
1910 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தென்னாப்பிரிக்காவின் ஆல்பர்ட் மார் என்பவர் தனது பண்ணையில் ஒரு பபூன் வகைக் குரங்குக் குட்டியைக் கண்டெடுத்து, அதற்கு ஜாக்கி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். அந்தக் குரங்கை, தன் குடும்பத்தின் உறுப்பினராக வளர்த்துப் பயிற்சி அளிக்கத் தொடங்கினார். ஆல்பர்ட் மாரின் பண்ணையில் ஜாக்கி இருந்து வந்தது.
முதலாம் உலகப் போர் வெடித்த பிறகு 1915 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் மாருக்கு இராணுவத்தில் பணியாற்ற அழைப்பு வந்தது. இராணுவத்தின் அழைப்பை ஏற்ற அவர், “என்னுடன் ஜாக்கியையும் அழைத்து வருவேன், ஜாக்கி இல்லாமல் இராணுவப் பணிக்கு வர இயலாது” என்று சொன்னார். இராணுவ அதிகாரிகள் முதலில் மறுத்தாலும், பின்னர் அவரது வேண்டுகோளை ஏற்று, ஜாக்கியை உடன் அழைத்து வர ஒப்புக் கொண்டனர்.
ஆல்பர்ட் மாருடன் சேர்ந்து ஜாக்கியும் இராணுவப் பணிகளைச் செய்து வந்தது. சிறிது காலத்தில் ஜாக்கியும் தென்னாப்பிரிக்க தரைப்படையில் ஒரு வீரராக இணைத்துக் கொள்ளப்பட்டது. அதன் பின்னர், மூன்றாவது தென்னாப்பிரிக்கக் காலாட்படை படைப்பிரிவின் (டிரான்ஸ்வால்) ஒரு சின்னமாக மாற்றப்பட்டு, அந்தக் குரங்கு அவர்களுடன் எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டது.
ஜாக்கிக்கு ஒரு தொப்பி, அதன் உணவுக்காகத் தனித் தொகை, அதற்கென்று சம்பள புத்தகம் கொண்ட அதிகாரப்பூர்வ பணி சீருடை போன்றவைகளும் வழங்கப்பட்டன. ஜாக்கி உயர் அதிகாரிகளுக்கு சல்யூட் அடிக்கப் பயிற்சி பெற்றிருந்தது. வீரர்களின் சிகரெட்டுகளைப் பற்ற வைக்கும் பணிகளையும் செய்து வந்தது.
ஜாக்கியின் உயர்ந்த புலன்கள் காரணமாக, இரவில் பணியில் இருந்த காவலாளிகளுக்கு உதவியாக காவல் காத்தது. தாக்குதல் வரும் போது அல்லது எதிரி வீரர்கள் நடமாட்டம் இருப்பதை முதலில் தெரிந்து கொள்வது இந்த பபூன் குரங்கு தான். இராணுவத்தில் இருந்த போது ஜாக்கிக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் அவற்றை உண்ண தனியே, தட்டு, முள் கரண்டி, கை கழுவத் தனியே கைகழுவும் தொட்டி போன்றவை வழங்கப்பட்டன. படையணி அணிவகுத்துச் செல்லலும் போது, ஜாக்கி அவர்களுடன் இருக்கும்.
ஆல்பர்ட் மார் எகிப்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, 1916 ஆம் ஆண்டு, பிப்ரவரி 26 ஆம் நாளன்று அகாகியா போரில், ஜாக்கியும் அவருடன் இருந்தது. அப்போது ஆல்பர்ட் மாரின் தோளில் குண்டு பாய்ந்து. காயத்துக்கு சிகிச்சை பெற அவர் உதவிக்காகக் காத்திருந்த போது, ஜாக்கி அவரது தோள் காயத்தை நக்கி ஆற்றுப்படுத்தியது.
பிரான்சில் உள்ள அகழிகளில் ஜாக்கி நேரத்தைச் செலவிட்டது. அங்கு எதிரிகளின் கடுமையான துப்பாக்கிச் சூட்டிற்கு இடையில் இருந்தது. போரின் போது ஜாக்கியின் வலது கால் உடைந்து போனதுடன், அதன் கால் மற்றும் கையில் சிறு காயங்கள் ஏற்பட்டன. மருத்துவர்கள் ஜாக்கியின் காயங்களுக்குச் சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தது. அதற்கு ஏற்பட்ட காயத்தினால் விரைவில் இறந்துவிடும் என்று மருத்துவர்கள் எண்ணியிருந்த நிலையில் அது உயிர் பிழைத்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.
காயமடைந்ததற்காக ஜாக்கிக்கு வீரப் பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் பிரவேட் என்னும் பதவியிலிருந்து கார்போரல் என்ற பதவிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. கார்போரல் ஜாக்கியின் (Corporal Jackie) சேவைகளைப் பாராட்டி, ‘பிரிட்டோரியா குடிமக்கள் சேவை பதக்கம்’ வழங்கப்பட்டது.
போர் முடிந்த பிறகு, கேப் டவுனில் உள்ள மைட்லேண்ட் முகாமில் ஜாக்கி ஆவணங்களுடன் விடுவிக்கபட்டது. தென்னாப்பிரிக்க இராணுவத்தில் சேர்க்கப்பட்ட ஒரே பபூன் குரங்கு ஜாக்கி மட்டுமல்ல என்றாலும், பிரவேட் அல்லது அதற்கு மேற்பட்ட கார்போரல் பதவியை அடைந்த ஒரே பபூன் குரங்கு இதுதான்.
போருக்குப் பிறகு, மார் ஜாக்கியை தென்னாப்பிரிக்காவிற்கு மீண்டும் அழைத்து வந்தார். ஒரு ஆண்டு கழித்து 1921 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் காயமடைந்த பபூன் இறந்தது. ஒரு பபூன் குரங்கு இராணுவப் படையில் சேர்ந்து பிரவேட் மற்றும் கார்போரல் எனும் உயர் பதவிகளைப் பெற்றது என்பது உண்மையில் வியப்பூட்டுகிறது.