

ஈரானுக்கும் ஓமன் நாட்டுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையில் உள்ள ஒரு குட்டி ஜலசந்தி தான் ஹார்மோஸ் ஜலசந்தி. இந்த ஜலசந்தி தான் உலக நாடுகளை அலற வைத்துக் கொண்டிருக்கிறது. ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் அவர்கள் நாட்டு உள் விவகாரம் என்று ஒதுங்கி இருந்த உலக நாடுகள் இன்று அலறிக்கொண்டு இருக்கின்றன. காரணம் எண்ணெய்...
உலக உற்பத்தியில் தயாராகும் எண்ணெயில் ஐந்தில் ஒரு பகுதி இந்த ஜலசந்தி வழியாகத்தான் செல்ல வேண்டும். அதாவது நாள் ஒன்றுக்கு 200 லட்சம் பேரல்கள் இந்த ஜலசந்தி வழியாக சென்று உலகை இயக்கிக் கொண்டு இருந்தது. இந்த இயக்கம் நின்று போகுமோ என உலக நாடுகள் அஞ்சுகிறது.
பெட்ரோலிய பொருட்கள் கொண்டு செல்ல தடை விதித்த ஈரான் தற்போது இந்த ஜலசந்தி வழியாக கடலுக்கு அடியில் செல்லும் இணைய சேவைக்கான கேபிள்களையும் துண்டிக்க திட்டமிட்டுள்ளது.
இது மட்டும் நடந்து விட்டால் உலகம் முழுவதும் இணைய சேவை பாதிக்கப்படும். இத்தகைய விபரீதம் எதுவும் நடக்கக்கூடாது என 2000 வீரர்களை கொண்ட திரி போலி என்ற புதிய போர்க்கப்பலை அமெரிக்கா அனுப்பியது.
அமெரிக்கா இந்த கப்பலை போருக்காக அனுப்பவில்லை. ஹார்மோஸ் தீவை கைப்பற்றி எண்ணெய் வளத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வரி விதிப்பது தான் ட்ரம்பின் யோசனை என சொல்லப்படுகிறது.
ஆனால் இவை எதை பற்றியும் கவலைப்படாமல் ஈரான் தனக்கு வேண்டிய கப்பல்களை மட்டும் விடுவித்து தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. அப்படி விட்ட கப்பல்கள் சில தான் இந்தியாவுக்கு வந்துள்ளன. இதனால் நாம் கொஞ்சம் பெருமூச்சு விட்டுக் கொள்ளலாம்.
ஒரு காலத்தில் ஹார்மோஸ் தீவும் இந்த ஜலசந்தியும் மிக அமைதியான பகுதியாக இருந்தது. பாரசீக வளைகுடாவுக்கும் ஓமன் வளைகுடாவுக்கும் இடையில் அமைந்துள்ள இந்த ஹார்மோஸ் ஜலசந்தி வளைகுடா நாடுகளின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் முக்கிய பங்கு வகித்தது.
முகலாய அரசர் பாபர் காலத்தில் இந்த ஜலசந்தி வழியாக பாதாம், மசாலா பொருட்கள், பட்டுப் பொருட்கள், முத்துக்கள், குதிரைகள் முதல் எண்ணெய் வரை ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. அப்போது போக்குவரத்து அதிகம் இல்லை.
ஆனால் ஈரானிலும் வளைகுடா நாடுகளிலும் எண்ணெய் வளங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது இந்த ஜலசந்தி முக்கியத்துவம் பெற்றது.
ஹார்மோஸ் ஜலசந்திக்கு அந்த பெயர் வர காரணம், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஈரானில் சராஸ்டியன் மதம் மிகப் பிரபலமாக இருந்தது. அதன் வழிபாட்டு முறைகளை ஈரானிய மக்கள் அதிகம் பின்பற்றி வந்தனர். மதத்தில் உள்ள ஒரு கடவுளின் பெயர் ஹீரா மஸ்தா. அதுவே நாளடைவில் மருவி ஹார்மோஸ் எனப்பட்டது. இது ஈரானில் கடவுளின் தேசம் என அழைக்கப்படுகிறது.
இந்த ஹார்மோஸ் தீவுக்கு ‘வானவில் தீவு’ என்று மற்றொரு பெயரும் உண்டு. அதற்கு காரணம் இங்கு உள்ள மண் பல வண்ணங்களில் காட்சி அளிக்கும். பார்ப்பதற்கு வானவில் நிறங்களில் காணப்படும். இந்த மண் அழகு சாதன பொருட்கள், பெயிண்ட் மற்றும் பல்வேறு வண்ணப் பொருட்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்குள்ள மண்ணுக்கு கடும் கிராக்கி உள்ளது.
ஈரானுக்கு சுற்றுலா வருபவர்கள் இந்த ஹார்மோஸ் தீவுக்கு வராமல் செல்ல மாட்டார்கள். இங்கு சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு குட்டி குட்டியாக முட்டை வடிவில் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அதில் சுற்றுலா பயணிகள் தங்கிக் கொள்ளலாம்.
கடற்கரையை ஒட்டி பல வண்ணங்களில் பூங்காக்கள் காட்சியளிக்கின்றன. இந்த தீவில் போர்ச்சுகீசிய காலத்தில் கட்டிய கோட்டையும் உள்ளது. தற்போது அனைத்தையும் இழந்து நிற்கிறது இந்த ஹார்மோஸ் தீவு.
1507ஆம் ஆண்டிலேயே போர்ச்சுகீசியர்கள் இந்த தீவை கைப்பற்றி இந்த வழியாக செல்லும் பொருட்களுக்கு வரி விதித்தார்கள். 1908ஆம் ஆண்டில் ஈரானில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அதை சுரண்டுவதில் பிரிட்டிஷ்காரர்கள் முக்கிய பங்கு வகித்தனர். ‘ஆங்கிலோ பெர்சியன் ஆயில் கம்பெனி’ என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கி ஈரானின் எண்ணெய் வளத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
1953இல் பிரிட்டிஷ்காரர்களும் அமெரிக்கர்களும் இணைந்து ஈரானில் மீண்டும் ஒரு புரட்சியை அரங்கேற்றி மன்னரை பதவியில் அமர்த்தியது. எண்ணெய் மூலம் கிடைக்கும் லாபத்தை எண்ணெய் நிறுவனங்களும் பிரித்துக் கொள்ளும் வகையில் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. 1979ஆம் ஆண்டில் ஈரானில் நடந்த புரட்சிக்கு பிறகு குறிப்பாக ஈரான், ஈராக் இடையே எட்டு ஆண்டுகள் நீடித்தபோரில் ஹார்மோஸ் ஜலசந்தியின் குரல்வளை நெரிக்கப்பட்டது. அவ்வழியை சேர்ந்த எண்ணெய் கப்பல்களை இரு நாடுகளும் தாக்கின. இந்த காலகட்டத்தில் எண்ணெய் கப்பல்கள் கடக்க உதவிய அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை அனுப்பி வைத்தது.
தனக்கு பிரச்னை வரும்போது எல்லாம் ஹார்மோஸ் வளைகுடாவை ஹைஜாக் செய்து உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது ஈரான். இப்போதும் அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது. தங்கள் நாட்டை தாக்குவதை நிறுத்த வேண்டும். அதற்கு மற்ற நாடுகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது ஈரான். அது நடக்கவில்லை. இதனால் உலகத்தை தன் பக்கம் ஈர்ப்பதற்காக இந்த ஹார்மோஸ் ஜலசந்தியை பயன்படுத்துகிறது. இதனால் தான் ஈரான் இந்த ஜலசந்தியை பிணைய கைதியாக பிடித்து வைத்து மற்ற நாடுகளை மிரட்டி வருகிறது.
இதன் மூலம் மற்ற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவிக்குமா , அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவிக்குமா என்று தெரியவில்லை. விரைவில் போர் பிரச்னைக்கும் எண்ணெய் பிரச்னைக்கும் விடிவுகாலம் வந்தால் சரி.