

பெரும்பாலும் நமது வீடுகளில் தங்கத்துக்கு அடுத்து மதிப்பான இடம் வெள்ளிக்குத்தான் உண்டு. நகைகளாகவும், பாத்திரங்களாகவும், நம் வாழ்வில் அதிகம் உறவாடுவதும் வெள்ளிதான்.
பூஜை அறையில் குத்துவிளக்கு, அம்மன் விளக்கு வெள்ளியில் தான் மின்னும். மெட்டி, திருமணச் சீரில் வெள்ளி சொம்பு, வெள்ளி தட்டு, டம்ளர் என சேர்த்து தருவார்கள்.
அரை ஞாண் கயிறு, கொலுசு, தண்டை என குழந்தை பிறந்ததிலிருந்து ஒட்டி உறவாடுவது வெள்ளியில் தான். குழந்தைக்கு முதல் முதலாக அன்னப் பாயசம், பால் சாதம் பிசைந்து தரும் கிண்ணம், வெள்ளித்தட்டில் தான். ஆசை ஆசையாக தண்ணீர் குடிக்க கொடுப்பதும் வெள்ளி டம்ளரில் தான். இவ்வளவு சென்டிமென்டாக வெள்ளி நகைகளையும், பாத்திரங்களையும் பார்த்து வாங்கி பக்குவமாக பராமரிக்க வேண்டும்.
வெள்ளி பிரகாசமாக இருப்பதை விட பளபளப்பாக இருந்தால்தான் அழகு. ஆனால் அதை சீரான முறையில் துடைத்துப் பராமரிக்க வேண்டும். பாத்திர வடிவில் இருந்தாலும் சரி, வெள்ளி நகையாக இருந்தாலும் சரி பாதுகாக்கும் முறையும் சுத்தப்படுத்தும் வழிமுறையும் ஒன்றுதான்.
வெள்ளி பாதுகாப்பு
வெள்ளிப் பாத்திரங்கள் பொலிவிழக்காமல் இருக்க வேண்டுமானால், கண்டிப்பாக இரும்பு பீரோவில் வைக்கக்கூடாது. ஸ்டீல் பாத்திரங்கள் மற்றும் பித்தளை பாத்திரங்களுடன் கலந்து வைக்கவும் கூடாது.
பழங்கால மரப்பெட்டி இருந்தால் அதற்குள் வழி பார்க்கிறவர்களை பத்திரப்படுத்தி வைக்கலாம். மர பீரோவில் வைக்கவும் நல்லது.
வெள்ளி நகைகளை வாங்கும்போது ஒரு ரோஸ் நிற பேப்பரில் சுற்றித் தருவார்கள். அந்த பேப்பரில் சுற்றி தருவார்கள். அந்த பேப்பரில் சுற்றி பத்திரமாக மரப்பெட்டியில் வைத்தால் புது மெருகு குலையாமல் இருக்கும். நியூஸ் பேப்பர் அல்லாத பிரவுன் பேப்பர்களில் கூட சுற்றி வைக்கலாம்.
வெல்வெட் துணி, நல்ல வெள்ளை காட்டன் துணிகளை இரண்டாக மடித்து அதன் மேல் வெள்ளி நகைகளை வைத்தால் நகைகள் புதிது போல் இருக்கும்.
வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைத்தால் அவை கறுத்து போவதை தவிர்க்கலாம். வெள்ளி நகைகள் வைக்கும் பெட்டியில் சிறுசிறு சாக்பீஸ் துண்டுகள் போட்டு வைத்தால் நகைகள் கறுக்காமல் இருக்கும்.
வெள்ளிப் பாத்திரங்களை காற்றுப்படாமல் பிளாஸ்டிக் கவர்களுக்குள் போட்டு கட்டி வைத்தால் புதிதுபோல் இருக்கும்.
வெள்ளி சுத்தம் செய்தல்
வெள்ளி நகைகளின் கடுமையான அழுக்கு ஏறி கருத்துப்போய் இருந்தால் பூந்திக்கொட்டை ஊறவைத்த நீரில் கழுவலாம்.
வெள்ளி ஆபரணங்கள் மீது உருளைக்கிழங்கின் தோலை ஈரமாகத் தேய்த்து சுத்தமான தண்ணீரில் கழுவினால் அவற்றில் உள்ள கருமை நீங்கும்.
விபூதியை லேசாக ஈரமாக்கி வெள்ளி சாமான்கள் மீது தேய்த்து சில நிமிடங்கள் கழித்து கழுவிவிட்டு, காய்ந்த துணியால் துடைத்து விட கருமை நிறம் மாறி பளபளப்பாகும்.
புளித்த பாலில் வெள்ளி பாத்திரங்கள், வெள்ளி நகைகளை அரை மணி நேரம் ஊறவைத்துவிட்டு அதன் பின் துலக்கினால் புதிது போல் இருக்கும்.
கொதிக்கும் நீரில் அரை ஸ்பூன் சமையல் சோடா, அலுமினிய ஃபாயில் சிறு துண்டு பேப்பர்களை போட்டு, இதில் கறுத்த வெள்ளி பாத்திரங்களை இட்டு, ஐந்து நிமிடங்களுக்கு பின் எடுத்து காய்ந்த துணியால் துடைத்தால் பாத்திரங்கள் பளபளவென்று இருக்கும்.
வெது வெதுப்பான தண்ணீரில் சிறிது டிடர்ஜண்ட் தூள் கலந்து அதில் வெள்ளி நகைகளை ஊறவைத்து சுத்தம் செய்தால் நகைகள் பளபளப்பாகும்.
வெள்ளி நகைகளில் சிறிதளவு பற்பசையை தேய்த்து சிறிது நேரம் ஊறிய பின் பிரஷ்ஷால் தேய்த்துக்கழுவி காய்ந்த துணியால் துடைத்துவிட பளபளவென மின்னும்.
சிறிது தண்ணீரில் ஷாம்பு போட்டு கரைத்து அதை வெள்ளியின் நகைகள் பூசி தேய்த்து சுத்தமான தண்ணீரில் நன்கு அலசி ஈரம் போக, துடைத்தால் பளபளவென இருக்கும்.
வெள்ளிப் பாத்திரங்களை சுத்தப்படுத்த மற்றொரு வழி பாத்திரங்களின் மீது வெள்ளி பாலீஷ் தான். ஈர ஸ்பாஞ்சால் துடைத்த பின் பாத்திரங்கள் மீது வெள்ளி பாலீஷ் க்ரீமை கொண்டு தடவி, அழுத்தி துடைக்காமல் மென்மையான துணியைக்கொண்டு தடவினால் பளபளப்பாகும்.
வெள்ளி பாத்திரங்கள், விளக்குகள் சுத்தப்படுத்த நகைக்கடைகளில் வெள்ளி லிக்விட் கிடைக்கும். முதலில் நன்றாக கழுவிவிட்டு பின் லிக்விட்டால் தடவி கழுவினால் பளபளப்பாக மின்னும்.
வெள்ளியாலான நகைகள் மற்றும் பாத்திரங்கள் கறுத்துப் போகாமல் நீண்ட நாட்கள் புதியது போலப் பொலிவுடன் வைத்திருக்கும் முறைகளையும், கறுத்த வெள்ளியை வீட்டிலேயே சுலபமாகப் பளபளக்க வைக்கும் வழிகளையும் எளிதாக அறிந்து கொள்ளலாம்.