குடிமராமத்து என்றால் என்ன? அதென்ன குடிமராமரத்துப் பணி?

kudimaramathu work
kudimaramathu work
Published on

அரசியல் கட்சிகளின் விவசாயம் தொடர்பான போராட்டங்களின் போது, அரசு குடிமராமத்துப் பணிகளைச் செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதை நாம் கவனித்திருப்போம். குடிமராமத்து என்றால் என்ன? அதென்ன குடிமராமரத்துப் பணி? என்றுதானேக் கேட்கிறீர்கள்.

நீர்நிலைகளைப் பராமரிக்கும் பணிகளை மராமத்துப் பணி என்கின்றனர். கோடைக் காலங்களில், வேளாண் குடிமக்களில் வீட்டுக்கு ஒருவர் என வேளாண்மை மற்றும் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், குட்டைகள், கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களைத் தூர்வாரி ஆழப்படுத்தியும் மற்றும் அகலப்படுத்தியும் பணிகள் மேற்கொண்டனர். மேலும், பழுதடைந்த மடைகளை பழுது நீக்குவர். குடிமக்களின் இப்பணியை குடிமராமத்துப் பணி என்று அழைப்பர்.

குடிமராமத்தின் போது ஏரியின் உட்பரப்பில் கரையின் உயரத்தைப் போல இரு மடங்கு தூரம் தள்ளி தூர் வாரத் தொடங்குவார்கள். அதாவது, கரையின் உயரம் 10 மீட்டர் எனில் ஏரியின் உள்பகுதியில் 20 மீட்டர் தள்ளி தூர் வாருவார்கள்.

கரையின் அடிப்பகுதி பலவீனம் ஆகி அதனால் ஏரிக்கரை உடைந்து விடக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்வார்கள். இதன் பெயர் தாக்கு எடுப்பது. இப்படி எடுக்கப்படும் ஏரியின் மண், மழைக் காலத்தில் ஏரி ஓடியிருக்கும் பள்ளங்களில் முதலில் கொட்டி சமப்படுத்துவார்கள்.

மேலுமுள்ள மண்ணைக் கொண்டு கரைகளை பலப்படுத்துவர். இந்தப் பணிகளுக்குப் போக மீதம் இருக்கும் வண்டல் மண் விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். மண்பாண்டங்கள் செய்வோர், வீடு கட்டுவோர் மற்றும் ஊரின் இதர தேவைகளுக்கும் மண் பயன்படுத்தப்படும்.

இதையும் படியுங்கள்:
காக்கி நிறம் போலீஸ்துறையின் சீருடையாக மாறியது எப்படி?
kudimaramathu work

அடுத்ததாக, ஏரியில் வளர்ந்திருக்கும் புதர்கள், முள் செடிகள், மழைக் காலத்தில் அடித்துவரப்பட்ட குப்பைகள் போன்றவற்றை அப்புறப்படுத்துவார்கள். ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். மதகுகள், கலுங்குகளில் இருக்கும் அடைப்புகள் நீக்கப்படும். இவைதான் குடிமராமத்தின் அடிப்படைப் பணிகள்.

ஆண்டு தோறும் குடிமராமத்துப் பணி மேற்கொள்ளப்படுவதாலும், நீர் நிலைகளில் கூடுதல் மழை நீரைத் தேக்கி வைப்பதாலும், நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது. தூர் வாருவதற்காக தோண்டப்பட்ட சத்தான வண்டல் மண், வயல்களில் உரமாக இடப்படுகிறது.

குளங்கள், ஏரிகள் போன்றவை சுதந்திர இந்தியாவில் அரசின் பொதுப்பணித்துறைக்குச் சென்ற பின் குடிமராமத்துப் பணிகள் இல்லாமல் போயின. இந்திய விடுதலைக்குப் பின்னர் குடிமராமத்துப் பணிகள், மாநில அரசுகளின், பொதுப் பணித் துறையின் கீழ் செயல்படும் நீர் பாசானத் துறை மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், 2017 ஆம் ஆண்டில் வேளாண் மக்களின் பங்களிப்புடன் நீர் நிலைகளைத் தூர்வாரி, பராமரிக்கும் குடிமராமத்துத் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தியது. 2016 முதல் 2017 ஆம் ஆண்டுக்கு ரூ.100/- கோடி மற்றும் 2017 முதல் 2018 ஆம் ஆண்டுக்கு ரூ.300/- கோடியில் வெள்ளப் பாதிப்பைக் குறைக்கவும், நீர்நிலையை அதிகரிக்கவும், வறட்சியைக் குறைக்கவும், அனைத்தையும் மீட்டெடுக்கவும் இந்தச் சிறப்புத் திட்டத்திற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
இன்று சொகுசு ஹோட்டல்களாக மாறியிருக்கும் அன்றைய 7 அரண்மனைகள்!
kudimaramathu work

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com