

மனிதர்களைப் போலவே சில மிருகங்களும் பறவைகளும் தனிப்பட்ட ‘பெயர்’ போன்ற ஒலிகளைப் பயன்படுத்தி ஒருவரை ஒருவர் அழைக்கின்றன என்பதை புதிய ஆய்வுகள் காட்டுகின்றன. டால்பின்களின் சிக்னேச்சர் விசில், ஆப்பிரிக்க யானைகளின் தனித்துவ அழைப்புகள், கிளிகளின் குரல் அடையாளம் போன்றவை மூலம், குறிப்பிட்ட நபரை குறிவைத்து அழைக்கும் திறன் இருப்பதை விஞ்ஞானிகள் நிரூபிக்க முயல்கின்றனர்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பெயர் உண்டு. அந்தப் பெயரைச் சொல்லித் தான் ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி அழைக்கிறோம்!
இது போக நாம் வளர்க்கும் நாய்குட்டிகளுக்கும் இதர செல்லப்பிராணிகளுக்கும் கூட ஒரு பெயரை வைத்து அதை வைத்துத் தான் அவற்றை அழைக்கிறோம்.
அது சரி, இப்படி பெயர் வைத்து அழைப்பது மனித குலத்திற்கே உரித்தான தனி அம்சமா அல்லது விலங்குகள் கூட இப்படி பெயர்களை வைத்துக் கொள்கின்றனவா?
இந்த சுவையான விஷயம் பற்றி ஆராய்ச்சிகளை மேற்கொண்ட விஞ்ஞானிகள் சில மிருகங்களும் பறவைகளும் தங்கள் குரல் ஒலி மூலம் இதர விலங்குகள் பறவைகளையும் அழைக்கின்றன என்று கண்டுபிடித்துள்ளனர். ஆனால், சில விஞ்ஞானிகள் இதை ஒப்புக்கொள்ளவில்லை.
ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் டால்பின்கள் தங்களது தனிப்பட்ட விசில் ஒலி மூலம் இதர டால்பின்களை அழைத்தன என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்தார்கள். இதற்கு சிக்னேச்சர் விசில் (Signature Whistle) என்று பெயரிட்டனர்.
இதைத் தொடர்ந்து கடந்த பல வருடங்களாக ஆய்வை மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் கடலுக்கடியில் ஆழ்கடல் ஸ்பீக்கர் ஒன்றை வைத்து விதவிதமான ஒலிகளை எழுப்பி ஆய்வு செய்து பார்த்தனர். இந்த ஒலிகளுக்கு டால்பின்கள் எப்படி எதிர்விளைவைக் கொடுக்கின்றன என்பதை ஆர்வத்துடன் கவனித்தார்கள்.
நாம் எப்படி பெயரைச் சொல்லி ஒருவரை அழைக்கிறோமோ அதே போலத்தான் டால்பின்களும் சிக்னேச்சர் விசிலை இனம் கண்டு அதை அழைப்பவரை இனம் காண்கிறது என்பதை அவர்கள் அறிந்தனர். இந்த விசிலின் அதிர்வெண், வடிவம் அவற்றை அவர்கள் ஆராய்ந்தனர்.
அமெரிக்காவில் ஃப்ளோரிடாவில் உள்ள டால்பின் ஆய்வு மையத்தில் பணியாற்றும் மூளைத்திறன் ஆய்வு நிபுணரான கெல்லி ஜாக்கோலா (Kelly Jaakkola) லைவ் ஸயின்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் டால்பின்கள் தங்கள்து விசில் ஒலியை வைத்து இணக்கமாகப் பழகுகின்றன என்கிறார்.
பல்வேறு விதமான ஒலியை எழுப்பி மிருகங்களிடம் என்ன எதிர் விளைவு ஏற்படுகிறது என்று பார்ப்பதே ஆய்வின் முக்கிய அம்சமாகும். ஆப்பிரிக்காவில் உள்ள யானைகளிடம் இந்த சோதனை நடத்தப்பட்டது.
அப்போது அவை ஒன்றுக்கொன்று தனித்துவமான ஒலிகளைக் கொண்டு ஒன்றையொன்று அறிந்து கொள்கின்றன என்பது தெரிய வந்தது. இந்த ஆய்வை நடத்திய குழு 2023ல் ப்ரீப்ரிண்ட் ) ஸ்டடி (Preprint Study என்றை அறிக்கையை சமர்ப்பித்தது. இது இன்னும் ஆய்வில் இருக்கிறது.
யானைகளின் பெயர்களை ஸ்பீக்கரில் ஒலிக்கச் செய்யும் போது அவை உடனடியாக ஸ்பீக்கர்களை நோக்கி வருகின்றன என்று இந்த ஆய்வை மேற்கொண்ட கொலொரோடா ஸ்டேட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நடத்தை பற்றிய சூழியல் வல்லுநரான (Behaviral Ecologist) மைக்கேல் பர்டோ கூறுகிறார்.
இப்படி ரிகார்ட் செய்யப்பட்ட ஒலிகளை ஒலிக்கச் செய்து கிளிகளிடம் ஒரு ஆய்வானது தென் அமெரிக்காவிலும் மத்திய அமெரிக்காவிலும் மேற்கொள்ளப்பட்டது. சின்னக் கிளிகள் இந்த ஒலி அலைகளுக்கு உடனடியாக எதிர்வினை ஆற்றி பதிலைத் தருகின்றன.
800 பறவைகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் பாதிக்கும் மேற்பட்ட பறவைகள் தங்கள் குரல் ஒலியை வைத்து தங்களைச் சுற்றியுள்ள தாங்கள் அறிந்த தனி நபர்களையும் மிருகங்களையும் நன்கு அறிகின்றன என்பது தெரிய வந்தது.
மனிதர்களிடமிருந்து கிளிகள் நிறையக் கற்றுக் கொள்கின்றன. எதைச் சொல்ல வேண்டும் என்பது அவற்றிற்கு அத்துபடி என்கிறார் உயிரியல் வல்லுநரான லார்ன் பெனிடிக்ட். இவர் வட கொலொரோடாவில் பணியாற்றி வருபவர். முதன்முதலாக கிளிகள் மீது இந்த ஆய்வை மெற்கொண்டவரும் இவர் தான்.
சர்வேயில் பங்கு கொண்ட ஒருவர் தனது கிளி தவறாக அதை அழைத்தால் அதை சரி செய்கிறது என்கிறார். இன்னொருவரோ கிளிகள், நாய்கள் பெயரையும் மனிதர்கள் பெயரையும் நன்கு அறிகின்றன என்கிறார்.
2026 ஜூலை மாதம் வெளியிட்ட ஆய்வுக் குறிப்பில் ஜாக்கோலா தெரிவிப்பது:
“இவற்றிற்கு மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன. தனிப்பட்ட குறிப்பு, அழைப்பின் அர்த்தம், ஒரு குறிப்பிட்ட நபருக்கான அழைப்பு.
இவற்றை வைத்துப் பார்த்தால் டால்பின்கள் பெயர் சொல்லி அழைக்கின்றன என்று மிக அழுத்தமாகக் கூறலாம்.”
“இது பற்றி இன்னும் நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இன்னும் காக்கைகள், ஒட்டகசிவிங்கிகள் உட்பட்ட பறவை, விலங்குகள் பற்றி ஆராயாமல் விட மாட்டோம். புதிய கண்டுபிடிப்புகள் வர இருக்கின்றன” என்பது இது பற்றி ஆய்வு நடத்தும் பல்வேறு குழுக்களின் கருத்தாக அமைந்துள்ளது.
மிருகங்களுடனும் பறவைகளுடன் மனிதர்கள் சகஜமாக பேசும் நாட்களை இந்த ஆய்வுகளால் நாம் எதிர்பார்க்கலாமே!
விலங்குகளின் குரல்வழி தொடர்பாடல் மற்றும் பெயரிடும் முறைகளைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெறுவதன் மூலம், இயற்கையுடன் மனிதன் கொள்ளும் பிணைப்பை மேம்படுத்தி புதிய பரிமாணத்திலான உயிரினப் புரிதலை நீங்கள் அடைவீர்கள்.