யோகா - ஆரோக்கியத்தின் திறவுகோல்!

ஜூன் 21, சர்வதேச யோகா தினம்
பத்மாசனம்
Padmasanahttps://patanjaleeyoga.com
Published on

க்கிய நாடுகள் சபை 11 டிசம்பர் 2014 அன்று ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. யோகாவினால் விளையும் நன்மைகள் குறித்து உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே சர்வதேச யோகா தினத்தின் நோக்கமாகும்.

நமது இந்தியா இந்த உலகத்திற்கு அளித்த ஒரு உன்னதமான கொடை யோகா. யோகாசனங்களை முறைப்படி ஒரு குருவின் மேற்பார்வையுடன்தான் பழக வேண்டும். புத்தகங்களைப் படித்து ஆசனங்களைப் பழகுவது தேவையில்லாத விளைவுகளை ஏற்படுத்தும். வயதிற்கேற்ற ஆசனங்களைப் பழக வேண்டும். சிறுவயது முதலே யோகாவைப் பயில்வது சிறந்தது.

உடல் ஆரோக்கியத்திற்கும் மனதை ஒருமுகப்படுத்துவதற்கும் தியானம் செய்வதற்கும் யோகாசனம் பழகுவது அவசியமாகிறது. தன்னை மறந்து அமர்ந்திருக்கும் தியான நிலையானது உறுதியான நிலையாக இருக்க வேண்டும். நாம் செய்யும் தியானம் எந்தவித உபாதைகளாலும் பாதியில் கலையாமல் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இதன் காரணமாகவே தியானத்திற்கு முன்னால் ஆசனம் பழக வேண்டும் என்ற முறையானது அட்டாங்க யோகத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.

அட்டாங்க யோகத்தில் இயமம் மற்றும் நியமம் நிலைக்கு அடுத்த நிலையாக ஆசனம் வரையறுக்கப்பட்டுள்ளது. ஏராளமான ஆசனங்கள் உள்ளன. அவற்றை நாம் சிறு வயது முதற்கொண்டு பழகினால் அனைத்து ஆசனங்களையும் மிக எளிமையாக, சுலபமாகச் செய்து முழு பயனையும் அடையலாம். வயதாக வயதாக உடலானது வளையும் தன்மையை மெல்ல மெல்ல இழக்கிறது.

எளிமையான ஆசனங்களான பத்மாசனம், அர்த்த பத்மாசனம் ஆகிய இரு ஆசனங்களைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுவோம்.

பத்மம் என்றால் தாமரை. ஒரு விரிப்பின் மீது அமர்ந்து கொண்டு வலது காலை இடது தொடையின் மீது வைத்து அடுத்தபடியாக இடது காலை வலது தொடையின் மீது வைக்க வேண்டும். இரண்டு குதிகால்களும் அடிவயிற்றைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு கண்களை மூடியபடி இரு கைகளும் சின் முத்திரை நிலையில் இருக்க வேண்டும். முகத்தில் ஒரு புன்னகை தவழ வேண்டும். இந்த நிலையே பத்மாசனமாகும். யோகம், தியானம் பழகுபவர்களுக்கு இந்த ஆசனம் மிகவும் பலன் தரும். மனதிற்கு அமைதியைத் தரவல்ல ஒரு சக்திமிக்க ஆசனம் பத்மாசனம். இந்த ஆசனத்தில் அமர்ந்து தியானம் செய்யும்போது மனத்தை ஒருமுகப்படுத்தும் சக்தி அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:
அரிசி பொரியிலிருக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
பத்மாசனம்

சிறுவர்கள் இந்த ஆசனத்தை மிகச் சுலபமாகச் செய்துவிடுவார்கள். பெரியவர்கள் முதன்முதலில் இந்த ஆசனத்தைப் பழகும்போது கால்களில் வலி ஏற்படும். அத்தகையவர்கள் முதலில் அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்து பழகிப் பின்னர் பத்மாசனத்தைச் செய்து பழகலாம். யோகக்கலை ஆசிரியர்களும் முதலில் தனது மாணவர்களுக்கு அர்த்த பத்மாசனத்தில் அமரும் முறையைக் கற்பித்து சில நாட்கள் தொடர்ந்து பயிற்சி அளிப்பார்கள். இதன் பின்னர் பத்மாசனத்தைக் கற்பிப்பார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் பத்மாசனத்தில் எளிதாக அமரலாம். ‘அர்த்த’ என்றால் பாதி என்று பொருள். பத்மாசனத்தின் பாதி நிலையில் செய்யப்படுவதன் காரணமாக இந்த ஆசனமானது அர்த்த பத்மாசனம் என்று அழைக்கப்படுகிறது.

நேராக அமர்ந்து வலது காலை மட்டும் மடக்கி இடது தொடை மீது வைத்துக் கொள்ளுங்கள். நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு கண்களை மூடியபடி இரு கைகளும் சின் முத்திரை நிலையில் இருக்க வேண்டும். பிறகு இடது காலை மட்டும் மடக்கி வலது தொடையின் மீது வைத்துக் கொள்ளுங்கள். இது அர்த்த பத்மாசனம். இந்த எளிதான பயிற்சியை தொடங்கி கால்களை நன்கு பழக்கிய பின்னர் இரு கால்களையும் மடக்கி வைத்து பத்மாசனம் செய்வது நல்லது.

யோகாசனத்தை ஒரு குருவின் வழிகாட்டலுடன் முறைப்படி பயிலுங்கள். காலையில் தினமும் யோகா செய்யுங்கள். உங்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை நிச்சயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com