
குளிர்காலம் வந்தாச்சு. உலர் சருமம், சருமப்பொலிவிழப்பு, செதில் பிரிதல் போன்ற பிரச்னைகளும் படிப்படியா தலை தூக்க ஆரம்பிக்கும். கவலையேபடாமல், இயற்கையின் கொடையாகிய இந்த ஐந்து வகைப் பழங்களையும் தொடர்ந்து உட்கொண்டு வாருங்கள். எந்தவித கிரீமுமின்றி, சருமத்தை நீரேற்றமுடன் ஆரோக்கியமாய் வைக்க முடியும். அந்தப் பழங்கள் எவை என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
ஆரஞ்சுப் பழம்: வைட்டமின் C சத்து அதிகம் உள்ள பழம் ஆரஞ்சு. சருமத்தின் நீட்சித்தன்மையையும் உறுதியையும் பாதுகாத்துப் பராமரிக்க உதவும் கொல்லாஜன் உற்பத்திக்கு ஆரஞ்சுப் பழம் சிறந்த முறையில் உதவி புரியும். ஃபிரீ ரேடிகல்களால் உண்டாகும் சிதைவு மற்றும் சுற்றுச்சூழல் தரும் அழுத்தம் போன்றவற்றைத் தடுக்கவும் வைட்டமின் C உதவும். நீர்ச்சத்து நிறைந்த ஆரஞ்சு ஜூஸை தினமும் காலையில் அருந்துவதால் சருமம் பள பளப்புப் பெறும். சருமத்திலுள்ள கருந்திட்டுக்கள் நீங்கும்.
மாதுளம் பழம்: மாதுளம் பழத்தின் சிவந்த முத்துக்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மிக அதிகம். அவை சேதமடைந்த சரும செல்களை சீராக்கவும், வயதான தோற்றம் வருவதை தள்ளிப்போடவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவும். இப்பழத்திலுள்ள நீர்ச்சத்து மற்றும் இதன் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்கள் சருமம் வறட்சியடையாமல் பாதுகாக்க உதவிபுரிகின்றன. குளிர் காலத்தில் உடலில் 'வாத' தோஷம் அதிகரித்து சருமத்தில் வெடிப்பும் வறட்சியும் உண்டாவதுண்டு. மாதுளம் பழம் 'வாத' தோஷத்தை சமநிலைப்படுத்தி, சருமத்தில் கோளாறு உண்டாவதை தடுக்குமென ஆயுர்வேதம் கூறுகிறது.
பப்பாளிப் பழம்: பப்பாளிப் பழத்திலுள்ள பாபைன் (Papain) என்ற என்ஸைம் சருமத்திலுள்ள இறந்த செல்களை உரித்தெடுத்துவிட்டு, பளபளப்பான புதிய சருமத்தை உள்ளிருந்து வெளிக்கொணர உதவும். இப்பழத்திலுள்ள வைட்டமின் A, C, E ஆகியவை சிதைந்த செல்களை சீராக்கி சருமம் புத்துணர்ச்சியுடன் திகழ உதவி புரிகின்றன. தினசரி சில துண்டுகள் பப்பாளி சாப்பிடுவது சருமத்தை மென்மையாகவும் நீரேற்றத்துடனும் வைத்துப் பராமரிக்க உதவும்.
கொய்யாப் பழம்: ஆரஞ்சுப் பழத்தில் இருப்பதைப்போல் நான்கு மடங்கு வைட்டமின் C சத்து கொய்யாவில் உள்ளது. இது சருமத்திற்கு நீரேற்றம் தந்து குளிர்கால வறட்சியை போக்கவும், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கவும், சிதைவடைந்த சரும செல்களை சீக்கிரம் சீராக்கவும் உதவி புரிகிறது. இதனால் சருமம் 'பளிச்' சென்ற இளமைத் தோற்றம் பெறுகிறது.
ஸ்வீட் லைம் (Mosambi): இந்தியாவில் பிரசித்தி பெற்ற சிட்ரஸ் ஃபுரூட் மொசம்பி. இதிலுள்ள வைட்டமின் C சத்து மற்றும் இயற்கையான சர்க்கரைச் சத்து ஆகியவை சருமத்தின் உள்ளும் புறமும் நீரேற்றம் பெற உதவுகின்றன. ஸ்வீட் லைம் சருமத்தில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றவும் மெட்டபாலிசம் சிறப்பாக நடைபெறவும் உதவிபுரிகிறது.
இதனால் குளிர்காலத்தில் சருமத்தில் உண்டாகும் வெடிப்புகள் குறைந்து சருமம் மாசற்று விளங்கும். ஸ்வீட் லைம் ஜூஸ் வயிற்றுக்கு இதம் தந்து உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை தருவதால் இது அனைத்து வயதினரும் அருந்த ஏற்ற ஜூஸ்.
அதிக செலவின்றி வாங்கக்கூடிய இந்தப் பழங்களை வாங்கி உட்கொள்வதுடன், போதுமான அளவு தண்ணீர் குடித்தும், பப்பாளி போன்ற இயற்கையான பொருட்களைக் கொண்டு முகத்திற்கு மாஸ்க் போட்டும், அதிகளவு காஃபின் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் உண்பதைத் தவிர்த்தும் நம் சருமத்தைப் பாதுகாப்போம்.