சீனாவுக்கும் ஜப்பானுக்கும் நடுவில் இருக்கும் தீபகற்ப பகுதி தான் கொரியா. அதன் முந்தைய பெயர் கோரியோ. கிமு 2333 இல் கோஜோசியன் ராஜ்ஜியத்தில் இருந்து கொரியாவின் வரலாறு தொடங்குகிறது. ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்த கொரியாவை 1910 ஆம் ஆண்டு ஜப்பான் கைப்பற்றியது. ஜப்பான் ஆளுமையில் கொரியா தொழில்மயமாக்கப்பட்டு சிறப்பான வளர்ச்சியை பெற்றது. ஆயினும் அதன் பொருளாதாரம் சுரண்டப்பட்டது.
இரண்டாம் உலகப் போரில் நேசநாடுகள் ஜெர்மனி, இத்தாலியை வீழ்த்தினாலும் ஜப்பானை அடக்க முடியவில்லை. மோசமான தாக்குதல்கள் மூலம் அமெரிக்க இராணுவத்தை சர்வநாசம் செய்திருந்தது ஜப்பான். கொரியாவை கைப்பற்றி ஜப்பானுக்கு பாடம் கற்பிக்க நினைத்தது அமெரிக்கா.1945 பிப்ரவரியில் நடந்த யால்டா மாநாட்டில், அமெரிக்க அதிபர் பிராங்க்ளின்-டி-ரூஸ்வெல்ட், 'நேசநாடுகளின் நான்கு அதிகார அறங்காவலர் பதவியை கொரியாவில் உருவாக்க முடிவை எடுத்தார்'. 1945 ஜூலையில் நடந்த பாஸ்டம் மாநாட்டின் மூலம் ஜப்பானை சரணடைய அமெரிக்கா வலியுறுத்தியது.
இரண்டாம் உலகப்போரின் இறுதியில் அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டு வீசித் தாக்குதல் நடத்தி நிலைகுலைய செய்தது.1945 ஆகஸ்ட் 15இல் அமெரிக்காவிடம் ஜப்பான் சரணடைந்தது. ஜப்பான் ஆக்கிரமித்த கொரியாவில் வடபகுதியில் சோவியத் ராணுவமும் தென்பகுதியில் அமெரிக்க ராணுவமும் கைப்பற்றின. போரில் தோற்றது ஜப்பான். ஆனால், கொரியாவுக்கு வாழ்நாள் தண்டனை கொடுக்கப்பட்டது.
வடகொரியாவை கைப்பற்றிய சோவியத் வீரர்கள், ஜப்பான் மற்றும் கொரிய முதலாளிகளின் வீட்டில் கொள்ளையடித்தனர். இவர்களோடு கொரிய விவசாயிகளும் கொள்ளையில் ஈடுபட்டனர். ஏராளமான கொரியப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். இதே கொள்ளையும், பாலியல் வல்லுறவு கொடுமைகளையும் தென்கொரியாவில் அமெரிக்காவும் செய்தது.
1945 டிசம்பரில் நடந்த மாஸ்கோ மாநாட்டின் படி கொரியாவின் வடபாகத்தை சோவியத் மற்றும் சீனாவும், தென்பாகத்தை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் 5 ஆண்டு காலம் மட்டும் ஆட்சி செய்வதாக முடிவு எடுக்கப்பட்டது. பின் சோவியத்-அமெரிக்க பனிப்போரில் 1946,1947 இல் நடைபெற்ற மாநாடுகள் தோல்வியுற்றது. விடுதலை வேண்டி சோவியத் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக போராடிய கொரிய மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர்.
1947 நவம்பரில் கொரியாவை விட்டு அமெரிக்க, சோவியத் படைகள் வெளியேற ஐநா.சபை உத்தரவிட்டது. மேலும் இரு பகுதிகளிலும் தேர்தல் நடத்தவும் பணித்தது. தென்கொரியாவில் மட்டுமே தேர்தல் நடந்தது, வடகொரியாவில் சோவியத் தேர்தலை புறக்கணித்தது. தென்கொரியா தேர்தலில் கொரிய குடியரசு கட்சியின் சிங்மென் ரீ வெற்றி பெற்றார். உடனடியாக வட கொரியாவில் தேர்தல் இன்றி கம்யூனிச ஆட்சியை கிம் இல் சுங், சோவியத் அதரவுடன் நிறுவினார். அவரது குடும்பம் தான் இன்றுவரையில் வடகொரியாவை தொடர்ச்சியாக ஆள்கிறது.
இரு கொரிய நாடுகளும் ஒன்றின் மீது மற்றொன்று முழு உரிமை கோரியது. வட கொரியா தென்கொரியா மீது படையெடுத்து இணைக்க முயன்றது. 3 ஆண்டுகள் கடுமையாக நிகழ்ந்த போரில் 22 லட்சம் கொரியர்களும் 6 லட்சம் சீனர்களும் 36500 அமெரிக்கர்களும் கொல்லப்பட்டனர்.
வடகொரியாவின் மோசமான சர்வாதிகாரத்தால் உலக நாடுகள் ஒதுக்கி வைத்துள்ளனர். அங்கு மக்கள் உணவுக்கு வழியின்றி தவிக்கின்றனர். சிறுசிறு விஷயங்களுக்கும் அரசினால் கொல்லப்படுகின்றனர். வடகொரியாவில் இருந்து மக்கள் தென்கொரியாவுக்கு தப்பி செல்ல அபாயகரமான முறையில் எல்லையை தாண்டுகின்றனர். பல நேரங்களில் இவர்கள் வடகொரியப் படையால் கொல்லப்படுகின்றனர்.
தென்கொரியா நல்ல வளர்ச்சியைப் பெற்றுள்ளது. மக்கள் நடுத்தர வர்க்கமாக இருந்தாலும் சுதந்திரத்தை அனுபவித்து வாழ்கின்றனர். ஆனால் இரு நாடுகளும் எப்போதும் முறுகல் நிலையிலேயே உள்ளன.
நாடு பிளவுபட்டதால் மக்கள் தங்கள் உறவுகளை பிரிந்து வாடுகின்றனர். தென்கொரியாவை சேர்ந்த சுமார் 1.30 லட்சம் பேர் வடகொரியாவில் உள்ள உறவினர்களை சந்திக்க விருப்பமனு அளித்துள்ளனர். வட கொரியா அனுமதிக்கும் முன்னரே 80000 பேர் இறந்துவிட்டனர். மீதமுள்ள 50000 பேர் அனுமதிக்காக காத்திருக்கிறார்கள். இரு நாடுகளும் எப்போது இணையும் என்று கொரிய மக்கள் ஏங்கிக் கொண்டுள்ளனர்.