
விநாயகர் வழிபாடு இந்தியாவில் மட்டுமின்றி, தென் கிழக்கு ஆசியா முழுவதும் பரவியுள்ளது. தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்து நாட்டுக் கலாச்சாரத்திலும் விநாயகர் ஈர்க்கப்பட்டிருக்கிறார். தாய்லாந்தில் வெற்றி, அறிவு மற்றும் பாதுகாப்பின் கடவுளாகக் கருதப்படுகிறார். விநாயகரது உருவம் கோயில்களில் மட்டுமின்றி, வீடுகள், கல்வி நிறுவங்கள் மற்றும் வணிக நிறுவனங்களிலும் இடம் பெற்றிருக்கிறது. அங்குள்ள மக்கள், தங்களது வாழ்வு செழிக்க வேண்டுமென்பதற்காக விநாயகரை வழிபட்டு வருகின்றனர். விநாயகருக்கான விழாக்கள் மற்றும் சடங்குகள் என்று அனைத்தும் கொண்டாடப்படுகின்றன.
தாய்லாந்தில் சச்சோங்சாவோவிலுள்ள க்ளோங் குவான் கணேஷ் பன்னாட்டுப் பூங்காவில், உலகிலேயே மிக உயரமான விநாயகர் சிலையாக, 39 மீட்டர் உயரமுள்ள நின்ற நிலையிலான விநாயகர் சிலை நிறுவப்பட்டிருக்கிறது. 2008 ஆம் ஆண்டு தொடங்கி 2012 ஆம் ஆண்டு வரை கட்டுமானம் செய்யப்பெற்ற இச்சிலை 2012 ஆம் ஆண்டில் பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.
பேங் பகோங் ஆற்றின் மீது கம்பீரமாக உயர்ந்து நிற்கும் இந்த விநாயகர் சிலை 40 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில், 854 வெண்கலத் துண்டுகளால் கட்டப்பட்டு உயர்ந்து நிற்கிறது. இந்த விநாயகர் சிலை, சாலை வழியாகவும், நதி வழியாகவும் பயணிக்கும் அனைத்துப் பயணிகளுக்கும் தெரியும் நிலையில் அமைந்திருக்கிறது. தற்போது இந்தச் சிலை தாய்லாந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான அடையாளமாகவும் மாறியிருக்கிறது.
இந்த விநாயகர் சிலையின் நான்கு கைகளில் கரும்பு, பலாப்பழம், வாழைப்பழம் மற்றும் மாம்பழம் ஆகியவை இடம் பெற்றிருக்கின்றன. இந்த நான்கு பொருட்களும் தாய்லாந்தின் வளர்ச்சி மற்றும் ஆசீர்வாதங்களைக் குறிக்கின்றன. இந்த சிலை நின்ற நிலையிலிருந்தாலும், அவரது கால் சிறிது முன்னோக்கி அடியெடுத்து வைப்பது போன்று அமைந்திருக்கிறது. இது நாட்டின் முன்னேற்றத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது, அதே வேளையில், இச்சிலையில் தலையில் அணிந்திருக்கும் தாமரை கிரீடம் ஞானத்தை பிரதிபலிக்கிறது. தலைக்கு மேலே அமைந்திருக்கும் புனிதமான ‘ஓம்’ சின்னம் ஒரு பாதுகாவலராக அவரது பங்கை வலுப்படுத்துகிறது. பொதுவாக, இந்த விநாயகர் சிலை தாய்லாந்தின் செழிப்புடன் தொடர்புடைய ஆழமான அடையாளத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்கிறார் இந்தச் சிலையினை வடிவமைத்தக் கலைஞர் பிடக் சலூம்லாவ்.
உலகின் மிக உயரமான விநாயகர் சிலை அமைந்திருக்கும் சாச்சோங்சாவ் எனுமிடம் பாங்காக்கிலிருந்து கிழக்கே சுமார் 80 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பாங்காக்கின் ஹுவா லாம்போங் தொடருந்து நிலையத்திலிருந்து சச்சோங்சாவ் தொடருந்து சந்திப்பு நிலையத்தை அடையலாம். இதே போன்று, பாங்காக்கின் எக்கமாய் மற்றும் மோ சிட் முனையங்களிலிருந்து சாச்சோங்சாவோவுக்கு அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பாங்காக்கிலிருந்து வாடகை மகிழுந்துகளின் மூலமாகவும் தரை வழியாகவும் இங்கு செல்லலாம்.
சாச்சோங்சாவிலிருக்கும் க்ளோங் குவான் கணேஷ் பன்னாட்டுப் பூங்காவிற்குள்ளிருக்கும் விநாயகர் சிலையைப் பார்வையிடுவதற்குத் தாய்லாந்து மக்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. வெளிநாட்டுப் பயணிகள் தாய்பாட் (THB) 100 நுழைவுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.270/ ஆகும்.
இனி தாய்லாந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள், உலகின் மிக உயரமான விநாயகர் சிலையையும் பார்த்துத் திரும்பலாம்.