

தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் உள்ள வாகைகுளம் என்ற கிராமத்தில் விளக்குகள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப் படுகின்றன.
இந்த விளக்குகள் உலகம் தரம் வாய்ந்ததாக உள்ளன. பாரம்பரியமிக்க பித்தளை விளக்குகள் இங்கு பிரபலம். ரூபாய் மூன்று முதல் மூன்று லட்சம் வரை இங்கு விளக்குகள் கிடைக்கின்றன.
இங்குள்ள தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் சுமார் 150 ஆண்டு காலமாக தலைமுறை தலைமுறையாக இந்த தொழிலை செய்து வருகின்றனர். களிமண் அச்சு மூலம் நேர்த்தியான முறையில் குத்து விளக்குகள், காய் விளக்குகள், கம்பி விளக்குகள் மற்றும் அஷ்டலஷ்மி விளக்கு, அன்னப்பறவை விளக்கு, மயில் விளக்கு என விதவிதமாக இங்கே கிடைக்கின்றன. இங்கு உள்ள விளக்குகள் நாச்சியார் கோவில் விளக்குகளுக்கு இணையாக பேசப்படுகின்றன.
நீண்ட காலம் உழைக்கக்கூடிய வகையில் பித்தளையில் மிகவும் நேர்த்தியாக விளக்குகள் தயார் செய்யப் படுகிறது. இவை தவிர குடங்கள், சொம்பு பாத்திரங்கள் போன்றவையும் இங்கு நல்ல முறையில் செய்து கொடுக்கிறார்கள்.
இந்த ஊரில் எண்ணற்ற பட்டறைகளும், கூட்டுறவு சொசைட்டி மற்றும் பூம்புகார் சொசைட்டி மூலம் ஆர்டர் எடுக்கப்பட்டு சிறந்த முறையில் செய்து கொடுக்கிறார்கள்.
கல்யாணம் சடங்கு போன்ற விசேஷங்களுக்கு வேண்டிய சீர் சாமான்கள் மிகக் குறைந்த விலையில் நேர்த்தியாக கிடைக்கும்.
இவை தவிர கோவில் கலசங்கள், கோவில் மணி, கோவிலுக்கு சம்பந்தப்பட்ட மடப்பள்ளி மற்றும் பூஜை சாமான்களும் இங்கு சிறந்த முறையில் செய்து கொடுக்கப்படுகிறது.
மணப்பெண் சீர் வரிசைக்கு ஏற்றபடி பாத்திரங்கள் தயார் செய்து கொடுக்கிறார்கள். இங்குள்ள விளக்குகள், செம்புகள், கொப்பரை, கோவில் கலசங்கள் மிகவும் பிரபலமானவை. தற்போது மூலப்பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் வரி இவற்றால் சில பட்டறைகள் மூடப்பட்டுள்ளன.
இந்த விளக்குகள் மற்றும் இதர சாமான்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமும் அருகில் உள்ள அம்பாசமுத்திரம் பாத்திரக்கடைகள் மூலமும் விற்பனை செய்து வருகிறார்கள். மூலப்பொருட்கள் விலை உயர்வு மற்றும் கூலி வேலை செய்பவர்கள் தட்டுப்பாட்டால் இங்குள்ள தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்குள்ள கலைஞர்கள் சுவாமி சிலைகள் சிற்பங்கள் வடிவமைப்பதில் சிறந்து விளங்குகிறார்கள். சுவாமி சிலைகள், அம்மன் சிலைகள், பெருமாள், சங்கிலி பூதத்தார், ஐயப்பன் போன்ற விக்கிரகங்கள் ஆர்டரின் பெயரில் செய்து கொடுக்கிறார்கள்
சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலாக இங்குள்ள கைவினை கலைஞர்கள் பரம்பரை பரம்பரையாக இத்தொழிலை செய்து வருவது சிறப்பான அம்சமாகும். பழைய பித்தளை பொருட்களை வியாபாரிகளிடமிருந்து குறைந்த விலையில் வாங்கி அதனை உருக்கி பாத்திரங்கள் விளக்குகள் செய்யப்படுகின்றன.
இந்தப் பகுதியில் உள்ள வாழைப்பூ விளக்கு, காய் விளக்கு, கம்பி விளக்கு, குத்துவிளக்கு, லட்சுமி விளக்கு, அஷ்டலட்சுமி விளக்கு தூண்டாமணி மற்றும் கோவில்களுக்கு தேவையான விளக்குகள், பொருட்கள் செய்து கொடுக்கப்படுகிறது. தேவையான பொருட்களை ஆர்டர் எடுத்து அந்த ஆர்டரின் பெயரில் அதனை களிமண்ணில் அச்சு எடுத்து அதில் பித்தளையை உருக்கி அச்சில் வார்த்து தயார் செய்கின்றனர்
அதன் பின்னர் கைவேலைப்பாடுகள் மிகவும் நேர்த்தியாக செய்யப்படுகிறது. இந்த வாழைப்பூ விளக்கு, கம்பி விளக்கு, காய் விளக்கு போன்றவை மிகவும் நேர்த்தியாக இருப்பதால் மக்கள் அதிக அளவில் இதனை விரும்பி வாங்கி செல்கின்றனர். இங்கு அதிக அளவில் பட்டறைகள் இருந்தாலும் தற்போது உத்தரப்பிரதேசம் மொராதா பாத்தில் இருந்து குறைந்த விலையில் தமிழகத்தில் விற்பனை செய்யப்படுவதால் இந்த தொழிலுக்கு கொஞ்சம் மந்த நிலை ஏற்பட்டுள்ளது.
மொரதாபார்த்தில் உள்ள விளக்குகளால் இங்குள்ள கைத்தொழில் நலிவுற்று வருகிறது. இதன் மூலம் பெரிய நெருக்கடிகளை சமாளித்து வருகிறார்கள். விளக்குகள் செய்யும்போது ஆகம விதிகள் படி 10 முதல் 20 நாட்கள் வரை எடுத்துக்கொண்டு மிகவும் நேர்த்தியாக செய்து கொடுக்கிறார்கள். சிறிய விளக்குகள் முதல் பெரிய விளக்குகள் வரை கார்த்திகை மற்றும் விசேஷ நாட்களில் அதிக அளவில் ஆர்டர் எடுத்து செய்யப்படுகிறது.
விளக்குகள் 10 முதல் 20% வரை தள்ளுபடி செய்யப்படுகிறது. சிறிய விளக்குகள் மூன்று சென்டிமீட்டர் முதல் பெரிய விளக்குகள் ஆறடி உயரம் வரை கிடைக்கின்றன. பெரிய நிறுவனங்கள், பெரிய நகை கடைகள், ஜவுளிக்கடைகள், அலுவலகங்கள், விமான நிலையங்கள் இவற்றில் வரவேற்பு அறையில் இந்த விளக்குகள் அலங்கரித்து வருகின்றன.
பெரிய அளவிலான சரவிளக்குகள் அலங்கார விளக்குகள் போன்றவை மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும் செய்யப்படுகிறது.
இங்குள்ள பட்டறைகளில் சிறிய விளக்குகள் முதல் சட்ட விளக்கு, சரவிளக்கு, அடுக்கு விளக்கு, பாவை விளக்கு, நந்தி விளக்கு, அன்னப்பறவை, அஷ்டலஷ்மி, மயில் போன்ற விளக்குகளும், கேரளவகை தொங்கு விளக்கு, சரவிளக்கு என 200க்கும் மேற்பட்ட வடிவங்களில் செய்து கொடுக்கிறார்கள்.
வெளிநாட்டவர்கள் சுற்றுலா வருபவர்கள் பூம்புகார் சொசைட்டிக்கு வந்து விளக்குகளை வாங்கி செல்கின்றனர்.