

பாரம்பரியமும் நவீனமும் கலந்த ஃபியூஷன் நகைகள் இன்றைய தலைமுறைப் பெண்களின் மிக முக்கியமான ஃபேஷன் தேர்வாக மாறியுள்ளன. நமது கலாச்சாரத்தின் அடையாளமான ஆன்டிக், குந்தன் மற்றும் டெம்பிள் டிசைன்களுடன் இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு நேர்த்தியான எடை குறைந்த ஜியோமெட்ரிக் வடிவங்களை இணைத்து நகைகள் உருவாக்கப்படுகின்றன.
பழங்கால கலைநயத்தையும், இன்றைய காலத்திற்கேற்ற எளிய மற்றும் நேர்த்தியான டிசைன்களையும் இணைத்து இந்த நகைகள் உருவாக்கப்படுகிறது. இவ்வகை நகைகள் புடவை, லெஹங்கா போன்ற பாரம்பரிய உடைகளுக்கும், குர்தா, மேலைநாட்டு ஆடைகள் (Western wear) போன்ற நவீன உடைகளுக்கும் கச்சிதமாகப் பொருந்தக் கூடியவை.
மாடர்ன் டெம்பிள் ஜுவல்லரி:
பழங்கால கடவுள் சிலைகளின் உருவங்கள் கொண்ட ஹெவி டிசைன்களுக்குப் பதிலாக, தற்காலத்தில் அதன் நுணுக்கமான வேலைப்பாடுகளை மட்டும் எடுத்துக் கொண்டு இலகுவான (lightweight) நெக்லஸ்கள் மற்றும் வளையல்களாக வடிவமைக்கப்படுகிறது. மெல்லிய செயின்களில் சிறிய சாமி சிலைகள் அல்லது ஆன்மீகச் சின்னங்கள் பதிக்கப்பட்ட எளிய அட்டிகைகள் மற்றும் வளையல்கள் இப்போது பிரபலமாக உள்ளன.
ஜியோமெட்ரிக் குந்தன் & பொல்கி (Geometric Kundan & Polki):
பாரம்பரிய ராஜஸ்தானி குந்தன் மற்றும் வெட்டப்படாத வைரங்களைக் கொண்ட பொல்கி நகைகள் இப்பொழுது சதுரம், முக்கோணம் போன்ற நவீன ஜியோமெட்ரிக் வடிவங்களில் கிடைக்கின்றன.
பாரம்பரிய கூண்டு வடிவ ஜிமிக்கிகள் மற்றும் பிறை வடிவ கம்மல்களில் ஜியோமெட்ரிக் வடிவங்கள், எனாமல் வேலைப்பாடுகள் மற்றும் ஸ்டீல் அல்லது ரோஸ் கோல்ட் கலவைகளைப் பயன்படுத்தி புதிய தோற்றம் தரப்படுகிறது.
வெஸ்டர்ன் சோக்கர்கள் (Contemporary Chokers):
நமது பாரம்பரிய அட்டிகை அல்லது சோக்கர் டிசைன்களில் முத்துக்கள், பவளங்கள் மற்றும் நவீன வைர அமைப்புகளைப் புகுத்தி மேற்கத்திய ஆடைகளுக்கும் பொருந்தும் வகையில் மாற்றியுள்ளனர்.
லேயர்டு செயின்கள் (Layered Chains):
பழங்காலத்து அடுக்கு மாலாக்களைப் போலல்லாமல் மெல்லிய தங்கச் சங்கிலிகளை வெவ்வேறு நீளங்களில் லேயர் செய்து போடுவது இன்றைய ட்ரெண்டாகும்.
ஃபியூஷன் நெக்லஸ் டிசைன்கள் (Fusion Necklaces):
பாரம்பரிய மாங்காய் மாலை அல்லது காசு மாலையின் நடுவே நவீன கற்கள் மற்றும் முத்துக்களைக் கோர்த்து இக்காலத்து ஆடைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்படுகின்றன.
பவளம் மற்றும் முத்துக்களின் புதிய சேர்க்கை:
பாரம்பரிய முத்து மாலைகளுடன் தற்கால நவீன பதக்கங்களை (Pendants) இணைப்பது அல்லது தஹிதியன் கருப்பு முத்துக்களை (Tahitian Pearls) தற்கால டிசைன்களுடன் கலந்து ஆபரணங்கள் செய்வது புதிய டிரெண்டாக மாறியுள்ளது.
சமகால இந்தோ-வெஸ்டர்ன் நகைகள்:
மேற்கத்திய பாணியிலான மெல்லிய செயின்களில், பாரம்பரிய முகலாய காலத்து போல்கி வேலைபாடுகள் அல்லது மீனாகாரி கலலநயத்தைப் புகுத்தி பிரத்தியேகமாக நகைகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றை இன்றைய காலப் பெண்கள் அதிகம் விரும்புகின்றனர்.
ட்ரெண்டியான கம்மல் மற்றும் ஜும்காக்கள்:
பாரம்பரியமான கனமான ஜும்காக்களுக்கு பதிலாக, காதுகளில் அணிய எளிதான எடை குறைந்த ஸ்டட்களும், குந்தன் கற்கள் பதித்த ஃபியூஷன் கம்மல்களும் பார்ட்டி உடைகளுக்குச் சிறந்த தேர்வாகும்.
பழைய நகைகளை புதிய வடிவில் மாற்றுதல்:
நம்மிடம் இருக்கும் பழைய பாரம்பரிய நகைகளை அப்படியே வைத்திருக்காமல், இன்றைய காலத்திற்கு ஏற்ப மாற்றி வடிவமைக்கலாம். பெரிய பாரம்பரிய நெக்லஸ்களில் உள்ள பதக்கத்தை மட்டும் தனியாகப் பிரித்து, எளிய கயிறு அல்லது நவீன முத்துச் சங்கிலியுடன் இணைத்து ஸ்டேட்மெண்ட் பீஸ் (Statement Piece) ஆக மாற்றலாம்.
அதிக எடையுள்ள வளையல்களை உருக்கி அல்லது அதன் மேல் லேசான வேலைப்பாடுகள் செய்து தற்கால பெண்கள் விரும்பும் பிரேஸ்லெட் வடிவில் மாற்றிக்கொள்ளலாம்.
இவற்றை ஸ்டைல் செய்வதற்கான குறிப்புகள்:
ஆடைத் தேர்வு:
ஜீன்ஸ்-குர்தா, இண்டோ-வெஸ்டர்ன் மேக்ஸி ஆடைகள் அல்லது ஃபியூஷன் புடவைகளுடன் இந்த நகைகள் மிகச்சிறந்த தோற்றத்தைத்தரும்.
மிக்ஸ் அண்டு மேட்ச் (Mix & Match):
ஒரு கனமான பாரம்பரிய நெக்லஸை எளிய லினன் புடவையுடனோ அல்லது மாடர்ன் கவுனுடனோ அணிந்து கொள்ளலாம். அதேபோல நவீன வெஸ்டர்ன் ஆடைகளுக்கு பெரிய பாரம்பரிய ஜும்கா (Jhumka) கம்மல்களை மட்டும் அணிந்து 'ஸ்டேட்மெண்ட் லுக்' உருவாக்கலாம்.
ஒரு பாரம்பரியமான நீண்ட ஆரம் அல்லது அட்டிகையுடன் நவீன எளிய தங்கச் சங்கிலிகளை சேர்த்து லேயராக அணிவது நம் தோற்றத்தை மிகவும் அழகாகக்காட்டும்.
பாரம்பரிய நகைகளில் வண்ணக் கற்கள் இருந்தால் அதற்கு இணையாக நவீன மோதிரங்கள் அல்லது வளையல்களைத் தேர்ந்தெடுக்கும்போது ஒரே மாதிரியான மெட்டல் (தங்கம் அல்லது வெள்ளி) இருக்குமாறு பார்த்துக்கொள்வது தோற்றத்தை ஒருங்கமைக்கும்.
உங்கள் பீரோவில் தூங்கும் பழைய கனமான பாரம்பரிய நகைகளை விற்காமல், இன்றைய ட்ரெண்டி வெஸ்டர்ன் மற்றும் இந்தோ-வெஸ்டர்ன் உடைகளுக்கு ஏற்ப எப்படி ஸ்டேட்மெண்ட் பீஸ்களாக மாற்றுவது என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.