பெண்கள் வாழ்நாளில் ஒரு முறை தான் குளிப்பார்கள் என்றால் நமக்கு ஆச்சர்யத்துடன் அதிர்ச்சியும் ஏற்படும். எப்படி இந்த பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க குளிக்காமல் இருக்கிறார்கள் என்ற ஆச்சரியமும் ஏற்படுகிறது. ஆப்பிரிக்க கண்டத்தில் நமீபியா நாட்டில் வட பகுதியில் ஹிம்பா என்ற 50,000 மக்கள் தொகை கொண்ட ஒரு சமூகம் உள்ளது.
மற்ற ஆப்பிரிக்க பழங்குடிகள் போல இவர்கள் மூர்க்கமானவர்கள் இல்லை. இவர்கள் மிகவும் அமைதியான வாழ்க்கை வாழும் ஆயர் இனக் குழுவினர். இவர்கள் வறண்ட மேய்ச்சல் நிலங்களை கொண்ட பகுதிகளில் குடிசை உருவாக்கி வாழ்கின்றனர். இவர்கள் நிலையான குடிசைகளில் தங்கினாலும் மேய்ச்சலுக்காக சில காலம் குடும்பத்தை பிரிந்து வாழ்கின்றனர்.
ஹிம்பா மக்களின் குலத் தொழில் ஆடு மாடு மேய்ப்பது தான். சிறிய அளவில் விவசாயமும் அவர்கள் செய்கின்றனர். ஹிம்பா இன மக்களில் கால்நடைகளின் எண்ணிக்கையை பொறுத்து தான் அவர்களுக்கு மதிப்பு தரப்படுகிறது. அதனால், ஆண்கள் அனைவரும் தங்களுக்கு என்று மந்தையோ அல்லது சிறு கால்நடைக் குழுவோ கட்டாயம் வைத்திருப்பார்கள்.
இவர்கள் வீட்டு திருமணத்தில் கூட சீர் வரிசையாக ஆடு, மாடு வழங்கப்படுகிறது . ஹிம்பா இன ஆண் நல்ல மேய்ப்பராக இருப்பது அவசியம். அந்த ஆணுக்கு தாய் மாமனிடம் இருந்து ஆநிரையும் , ஆட்டு மந்தையும் பெறப்படுகிறது.
முகுரு என்ற பரம்பொருள் இறைவனை இவர்கள் வணங்கி வழிபடுகிறார்கள். மேலும் இவர்கள் தங்களின் முன்னோர்களையும் வழிபாடு செய்கின்றனர். வாரத்தின் சில நாட்களில் தீ முட்டி முன்னோர்கள் வழிபாடு செய்கின்றனர். பூசாரி சாமியாடி குறி சொல்லுவார். இந்த மக்கள் மந்திரவாதிகளுக்கும் , சூனியம் வைப்பவர்களுக்கும் பயப்படுகின்றனர். இவர்களின் வாழ்வியலில் குளிப்பதை தவிர பல விஷயங்கள் தமிழர்களின் பண்பாட்டை ஒத்தது.
ஹிம்பா மக்கள் மிகுந்த ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். பெண்கள் பெரும்பாலும் விறகு பொறுக்குவது, சமைப்பது , விவசாயம் செய்வது போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர். ஒரு பெண்ணின் குழந்தையை மற்ற பெண்ணோ, மற்ற சிறுமியோ பராமரிக்கின்றனர். இங்கு அரசு தடை செய்த போதிலும் குழந்தை திருமணங்கள் நடைபெறுகிறது.
பாடல்கள் ஹிம்பா மக்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கை பெறுகின்றது. பெண்கள் வளரத் தொடங்கியதும் பாடல்கள் பாட கற்றுக் கொள்கிறார்கள். பெண் தன் துணையை கவரவும் பாடல்களை பாடுகிறாள். திருமண வேளையிலும் பாடல்கள் பாடப்படுகின்றன. பின்னர் ஜோடிகள் கூடும் வேளையிலும் பெண் பாடுகிறாள். ஒரு பெண் கர்ப்பமான பின்னர் எல்லோரும் அவளைச் சூழ்ந்து பாடலைப் பாடுவார்கள். கர்ப்பிணி பெண் அந்தப் பாடலைக் மற்றப் பெண்களுக்கும் கற்றுக்கொடுக்கிறாள். இங்கு ஒருவரின் இறுதி வரை பாடல்கள் பாடப்படுகின்றன.
ஹிம்பா பழங்குடியினர் பெரும்பாலும் வசிப்பது தண்ணீர் கிடைக்க அரிதான பகுதி என்பதால் குளிப்பதை கட்டாய தடை செய்துள்ளனர். இந்தப் பழங்குடியினப் பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே குளிப்பார்கள். அதுவும் அவரது திருமணம் நடைபெறும் நாளில் மட்டுமே. இதை அவர்கள் தங்களின் பாரம்பரியமாக தொடர்கிறார்கள். வாழ்நாள் முழுக்க குளிக்கா விட்டாலும் கூட அவர்கள் உடலில் அழுக்கோ, துர்நாற்றமோ சேர்வது இல்லை.
ஹிம்பா பெண்கள் நறுமணம், கிருமி நாசினிகள் கொண்ட சிறப்பு மூலிகைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து நீராவி குளியல் எடுக்கிறார்கள். இதன் மூலம் தங்கள் உடலை சுத்தப்படுத்தி கொள்கிறார்கள். விலங்குகளின் எண்ணெய்களுடன் வாசனை திரவியம் மற்றும் ஒரு வகை காவி கனிமமும் சேர்த்து உடல் முழுக்கவும், தலை முடிகளிலும் பூசிக் கொள்கின்றனர். ஆப்பிரிக்க பெண்களில் ஹிம்பா பெண்கள் தான் அழகு என்று கூறிக் கொள்கிறார்கள்.