
அனைத்து சத்துக்களுடன் இளமை தரும் பழங்கள் உண்பதற்கு மட்டுமல்ல நமது சருமத்தை பொலிவாக்கி அழகை மேம்படுத்துவதற்காகவும் பயன்படுத்தலாம். என்னென்ன பழங்களை எப்படி பயன்படுத்தினால் சரும அழகு பெறலாம் என்பதற்கான சில குறிப்புகள் இங்கே…
வாழைப்பழம்
வாழைப்பழத்தை நன்றாக குழைத்து அதனுடன் கொஞ்சம் தயிர் சேர்த்து நன்கு கலந்து அடித்து பேஸ்ட் ஆக்கி அதை முகத்தில் மாஸ்க் போல போட்டு சில நிமிடங்கள் கழித்து கழுவினால் முகத்தில் உள்ள தேவையற்ற செல்கள் நீங்கும்.
நன்கு பழுக்காத வாழைப்பழத்தை பயன்படுத்தி முகத்தில் படிந்த உள்ள அழுக்குகளை அகற்றலாம். பழத்தை மிக்சியில் நன்கு அடித்து அதனுடன் தேங்காய் எண்ணெய் அல்லது தேன் துளிகள் கலந்து அப்படியே முகத்தில் ஃபேக் போல போட்டு 5 முதல் 20 நிமிடங்கள் ஊறவிட்டு பின்பு முகம் கழுவ கழுவினால் பளபளப்பான முகம் உடனடியாக கிடைக்கும்.
ஆப்பிள்
ஆப்பிளை நன்கு அரைத்து கூழாக்கி அதை அப்படியே கழுத்தில் பற்றாக போட்டு 15 நிமிடம் ஊற விடவேண்டும். பின்பு கழுவ வேண்டும். இந்த கூழில் சிறிது நீர் சேர்த்து கண்களை மூடிக்கொண்டு கண்கள் மீதும் விடலாம். புத்துணர்ச்சி கிடைக்கும். ஆப்பிளின் தோலை பாதங்கள் புறங்கைகள் மீது தேய்த்தால் அவை பளபளப்பாவதுடன் கரடு முரடான தன்மை நீங்கி மென்மையாகவும் இருக்கும்.
வெள்ளரி
வெள்ளரிக்கு சரும அழுக்குகளை நீக்கி மென்மையாக்கி அழகுப்படுத்தும் தன்மை நிறைய உண்டு. தவிர இதில் மென்மையான ஆஸ்ட்ரிஜென்ட் உண்டு என்பதால் துருவிய வெள்ளரியுடன் சிறிதளவு பால் கலந்து முகத்தில் தடவ சருமம் புத்துணர்வு பெறும். நறுக்கிய வெள்ளரி துண்டுகளை எண்ணெய் பசை மிகுந்த சருமத்தில் தேய்க்க எண்ணெய் பசை அகலும்.
எலுமிச்சை
சருமத்தின் தன்மையை எந்தவிதத்திலும் பாதிக்காமல் இயற்கையான முறையில் சுத்தம் செய்யும் தன்மை நிச்சயம் எலுமிச்சைக்கு உண்டு. சருமத்தில் தளர்வு இருந்தால் அதையே மாற்றக் கூடியது இதன் சாறு. எனினும் இதன் சாற்றினை நேரடியாக சருமத்தின் மீது தடவுவதை தவிர்த்து உடன் தகுதியானவற்றை சேர்த்து பயன்படுத்த வேண்டும்.
ஆரஞ்சு
ஆரஞ்சு பழங்கள் மிகுதியாக கிடைக்கும் காலங்களில் சேமித்து அழகுக்கு அதை பயன்படுத்துவது சிறப்பு . ஆரஞ்சு தோலை நன்கு உலர்த்தி வைத்துக்கொண்டு ஃபேசியல் மாஸ்காக பயன்படுத்தலாம் . இது சருமத்திற்கு மிகவும் உகந்தது. ஆரஞ்சு பழத்தோல்களை நீரில் இட்டு கொதிக்கவைத்து மூடி போட்டு அடுப்பை அணைத்துவிடவும். இரவு முழுவதும் அப்படியே வைத்து இந்த நீரை காலையில் முகம் கழுவ பயன்படுத்த முக அழுக்குகள் நீங்கி சருமம் சுத்தமாகும்.
பப்பாளி
பப்பாளியை நன்கு கூழாக்கி அதை அப்படியே சருமத்தில் தடவி நன்கு மசாஜ் செய்தால் முகப்பொலிவு உறுதி. இதே பப்பாளி பழத்துடன் சிறிது தேன் கலந்து ஃபேஸ் பேக்காக போட்டு 10 முதல் 15 நிமிடங்கள் ஊறிய பின்பு முகம் கழுவினால் நிறம் கூடும். முகச்சிருக்கங்கள் குறையும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும். கண்களை சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.
மாம்பழம்
மாம்பழச்சாறுடன் சிறிது பால் கொஞ்சம் தேன் சேர்த்து முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்தால் சருமத்தின் அடி ஆழத்தில் படியும் அழுக்குகளை நீக்கி சுத்தப்படுத்தும். மாம்பழத் தோலையும் கூட ஸ்கரப்போல முகத்தில் தேய்க்கலாம். இதனால் தேவையற்ற இறந்த செல்கள் நீங்கி முகம் மென்மையாகும்.
தர்பூசணி
தர்பூசணி சருமத்தின் ஆரோக்கியத்தை காக்கும் திறன் கொண்டது . ஈரப்பதம் காப்பதில் தனித்துவம் கொண்ட இந்த தர்பூசணியை வில்லைகளாக நறுக்கி முகம் கழுத்துப் பகுதிகளில் வைத்துக்கொண்டு 30 நிமிடங்கள் அப்படியே படுத்து ஓய்வெடுக்க வேண்டும். இதனால் உடல் வெப்பம் தணிவதுடன் சருமத்தின் தளர்வும் நீங்கி புத்துணர்வு பெறலாம்.