறை மாற்றங்களும்,நகரமயமாக்களும் அங்குள்ள மக்களின் உடல் செயல்பாட்டை குறைத்துள்ளதாக கூறப்படும் நிலையில் இங்குள்ள மக்கள் நாளொன்றுக்கு சராசரியாக 4,105 அடிகள் மட்டுமே நடக்கிறார்கள். இதனால் சோம்பேறியான நாடுகளின் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா ஐந்தாவது இடம் பிடித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் (4-வது இடம்)
ஆசியாவின் தென்கிழக்கு பகுதியில் பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான பிலிப்பைன்ஸ் நாட்டில் நல்ல போக்குவரத்து வசதிகளும், சாலைகள், உள்கட்டமைப்பு போன்ற வளர்ச்சியின் காரணமாக மக்கள் வாகனங்களை அதிகம் பயன்படுத்தி நடப்பதை தவிர்க்கிறார்கள்.
இதனால் நாள் ஒன்றுக்கு 4,008 அடிகள் மட்டுமே பிரேசில் மக்கள் நடப்பதால் இந்நாடு சோம்பேறியான நாடுகளின் பட்டியலில் நான்காவது இடம் பிடித்துள்ளது.
மலேசியா (3-வது இடம்)
தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் உள்ள நகரங்களான கோலாலம்பூர்,பினாங்கில்அதிகமான வாகனங்களும் கடும் போக்குவரத்து நெரிசலும் நிலவுகிறது. இதன் காரணமாக மலேசியா மக்கள் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3,963 அடிகள் மட்டுமே நடப்பதால் சோம்பேறியான நாடுகளின் பட்டியலில் மலேசியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
சவூதி அரேபியா (2-வது இடம்)
சவூதி அரேபியா நாட்டில் மிக அதிகமான வெப்பமான வானிலை இருக்கிறது. அதனால் இங்குள்ள மக்கள் அதிக நேரம் உடல் செயல்பாடு இல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். இதன் காரணமாக நாளொன்றுக்கு சராசரியாக 3807 அடிகள் மட்டுமே சவுதி அரேபிய மக்கள் நடப்பதால் சோம்பேறியான நாடுகளின் பட்டியலில் சவுதி அரேபியா இரண்டாவது இடம் பிடித்துள்ளது.
இந்தோனேசியா
மிகவும் குறைவாக நடக்கும் நாடாகவும் சோம்பேறியான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்தோனேசியாவில் உள்ள மக்கள் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3,513 அடிகள் மட்டுமே நடப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவீன மாற்றங்கள் உடல் ஆரோக்கியத்தை கெடுக்காத வகையில் நம்மை நாம் பாதுகாத்துக் கொண்டு மாற்றத்திற்கு உட்பட்டு செயல்பட்டால் நாம் மட்டுமல்ல நாடும் முன்னேறும்.