
நம் அனைவருக்குமே சருமப் பராமரிப்பு என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒன்றாகும். உடலில் வேறெங்கும் பிரச்னை என்றால் அது வெளியில் தெரிய வாய்ப்பிருக்காது. அதுவே சருமத்தில் கோளாரென்றால் அது பிறரின் கவனத்தை உடனடியாக ஈர்க்கவும் கேள்வி கேட்கவும் தூண்டும்.
பலர் இதற்காக அழகு நிலையங்களுக்கு செல்வது போன்ற பல உத்திகளைக் கையாளவும் பணம் செலவழிக்கவும் தயாராய் உள்ளனர். இதற்கு மாறாக இப்பதிவில் கூறப்பட்டிருக்கும் 8 வகையான பழக்க வழக்கங்களை தவறாமல் பின்பற்றினாலே நம் சருமத்தை பைசா செலவின்றி பளபளன்னு மின்னச் செய்யலாம்.
1. சருமம் பளபளக்க நீர்ச்சத்து தேவை. நீர்ச்சத்து குறையும்போது சருமம் உலர்ந்தும், மங்கலான நிறம் கொண்டும், வயதாகிவிட்ட தோற்றமுடனும் காணப்படும். நீரேற்றம் என்பது பணம் செலவு செய்து லோஷன், சீரம் போன்றவற்றை வாங்கி சருமத்தின் மேற்பரப்பில் பூசிக் கொள்வதல்ல. உடலின் உட்புறம் தேவையான அளவு நீர் நிறைந்திருக்கும்போது சருமம் தானாக நீர்ச்சத்து பெற்றுவிடும். எனவே குறைவின்றி தண்ணீர் குடியுங்கள்.
2. தூக்கம் குறைவதால் சருமம் டல்லாகவும் உடைந்து போனது போன்ற தோற்றமும் தர ஆரம்பிக்கும். அதற்காக நவீன முறை சிகிச்சைகளையும், க்ரீம் போன்றவைகளையும் உபயோகிக்க ஆரம்பிக்காமல், தினமும் எட்டு மணி நேரம் தூங்கினாலே உடல் ஓய்வும் புத்துணர்ச்சியும் பெறும். உங்கள் சருமமும், எந்த செலவுமின்றி பளிச்சென்று ஒளிரும்.
3. சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர்களே சருமத்தில் சன்பர்ன் மற்றும் கேன்சர் போன்றவை உண்டாகக் காரணமாகின்றன. எனவே வெயிலில் செல்ல நேரும்போது காஸ்ட்லியான சன்ஸ்கிரீன் உபயோகிக்க எண்ணாமல் வீட்டிலிருக்கும் தொப்பி, குடை போன்றவற்றின் உதவியோடு, நிழற்பாங்கான இடங்களை தேர்வு செய்து சென்று வந்தால் சருமத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
4. தோற்றம் பொலிவுற ஹெவி மேக்கப் போட்டு வேலைக்கு செல்பவர்கள், தூங்கச் செல்லும் முன் முறையான மேக்கப் ரிமூவர் கொண்டு சருமத்தை சுத்தம் செய்வதில்லை. இதனால் சருமத்திலுள்ள துவாரங்கள் அடைபட்டு பிரச்னைகள் உண்டாகலாம். மேக்கப்பிற்கு அவ்வப்போது இடைவெளி கொடுப்பது ஆரோக்கியமான சருமப் பராமரிப்பிற்கு உதவும்.
5. எப்பொழுதும் பீட்ஸா, சாக்லேட் கேக் போன்ற கொழுப்பும் சர்க்கரையும் நிறைந்த உணவுகளைத் தேடாமல் இடையிடையே காய்கறிகள், பழங்கள், கீரைகள், பருப்பு மற்றும் தானிய வகை உணவுகளையும் உட்கொள்வது சருமப் பிரச்சினை ஏதுமின்றி ஆரோக்கியம் பெற உதவும்.
6. முகத்தை பளிச்சென்று வைத்துக் கொள்ள சிலர் அடிக்கடி க்ளீன்சர் உபயோகித்து முகம் கழுவுவதுண்டு. இதனால் அவர்களின் சருமத்தில் இயற்கையாக உள்ள எண்ணெய்ப் பசை நீங்கி சருமம் உலர்ந்து போகவும், எரிச்சலுறவும் வாய்ப்பு உண்டாகும். முகத்தின் அழுக்கு மற்றும் அசுத்தம் நீங்க சோப் போட்டு முகத்தை கழுவினாலே போதும்.
7. மனதின் ஸ்ட்ரெஸ் சருமத்தில் பருக்கள் உண்டாகவும் காரணமாகும். ஸ்ட்ரெஸ் நீங்க உடற்பயிற்சி, மெடிட்டேஷன் செய்யலாம். மனநிலை ஆரோக்கியம் சருமத்தில் பிரதிபலிக்கும் என்பது உண்மை.
8. செலவில்லா நடைப்பயிற்சி, வீட்டிலேயே சில சிம்பிள் யோகா பயிற்சி போன்றவற்றை தொடர்ந்து செய்து வருவது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து பளபள சருமம் பெற உதவும்.
எனவே, மேற்கூறிய 8 பழக்கங்களை தவறாது பின்பற்றி சருமத்தை மிளிரச் செய்யுங்கள்.