

பெரும்பாலும் நாம் அனைவரும் வீட்டுக்குள் இருக்கும் டியூப் லைட் அல்லது LED பல்புகளின் வெளிச்சத்தில் தான் ரொம்பவே பொறுமையாக மேக்கப் போடுவோம். அந்த வெளிச்சத்தில் கண்ணாடியைப் பார்க்கும்போது நமது முகம் எந்த ஒரு குறையும் இல்லாமல் ரொம்பவே பெர்ஃபெக்ட்டாக அழகாகத் தெரியும். ஆனால், அந்த மேக்கப்போடு வீட்டை விட்டு வெளியே வந்து சூரிய வெளிச்சத்தில் நின்றால் மொத்த கதையும் மாறிவிடும்.
இயற்கையான சூரிய வெளிச்சம் நமது முகத்தில் உள்ள சின்ன சின்ன மேக்கப் தவறுகளைக் கூட பூதக்கண்ணாடி வைத்து மிகத் தெளிவாகக் காட்டிக் கொடுத்துவிடும். அப்படி பகல் நேரத்தில் அப்பட்டமாகத் தெரியும் சில முக்கியமான மேக்கப் தவறுகள் என்னென்ன மற்றும் அதை எப்படித் தவிர்ப்பது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பொருத்தமில்லாத பவுண்டேஷன் நிறம்!
பலரும் செய்யும் முதல் பெரிய தப்பு, தங்களின் சரும நிறத்தை விட மிகவும் வெள்ளையான பவுண்டேஷனை தேர்ந்தெடுத்து பூசுவதுதான். அறை வெளிச்சத்தில் இது முகம் பிரகாசமாக இருப்பது போல ஒரு மாயையை ஏற்படுத்தும். ஆனால் வெளியே பகல் வெளிச்சத்தில் பார்த்தால், உங்கள் முகத்திற்கும் கழுத்திற்கும் சம்பந்தமே இல்லாதது போல ரொம்பவே அசிங்கமாகத் தெரியும்.
முகம் தனியாக ஒரு மாஸ்க் போட்டது போல காட்சியளிக்கும். இதைத் தவிர்க்க, பவுண்டேஷன் வாங்கும்போதே தாடைப் பகுதியில் தடவி இயற்கையான வெளிச்சத்தில் அது மேட்ச் ஆகிறதா என்பதைச் சரிபார்த்து வாங்குவது மிக அவசியம்.
காம்பேக்ட் பவுடர்!
வெயிலில் முகம் வியர்த்து எண்ணெய் வழியக் கூடாது என்பதற்காக, பலரும் காம்பேக்ட் பவுடரை முகத்தில் அப்பி விடுவார்கள். வீட்டுக்குள் இது ஒரு நல்ல மேட் பினிஷை கொடுத்தாலும், சூரிய வெளிச்சத்தில் உங்கள் முகம் மிகவும் வறண்டு போய், ஆங்காங்கே திட்டுத் திட்டாக வெடிப்பு விட்டது போலக் காட்சியளிக்கும். முகத்தில் உள்ள சின்ன சுருக்கங்கள் கூட அப்பட்டமாகத் தெரியும். முகத்தில் எண்ணெய் வடியும் இடங்களில் மட்டும் கொஞ்சமாக ட்ரான்ஸ்லூசன்ட் பவுடரை பயன்படுத்துவது ஒரு ஸ்மார்ட்டான வழி.
பிளஷ் மற்றும் கான்டூர்!
முகத்திற்கு ஒரு அழகான வடிவத்தைக் கொடுக்கத் தான் பிளஷ் மற்றும் கான்டூர் பயன்படுத்துகிறோம். ஆனால் அதை சரியான பிரஷ் கொண்டு முகத்தோடு ஒன்றிப்போகும் அளவுக்கு பிளெண்ட் செய்யவில்லை என்றால், பகல் வெளிச்சத்தில் உங்கள் கன்னங்களில் யாரோ ஸ்கெட்ச் வைத்து கோடு போட்டது போல மிகக் கேவலமாகத் தெரியும். எனவே, ஓரங்களை நன்றாக பிளெண்ட் செய்ய கூடுதல் நேரம் எடுத்துக்கொள்வது ரொம்பவே முக்கியம்.
அடர் நிறத்தில் புருவங்கள்!
புருவங்களை அடர்த்தியாகக் காட்ட வேண்டும் என்பதற்காக, கருப்பு நிற பென்சிலை வைத்து ரொம்பவும் டார்க்காக வரைவது பகல் வெளிச்சத்தில் முற்றிலும் செயற்கையாகத் தெரியும். இயற்கையான வெளிச்சத்திற்கு மென்மையான நிறங்களே பொருத்தமாக இருக்கும். டார்க் பிரவுன் நிற பென்சிலைப் பயன்படுத்தி லேசாக வரைந்து கொள்வது உங்களின் தோற்றத்தை ரொம்பவே நேர்த்தியாகவும் இயற்கையாகவும் காட்டும்.
மேக்கப், நமது இயற்கையான அழகை கொஞ்சம் மெருகேற்றிக் காட்டும் ஒரு அருமையான கலை. ஆனால் அதை எந்த வெளிச்சத்தில் பார்க்கிறோம் என்பது ரொம்பவே முக்கியம். இந்த பகல் நேர மேக்கப் தவறுகளில் இருந்து தப்பிக்க ஒரு சூப்பரான ட்ரிக் இருக்கிறது.
நீங்கள் மேக்கப் போட்டு முடித்ததும், வீட்டை விட்டு வெளியே கிளம்புவதற்கு முன்பாக ஒருமுறை ஜன்னல் ஓரமாக நின்று இயற்கையான வெளிச்சத்தில் உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பாருங்கள். அதில் முகம் பெர்ஃபெக்ட்டாக இருந்தால், நீங்கள் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் கெத்தாக வெளியே செல்லலாம்.