
காய்கறிகள், பழங்கள், பூக்கள் கொண்ட பிளாஸ்டிக் பைகளை சுமந்து கொண்டு ஏராளமான மனிதர்கள் வலம் வருவதை தினமும் பார்க்க முடிகிறது. ஒருமுறை மட்டுமே உபயோகப்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் அவ்வப்போது எரிக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் கவர்களை திறந்த வெளியில் எரிப்பது மனிதர்களின் ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் மிக கடுமையான தீங்கை விளைவிக்கும்.
பிளாஸ்டிக் பைகளை எரிப்பதால் உண்டாகும் தீமைகள்:
மனிதர்களுக்கு ஏற்படும் ஆரோக்கியக் கேடுகள்: பிளாஸ்டிக் பைகளை எரிக்கும்போது அவற்றிலிருந்து மிகவும் ஆபத்தான ரசாயனங்கள் வெளியேறுகின்றன. இதில் இருக்கும் டயாக்ஸின் என்ற ரசாயனம் புற்று நோயை உண்டாக்கும் அளவு ஆபத்தானவை. பிளாஸ்டிக் பைகள் எரியும்போது வெளியேறும் புகையை மனிதர்கள் சுவாசிக்கும்போது கடுமையான ஆரோக்கியக் கேடுகள் உண்டாகின்றன. நோய் எதிர்ப்பு அமைப்பு பாதிக்கப்படும். ஹார்மோன் பிரச்னைகளை ஏற்படுத்தும்.
பிளாஸ்டிக் பைகள் எரிக்கப்படும்போது வெளியேறும் கார்பன் மோனாக்சைடு நமது இரத்தத்தில் உள்ள ஆக்சிஜனுக்கு கெடுதல் செய்து மூச்சுத் திணறலுக்கு வழி குத்து விடும். இந்தத் தீங்கு தரும் புகையை சுவாசிப்பதால் கண்கள், மூக்கு மற்றும் தொண்டையில் உடனடியாக எரிச்சல் ஏற்படலாம். இருமல், சுவாசிப்பதில் சிரமம், ஆஸ்துமா தாக்குதல் போன்றவையும் உண்டாகும். அடிக்கடி இந்த புகையை சுவாசிக்க நேரும்போது அது மூச்சுக் குழாய் அழற்சி, நுரையீரல் நோய் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும். சிலருக்கு இந்த புகையை சுவாசிக்கும்போது தலைசுற்றல், தலைவலி, குமட்டல், வாந்தி, சுயநினைவு இழத்தல், மூளை பாதிப்பு கூட ஏற்படலாம்.
இளம் பெண்களுக்கு ஹார்மோன்களில் பிரச்னையை உண்டாக்கி கருவுறுதலில் பிரச்னை உண்டாக்கும்.மேலும், கர்ப்பிணிப் பெண்களுக்கு குழந்தை பிறக்கும்போது சிசுவுக்கு பிறப்பு குறைபாடுகள், வளர்ச்சி பிரச்னைகள் ஏற்படும். நாளமில்லா சுரப்பிகளின் சீர்குலைவுக்கு வழி கொடுக்கும்.
சுற்றுச்சூழல் பாதிப்பு:
காற்று மாசுபாடு: பல்வேறு வகையான கரிம வாயுக்கள் பிளாஸ்டிக் பைகள் எரிப்பின்போது வெளிப்பட்டு காற்று மாசுபாட்டிற்கு காரணமாகிறது. மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், நீர்நிலைகள் என எல்லாவற்றுக்கும் தீங்கை ஏற்படுத்துகின்றன. நச்சுப் புகைகள் மற்றும் துகள்கள் காற்றுடன் கலக்கும்போது அது காற்றை மாசுபடுத்தி விடுகிறது.
மண் / நீர் மாசுபாடு: நச்சுப் புகை இறுதியில் மண்ணிலும் நீர் நிலைகளிலும் குடியேறும். பிளாஸ்டிக் எரிந்து சாம்பல் ஆகும்போது அந்தக் கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் மண்ணிலேயே தங்கிவிடும். இது மண்ணின் பயிர் வளத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு அல்லாமல், நிலத்தடி நீருக்கும் தீங்கு விளைவிக்கும். அதில் ரசாயனங்கள் சேர்ந்து விடும். மண் வளம் கெட்டு அதில் உள்ள சத்துக்கள் பாதிக்கப்பட்டு பயிர் வகைகள் சரியாக வளராமல் போகும். நீர் நிலைகளிலும் பிளாஸ்டிக்கின் நச்சுக்கள் கலப்பதால், அந்த நீரை அருந்தும் மனிதர்கள், விலங்குகளை பாதிக்கும்.
காலநிலை மாற்றம்: பிளாஸ்டிக்கை எரிப்பதால் கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன் போன்ற வாயுக்கள் வெளியேறி அதிக அளவு வெப்பத்தை உண்டாக்குகின்றன. இவை பூமியின் அதிக வெப்பமடைதல் பிரச்னைக்கு துணை புரிகின்றன. எனவே, பிளாஸ்டிக் பைகளை ஒருபோதும் எரிக்கக் கூடாது. இவற்றை எரிப்பது ஆபத்தான செயலாகும். அதை முறையாக மறுசுழற்சி செய்ய கழிவு மேலாண்மைக்கு அனுப்ப வேண்டும்.
குப்பைகளை தரம் பிரித்து பிளாஸ்டிக் பைகளை தனியாக தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மிகவும் முக்கியமாக பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும். வீட்டிலிருந்து மஞ்சள் பை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். அதுதான் இதற்கு நல்ல தீர்வாக இருக்கும்.