இந்தியாவில் ஆடைகளை அலங்கரிப்பதில் பல நூறாண்டுகளாக கைவினைக்கலைகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் ஆரி வேலைப்பாடு பற்றி நாம் அனைவருமே நன்கு அறிவோம். ஆனால் அதைத் தாண்டி நமது தேசத்தில் பல வியக்க வைக்கும் தையல் கலைகள் உள்ளன. துணிகளுக்கு ஆடம்பரமான, கலைநயமிக்க தோற்றத்தைத் தரும் மேலும் 5 முக்கிய தையல் வேலைபாடுகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
1. சர்தோசி (Zardozi): முகலாயர் காலத்தில் பாரசீகத்தில் இருந்து இந்தியா வந்த இந்த கலை மிகவும் ஆடம்பரமானது. தங்கம் மற்றும் வெள்ளி உலோக நூல்களை பயன்படுத்தி வெல்வெட் மற்றும் பட்டு துணிகளில் பிரம்மாண்டமாகத் தைக்கப்படும். முத்தாகக் கற்கள், விலையுயர்ந்த மணிகள் மற்றும் தங்க கம்பிகளை கொண்டு திருமண லெஹங்கா மற்றும் ஷெர்வானிகளில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு சர்தோசி ஆடையை முழுமையாக உருவாக்க பல மாதங்கள் வரை ஆகும். இதன் தனித்துவமான வேலைப்பாடுகள் ராஜஸ்தானி மற்றும் முகலாய கலாச்சாரத்தின் பெருமையை இன்றும் பறைசாற்றுகின்றன.
2. சிகன்காரி (Chikankari): உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னோ நகரில் தோன்றிய மிக மென்மையான வேலைப்பாடு இதுவாகும். மெல்லிய மஸ்லின் அல்லது ஜார்ஜெட் துணிகளில் வெள்ளை நிற பருத்தி நூலால் நிழல் வடிவில் இது நேர்த்தியாக உருவாக்கப்படுகிறது.
கோடைகால குர்தாக்களுக்கு இது கம்பீரமான தோற்றத்தைத் தருகிறது. இந்த நுட்பமான தையல் கலைக்கு தற்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டு மத்திய அரசால் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.
3. காந்தா (Kantha): மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்தில் உருவான ஒரு பழங்கால கலை இதுவாகும். பழைய புடவைகளை ஒன்றாக சேர்த்து ரன்னிங் ஸ்டிச் மூலம் தைப்பார்கள். இதில் விலங்குகள் மற்றும் கிராமப்புற கதைகள் அழகாக வடிக்கப்பட்டிருக்கும். ஆரம்பத்தில் போர்வைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட இக்கலை தற்போது நவீன துப்பட்டாக்களிலும் வந்துவிட்டது.
4. புல்காரி (Phulkari): பஞ்சாப் மாநிலத்தின் அடையாளமான இந்த சொல்லுக்கு மலர்களின் வேலைப்பாடு என்று அர்த்தமாகும். துணியின் பின்புறமாக இருந்து டார்னிங் ஸ்டிச் முறையில் பிரகாசமான பட்டு நூல்களைக் கொண்டு வண்ணமயமாகத் தைக்கிறார்கள். விழாக்காலங்களில் பஞ்சாபி பெண்கள் அணியும் ஷால்களில் இது கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும்.
டிரெண்டிங்க்கு ஏற்ற பிளவுஸ் (Blouse) மாடல் வகைகள்..!
5. கசூதி (Kasuti): கர்நாடகாவில் தோன்றிய இந்த பாரம்பரிய எம்பிராய்டரி முறையில் துணியில் எந்தவொரு முடிச்சுகளும் போடப்படுவதில்லை. நூல் பிரியாமல் யானை மற்றும் மயில் போன்ற உருவங்களை மிகத் துல்லியமான எண்ணிக்கையில் தைக்கிறார்கள். இளக்கல் (Ilkal) புடவைகளில் இந்தக் கலை மிகவும் பிரபலமாக இருக்கிறது.
நமது நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் இதுபோல பல தனித்துவமான கலைகள் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆடைகளுக்கு வெறும் அழகை மட்டும் தராமல் அந்தந்தப் பகுதியின் கலாச்சாரத்தையும் இந்த பாரம்பரிய எம்பிராய்டரி தையல்கள் உலகிற்குப் பறைசாற்றுகின்றன.
இனி நீங்கள் எப்போதாவது ஆடை வாங்கும்போது அது எத்தகைய தையல் வேலைபாடு என்பதை கவனித்துப் பாருங்கள்.