
சென்னையில் ஐம்பது வருடங்களாக வாழ்ந்தவனுக்கும் வெயில் பழகாமல் தகித்துச் சுட்டெரிக்கிறதே. ஏன் பழகிக்கொள்ள முடியாத முரட்டுத் தன்மை கொண்டது தான் வெயிலா.
வெயிலிலிருந்து விடுபட்டு பனியோ மழையோ சில நாட்கள் நீடித்துப் பெய்தாலும் பிடிப்பதில்லை. எப்போது பொழிவு நிற்கும் என்று தான் எண்ணத்தோன்றுகிறது. மறுபடியும் வெயில் வராதா என்று ஏங்கவைப்பது என்ன விதமான மனநிலை.
பள்ளிக்காலங்களில் வருட விடுமுறை முழுவதும் மைதானத்தில் கழித்ததாகத்தான் நினைவு. மட்டையை எடுத்துக்கொண்டு காலையில் புறப்பட்டோம் என்றால் எப்போது வீடு திரும்புவோம் என்பதை எங்களுக்குள் வரும் சண்டை தான் தீர்மானிக்கும். அதுவும், பல சமயங்களில், சுலபமாகத் தீர்ந்து விட்டால் விட்ட இடத்திலிருந்து விளையாட்டு தொடரும். பசி தாகம் மறந்து ‘நாட்டுக்காக வேர்வை சிந்தி உழைத்த தருணங்கள்’ அவை.
வயதாக ஆகத் தாங்கும் சக்தி கூட வேண்டாமோ? இன்னும் வெயிலை எதிர்கொள்ளும் யுக்தி தெரிந்து இருக்க வேண்டாமோ? அப்படி நடக்கவில்லை, மாறாக இந்த சுட்டெரிக்கும் வெயிலைச் சபிக்கும் நிலைக்குத் தான் வந்திருக்கிறோம். போன வருடத்திற்கு இந்த வருடம் கூடித்தான் இருக்கிறது என்றும் புலம்புகிறோம்.
சிறிது தான் வருடா வருடம் வெயில் கூடுகிறது என்றும், சராசரியாகத்தான் மழை பெய்கிறது என்றும் வானிலையாளர்கள் சொன்னாலும், நம்ப மறுத்து இல்லை வெயில் கூடித்தான் இருக்கிறது, மழை குறைந்து தான் விட்டது என்று சொல்லி விடுகிறோம்.
இப்படியே போனால் சென்னை சஹாரா பாலைவனமாக மாறி விடும். வெயிலும் கூடி குடிதண்ணீரும் குறைந்து ஏரிகள் தொலைந்து, மரங்கள் அற்ற வாழத்தகுதியற்றதாக சென்னை மாறிவிடும். வேறு நகரத்திற்குக் குடிபெயரத்தான் வேண்டும் என்று பயமூட்டும் சாடிஸ்ட்களும் நம்மிடையே தான் வாழ்கிறார்கள். நமது சென்னை, ஐ லவ் சென்னை என்று ஆங்காங்கே பிம்பங்களை நிறுவி செல்பி எடுத்துக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். இதில் எவர் அக்கறையான சென்னைவாசி.
விரிந்தும் உயர்ந்தும் வளர்ந்தும் கொண்டு தான் இருக்கிறது சென்னை. திண்டிவனம் ‘சென்னைக்கு மிக அருகில்’ நெருங்கி வந்து வெகு காலம் ஆகிவிட்டது.
வெளிநாடுகளில் சீதோசன நிலைகள் பாதிக்காத அளவுக்கு அவர்கள் பெரும்பாலும் பாதுகாக்கப்பட்ட சூழலில் தான் வாழ்கிறார்கள். எங்கேயும் எப்போதும் குளிர்சாதன சூழலிலும், குளிர் பகுதிகளில் நிலையான வெப்பத்தினை தக்க வைத்தும் வாழ்கிறார்கள்.
அரேபியாவின் வெப்பம் தகிக்கும் நகரங்களிலும், ரஷ்யாவின் கடும் குளிர் பிரதேசங்களிலும் சந்தோசமாகவே வாழ்கிறார்கள். குறையோ குற்றமோ சொல்வதில்லை. நம்மவர்களும் அங்கே சென்று எச்சிலை துப்பாமல், குப்பையை கண்ட இடத்தில் எரியாமல் இதனையும் ஏற்று வாழ பழகிக் கொள்கிறார்கள்.
குளிர் இரத்தம், சூடான இரத்தம் என்ற இருவகை பிராணிகளில் நாம் குளிர் இரத்த பிராணிகள், சுற்றுப்புற சூழலுக்கு ஏற்றவாறு உடல் வெப்பம் மாறும் தன்மை கொண்டவர்கள் என்று படித்ததும் நினைவில் நிற்கிறது.
அதனால் தான் வெப்பம் தகிப்பதும் குளிர் நடுக்குவதும் சாத்தியமாகிறது. அப்படி இயற்கையில் ஏற்படும் போது தாங்கிக்கொள்ளும் சக்தி தான் நமது புலம்பல்களாக வெளிவருகிறது.
தென் அமெரிக்க நாடுகளான பிரேசில், அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் வெயில் காலங்களில் அலுவலக பள்ளி நேரங்களில் மாற்றம் செய்து மதியம் தவிர்த்து , காலையிலும், நீடித்த மாலைகளிலும் செயல் படுகிறார்கள். மதியத்தில் வீட்டிலோ அலுவலகத்திலோ தூங்கி ஷீஷ்டா siesta என்ற பெயரிட்டு தேசிய பழக்கமாகவே மாற்றிவிட்டார்கள். நாம் இப்படி பெயரிடாமலே பள்ளி, அலுவலகங்களில் தூங்குகிறோம் என்பது தனிக்கதை.
ஆரோக்கியம் பேணப்படதான் வேண்டும். தட்ப வெப்பமும் நம் விருப்பத்திற்கு தக்கமாதிரி மாற்ற முடியாதது தான். நாம் தான் மாற்றிக்கொள்ளவேண்டும் மனத்தையோ, சூழலையோ அல்லது இடத்தையோ.