
அமெரிக்கப் பெண்மணிகளுக்கு திடீரென இந்த வாரம் ஆர்வம் மேலிட்ட விஷயம் நெயில் பாலிஷ் பற்றியது.
ஜெல் நெயில் பாலிஷ் (Gel nail polish) ஆபத்தானதா அல்லது இல்லையா என்பது தான் இந்த வார டாபிக் அவர்களுக்கு! (இந்த வாரம் என்பது 2025 செப்டம்பர் முதல் வாரம்)
அவர்களுக்கு உடனடி விடை கிடைத்து விட்டது.
ஜெல் நெயில் பாலிஷ் (Gel nail polish) ஆபத்தானது தான்!
ஜெல் நெயில் பாலிஷ் என்றால் என்ன?
சாதாரண நெயில் பாலிஷுக்கும் ஜெல் பாலிஷுக்கும் உள்ள வித்தியாசம் அதைப் போடும் போது தெரியும். சாதாரண நெயில் பாலிஷைப் போட்டவுடன் அது உலர்வதற்குக் குறைந்த பட்சம் அரை மணி நேரமாவது ஆகும். ஆனால் ஜெல் பாலிஷைப் போட்டால் ஒரு நிமிடம் அல்லது ஒன்றரை நிமிடத்தில் அது எல் ஈ டி பல்பின் வெளிச்சத்தில் உலர்ந்து விடும்.
அல்ட்ரா வயலட் ரே மூலம் உலர வைக்கப்படும் நெயில் பாலிஷ், சர்மத்தை சீக்கிரமாக மூப்படைய வைக்கிறது. அது மட்டுமல்ல, டிஎன்ஏ எனப்படும் மரபணுக்களை சேதமடையச் செய்வதோடு சீக்கிரமே கான்ஸர் வியாதியையும் தருகிறது.
உலர்வதற்கு நாங்கள் அல்ட்ரா வயலட் கதிர்களை உபயோகிப்பதில்லை என்று பல பெண்மணிகள் கூறுவார்கள். அப்படி இருந்தாலும் கூட ஜெல் நெயில் பாலிஷ் சரியான பொருத்தமான தேர்வு இல்லை. ஏன்?
ஜெல் பாலிஷில் அக்ரிலேட் மற்று மெதாக்ரைலேட் (Acrylate and Methacrylate) இருக்கிறது. இது ஒவ்வாமை எனப்படும் அலர்ஜியை ஏற்படுத்தி சொறி, சிரங்கை ஏற்படுத்துகிறது.
ஜெல் நெயில் பாலிஷை அடிக்கடிப் போட்டுக் கொள்ள பியூடி பார்லர்களுக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அழகு சாதன அறிவியல் நிபுணர்கள் கூறுவது இது தான்:
'அடிக்கடி போவதை நிறுத்தி விடுங்கள். முக்கியமான நாட்களுக்காக மட்டும் இதைப் போட்டுக் கொள்ளுங்கள். உங்கள் சருமம் அழகாகப் பாதுகாக்கப்பட வேண்டும் இல்லையா, சொல்லுங்கள்!'
ஜெல் நெயில் பாலிஷ் சாதாரணமாக இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கே நீடிக்கும். அந்த பாலிஷை நீக்குவதும் சரியாகச் செய்ய வேண்டிய ஒரு வேலையாகும். விரல்களை அசிடோனில் 15 நிமிட நேரம் வைத்திருக்க வேண்டும்.
அல்லது அசிடோனில் நனைக்கப்பட்ட சின்ன பஞ்சு உருண்டைகளை அலுமினியம் ஃபாயிலில் வைத்து விரல்களில் சுற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதை எடுத்து கைகளை நன்றாகக் கழுவ வேண்டும்.
நகங்களைப் பளபளப்பாக அனைவரையும் கவரும் விதத்தில் பாதுகாக்க முக்கியமான குறிப்புகள் உள்ளன. அவை இதோ:
நகங்களை சீரான இடைவெளியில் சுத்தம் செய்ய வேண்டும்.
நகங்களைச் சரியாக வெட்ட வேண்டும்.
வெட்டியவுடன் அதை சீராகத் தேய்த்து விட (ஃபைலிங்) வேண்டும்.
நீளமாக இருப்பதை விட சிறியதாக இருந்தால் அழுக்கும் சேராது; பாக்டீரியாக்களும் சேராது.
நகங்களின் மேல் புறத்தை ஃபைல் செய்யக் கூடாது.
சரியான சமச்சீர் உணவை எடுத்துக் கொள்வது அவசியம்.
பாத்திரங்களைத் துலக்கும் போது கையுறைகளைப் போட்டுக் கொள்ள வேண்டும்.
நகங்களைப் பற்களால் கடிப்பது கூடாது.
கடைசியாக ஒரு செய்தி.
TPO எனப்படும் Trimethylbenzoyl Diphenylphosphine Oxide சில ஜெல் நெயில் பாலிஷில் பயன்படுத்தப்படுகிறது. இது அல்ட்ரா வயலட் ஒளியில் பாலிஷ் கெட்டியாக உதவுகிறது. புற்றுநோயை உருவாக்கும் அபாயம் இதில் இருப்பதால் ஐரோப்பாவில் இது தடை செய்யப்பட்டிருக்கிறது.
ஆகவே நாரீமணிகள் நார்மலாக உள்ள நெயில் பாலிஷைப் பயன்படுத்தலாம். ஒரு போதும் ஜெல் நெயில் பாலிஷைப் பயன்படுத்தக் கூடாது.
அமெரிக்க பெண்மணிகளின் ட்ரெண்டிங் டாபிக் உலகப் பெண்மணிகள் அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வைத் தந்து விட்டது!