குட்டிகளின் நலனுக்காக எதையும் செய்யத் துணியும் 10 வகை பாசக்கார விலங்குகள்!

Affectionate animals
Affectionate animals
Published on

தாய்ப்பாசம் என்பது பலவிதம். பெற்ற குழந்தைகளைப் பேணிப் பாதுகாத்து வளர்க்கும் அம்மாவும் உண்டு. பிறந்த சிசுவை குப்பைத் தொட்டியில் வீசி எறியும் அம்மாவும் உண்டு. சிசுவை விழுங்கி ஏப்பமிடும் தாய் விலங்கினத்தில் உண்டு. அதே விலங்கினத்தில், பிறந்த தனது குட்டிகளைக் காக்க எதையும் செய்யத் தயாராயிருக்கும் 10 வகையான தாய் விலங்குகள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

1. புலி: தாய்மையடைந்த பெண் புலி தனது குட்டிகளைக் காப்பதற்கு எவ்வகையான கொடூரத்தின் உச்சத்திற்கும் செல்லத் தயாராயிருக்கும். ஆபத்து நெருங்கி வரும் நேரங்களில், குட்டிகளை மறைத்து வைத்து, வேட்டையாடுபவர்களை எதிர்த்து முழு பலத்துடன் போராடி, குட்டிகளைக் காக்கும். குட்டிகளுக்கு உணவு தேடிக் கொண்டு வரவும், அவற்றுக்கு நல்லது கெட்டதைக் கற்றுக் கொடுத்து சிறந்த பாதுகாவலனாக விளங்கவும் பெண் புலி முழு அர்ப்பணிப்புடன் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும்.

2. யானை: இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது குழந்தையை வயிற்றில் சுமக்கிறது அம்மா யானை. குழந்தை பிறந்த பின் அதையே தனது உலகமாகக் கருதி, அக்குழந்தையை வேட்டையாடுபவர்களிடமிருந்து காக்கவும், கரடு முரடான வனப் பகுதியில் நடந்து செல்லவும், தனது இனக் கூட்டத்தின் நடுவே அதை நடக்க விட்டு பாதுகாப்பாக அழைத்துச் செல்லும். மற்ற பெண் யானைகளுடன் இணைந்து குழந்தையை பலசாலியாக வளர்த்து வரும்.

இதையும் படியுங்கள்:
பவளப்பாறைகள் கடலின் மழைக்காடுகள்!
Affectionate animals

3. பனிக் கரடி (Polar Bear): உறை பனி நிறைந்த ஆர்க்டிக் பகுதியில் வாழும் பெண் பனிக் கரடி, சிறிய குகைக்குள் தனது குட்டிகளை ஈன்ற பின் அவற்றை வளர்ப்பதற்கு சந்திக்கும் சவால்கள் ஏராளம். சேமிப்பில் இருக்கும் சிறிதளவு உணவுடன் குட்டிகளை பாதுகாக்க தான் பல நாட்கள் பட்டினி கிடப்பதுண்டு. குட்டிகள் நடமாட ஆரம்பித்த பின் குகையை விட்டு வெளியில் வந்து, சீல் போன்றவற்றை வேட்டையாடி குழந்தைகளுக்கு உணவளிக்கும். குட்டிகளைத் தின்ன வரும் ஆண் கரடிகளிடமிருந்து அவற்றைக் காப்பாற்ற கடுமையாகப் போராடும். அதன் பலம், மன உறுதி, தியாகம் போன்றவை ஈடு இணையற்றது.

4. முதலை (Alligator): முதலை நீர் நிலைகளுக்கருகில் மண் மற்றும் இலை தழைகளை சேர்த்து, தான் முட்டை இட ஒரு கூட்டை உருவாக்கும். முட்டையிட்ட பின் வாரக் கணக்கில் கூட்டின் அருகிலேயே சுற்றி வந்து முட்டைகளைப் பாதுகாக்கும். குஞ்சுகள் வெளிவந்த பின் அவற்றை தனது தாடைகளில் மிருதுவாகப் பற்றி எடுத்து நீருக்குள் செல்லும். மாதக் கணக்கில் அவற்றுக்கு வாழ்வியலைக் கற்றுக் கொடுக்கும். அபாயமான சூழ்நிலைகளில் ஆக்ரோஷமாகப் போரிட்டு குட்டிகளைக் காப்பாற்றும்.

இதையும் படியுங்கள்:
லின்ங்ஸ் (Lynx) காட்டுப் பூனைகளைப் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்!
Affectionate animals

5. ஆக்டோபஸ்: இது ஆயிரக்கணக்கில் முட்டையிடும். முட்டைகளை விட்டு எங்கும் செல்லாமல் அவற்றின் மீது நீரைத் தெளித்து ஆக்ஸிஜன் பெற உதவும். இருண்ட பாறைகளுக்கிடையில் மாதக் கணக்கில் தங்கி குட்டிகளுக்கு வாழ்க்கைப் பாடத்தை கற்றுக் கொடுத்த பின், சக்தியிழந்து தான் இறந்து போகும்.

6. சிறுத்தை: பெண் சிறுத்தை தனது குட்டிகள் பிறந்தது முதல் தமது பொறுப்பில் வைத்தே அவற்றைப் பாதுகாக்கும். அடர்ந்து உயர்ந்த புற்களுக்கிடையே குட்டிகளை மறைத்து வைத்து விட்டு உணவு தேடிச் செல்லும். குட்டிகளை சிங்கம் மற்றும் ஹைனா போன்ற பலசாலி மிருகங்களிடமிருந்து காப்பாற்ற, இடத்தை மாற்றிக்கொண்டே இருக்கும். அச்சுறுத்தல் மிக்க காட்டுப் பகுதியில் குட்டிகளை பலமுள்ளவைகளாக வளர்க்க அதிகம் பாடுபடும்.

7. ஒரங்குட்டான்: இது தனது குட்டியை வயிற்றுப் பகுதியில் சுமந்தபடி மரத்திற்கு மரம் தாவிச் சென்று உணவு சேகரித்துக் கொடுக்கும். சுமார் ஏழு ஆண்டு காலம் இப்படியே பாதுகாப்பளித்து, குட்டிக்கு வன வாழ்க்கைக்குத் தேவையான சூட்சுமங்களை கற்றுக் கொடுக்கும்.

இதையும் படியுங்கள்:
பசலைக்கீரை சாகுபடியில் உரங்களின் அவசியம்!
Affectionate animals

8. மூஸ் (Moose): மூஸ் தனது குட்டியை பாதுகாக்க ஓநாய், கரடி மற்றும் மனிதர்களை எதிர்த்தும் மூர்க்கத்தனமாகப் போராடக் கூடியது. தனது பலம் மிகுந்த கால்கள் மற்றும் நகங்களைக் கொண்டே எதிரிகளை பயந்து ஓடச் செய்துவிடும். இதன் பலம் மற்றும் பயமற்ற தன்மையைப் பார்த்து வளரும் குட்டியும் தன்னை பலசாலி மிருகமாக வளர்த்துக் கொள்ளும்.

9. குளவி (Wasp): அளவில் சிறியதாயினும், கூட்டுக்குள் இருக்கும் குட்டிகளைக் காக்க, மற்ற குளவிகளையும் சேர்த்து ஓரணியாகச் சென்று எதிரிகளை விரட்டியடித்து விடும். ஆபத்து என்று தெரிந்தால் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் கொடுக்கால் எதிரியை கொட்டவும் செய்யும்.

10. நீலத் திமிங்கலம் (Blue Whale): நீண்ட கால கர்ப்பத்திற்குப் பிறகு உலகிலேயே பெரிய குட்டியைப் பெற்றெடுக்கும் மீன் இது. குட்டிக்கு சத்தான பாலைப் புகட்டி பலசாலியாக வளர்ப்பதுடன், மிகப் பரந்த கடலுக்குள் ஆர்கா (Orca) மற்றும் ஷார்க் (Shark) போன்ற அபாயகரமான மீன்களிடமிருந்து எப்படித் தப்பித்து வாழ்வது என்பதையும் கற்றுக்கொடுக்கும். இதற்காக தனது குட்டியின் கூடவே கடலுக்குள் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணிப்பதும் உண்டு. இதன் பொறுமையும், பலமும், கவனிப்பும் கடலை விடப் பெரிது எனலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com