
வேப்ப மரத்தின் அடியில் அமர்வதாலும், அதன் காற்றை சுவாசிப்பதாலும், அதனை பார்ப்பதாலும் ஒருவிதமான மன அமைதி கிடைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு பெருக்கக் கூடியது. வயிற்று பிரச்னைகளை தீர்க்கக் கூடியது. மேலும், புற்றுநோய் வராமலும் தடுக்கிறது. நோய் கிருமிகளை அழிக்கக்கூடிய சக்தியும் வேப்ப மரத்திற்கு உண்டு.
இன்றும் கிராமப்புறங்களில் காலையில் வேப்பங்குச்சிகளை கொண்டு பல் துலக்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். வேப்பங்குச்சி பல் ஈறுகளை உறுதிப்படுத்தி பற்களில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கிறது என்பதுதான் இதன் காரணம்.
வேப்ப மரத்தின் இலை, கொட்டை, குச்சி, வேர், அதன் பட்டை என எல்லா பாகங்களும் பயனுள்ளவை. வேப்பிலையை வெந்நீரில் போட்டுக் குளித்தால் அலர்ஜி, சிரங்கு, வீக்கம் மற்றும் பல சரும வியாதிகளுக்கு நல்லது. வேப்பங்கொழுந்தை அரைத்து மோரில் கலக்கிக் குடித்தால் வயிற்றில் இருக்கும் பூச்சிகளை ஒழிக்கும். தினமும் காலை நேரத்தில் 10 வேப்பங்கொழுந்து எடுத்து அதனுடன் 5 மிளகுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலேரியா காய்ச்சல் குணமடையும். வேப்பங்காய் தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.
வேப்பிலை பொதுவாக பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதாக மக்களால் அறியப்படுகிறது. ஆனால் வேப்பிலை நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்தும் என்று NCBI-யின் ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலையை மென்று சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது. கணையம் தனது வேலையைச் சரியாக செய்யும். இதன் காரணமாக இயற்கையான செயல்முறை மூலம் இன்சுலின் உற்பத்தி செய்யப்படுகிறது. இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் வேப்ப இலைகளில் இதுபோன்ற பல பண்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
சிறிதளவு மஞ்சளையும், வேப்பிலையையும் சேர்த்து அரைத்து முகத்தில் வரும் முகப்பருக்கள் மீது தடவினால் அவை வாட்டம் கண்டு உதிர்ந்து போவதுடன் முகமும் பளபளக்கும்.
வேப்பங் கொட்டையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் நம் சருமத்திற்கு நல்லது. இது சருமத்தை பாதுகாப்பதுடன் ஒருவித மிருதுத் தன்மையையும் அளிக்கிறது. வேப்ப எண்ணெயில் தலைமுழுகி வர சீதள ரோகம், பாரிச வாயு, ஜன்னி, வாத நோய்கள் தீரும்.
வேப்பம்பூவை உலர்த்தி வைத்துக் கொண்டு அவ்வப்போது ரசம் தயாரித்து சாப்பிடலாம். இல்லையென்றால் வேப்பம் பூவை நெய்யில் வதக்கி சாப்பிடலாம். இது ஜீரணக் கோளாறுகளுக்கு நல்லது.
வேப்பிலையை எலுமிச்சை சாற்றுடன் கலந்து அரைத்து தலைக்கு தேய்க்க பித்தத்தால் ஏற்படும் மயக்கம் சரியாகும். குமட்டல், வாந்தி, மயக்கம் போன்றவை குணமாகும். பித்த வெடிப்பிற்கு வேப்பிலை சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வேப்பிலை மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசி வந்தால் பித்த வெடிப்பு மற்றும் கால் பாதம் எரிச்சல் போன்றவை குணமடையும்.
முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி இரண்டு கிராம் கலந்து சிறிது சர்க்கரை சேர்த்து காலை, மாலை இருவேளையும் சாப்பிட்டு வந்தால் தொழுநோய் முதலான அனைத்து சரும நோய்களும் குணமாகும். வேப்பம் பட்டை 150 கிராம், கஸ்தூரி மஞ்சள், பூண்டு, மிளகு, சீரகம் இவற்றை வகைக்கு 50 கிராம் எடுத்து இடித்துத் தூளாக்கி ஒரே மாட்டின் பசும்பால் ஒரு லிட்டர் மற்றும் நல்லெண்ணெய் ஒரு லிட்டர் எடுத்து இவையனைத்தையும் ஒன்றாக சேர்த்து காய்ச்சி உரிய பதம் வந்ததும் இறக்கி ஆறிய பின்னர் வடிகட்டி வைத்துக் கொண்டு இந்த எண்ணெயில் தலைக் தேய்த்து குளித்து வந்தால் பீனிசம், வாத ரோகங்கள், சருமம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும்.
மிகவும் பழைமையான வேப்ப மரத்தின் இலை, பூ, பட்டை, வேர்ப்பட்டை, காய் ஆகியவற்றை சம அளவு எடுத்து உலர்த்தி பொடித்து சூரணம் செய்து அதை 25 கிராம் அளவு தேனில் கலந்து காலையில் சாப்பிட உடல் வலிமையும், வனப்பும் அதிகரிக்கும். இந்த சூரணம் ஒரு காயகல்பமாகும்.
வேப்பிலையை உலர வைத்து அவற்றை மெலிதான துணியில் சுருட்டி அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் வைத்திருக்கும் மூட்டைகளில் போட்டு வைத்தால் புழுவோ அல்லது வண்டோ வராது. கம்பளி ஆடைகளை வைக்கும் பெட்டிகளின் அடியில் உலர்ந்த வேப்பிலையை போட்டு வைத்தால் பூச்சிகள் அண்டாது.