
ஜப்பானிய மொழியில் ‘ஒரு தொட்டியில் நடப்பட்டது’ என்று பொருள்படும் போன்சாய், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஒரு வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. போன்சாய் கலை பெரும்பாலும் ஜப்பானுடன் தொடர்புடையது என்றாலும், அது உண்மையில் சீனாவில் தோன்றியது, அங்கு அது ‘பென்ஜிங்’ என்று அழைக்கப்பட்டது.
இயற்கையில் பெரிதாக வளரக்கூடிய மரங்களைத் திறமையான கத்தரிப்பு மூலமும், அவற்றின் தண்டுகளில் கம்பிகளைச் சுற்றிக் கட்டுப்படுத்துவதன் மூலமும், உரிய அளவுக்கு வளரவிடாது, முதிர்ந்த மரங்களின் தோற்றத்தில் குள்ளமாகவும், பார்வைக்கு அழகாகவும் இருக்கும்படி சட்டிகளில் வளர்க்கும் முறை பொன்சாய் எனப்படும்.
போன்சாய் மரம் வளர்ப்பதற்கான சில குறிப்புகள்:
மரம் மற்றும் செடி வகை: சிறிய, குறுகலான இலையுதிராத தன்மை கொண்ட மரம் மற்றும் செடி வகைகள் போன்சாய்க்கு மிகவும் உகந்தவை. கனிகள் மற்றும் மலர்கள் கொடுக்கும் மரங்கள் மற்றும் செடிகளை போன்சாய் செய்யும் போது அழகும், மதிப்பும் கூடுதலாக இருக்கும்.
மண்: போன்சாய் மரங்களுக்கு போதுமான காற்றோட்டம் மற்றும் தண்ணீரைத் தக்கவைக்கும் நன்கு வடிகட்டிய மண் கலவை தேவைப்படுகிறது. வேர்கள், இலைகள், கிளைகள், தண்டுகள் மற்றும் வேர்களை தவறாமல் கத்தரிப்பது போன்ற கவனிப்புகள், மரம் அதன் சிறிய தோற்றத்தை பெற உதவும்.
கம்பிகள்: மரத்தின் கிளைகளை விரும்பிய வடிவில் வளைக்க கம்பிகளைப் பயன்படுத்தலாம்.
பராமரிப்பு: போன்சாய் மரங்களுக்கு முறையாக தண்ணீர் ஊற்றுதல், உரமிடுதல், கத்தரித்தல் மற்றும் பூச்சி கட்டுப்பாடு போன்ற பராமரிப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும். போன்சாய் வளர்ப்பு ஒரு பொழுதுபோக்காக மகிழ்ச்சியையும், நிறைவையும், அற்புதமான இயற்கை உலகத்திற்கான ஆழமான புரிதலையும் தருகிறது.
போன்சாய் மரத்தின் விலையானது வயது, அளவு, மரம் வகை, பயிற்சி மற்றும் ஸ்டைலிங் போன்ற பல காரணிகளைப் பொறுத்து அமையும். போன்சாய் மரங்கள் அரிதானவை, அதிக கவனம், வளர்ப்பதற்கு அதிக நேரம், உழைப்பு மற்றும் படைப்பாற்றல் திறன் தேவை போன்ற காரணங்களால் இவற்றின் விலை அதிகம். சிறு அளவு, குறைவான பயிற்சி மற்றும் ஸ்டைலிங் கொண்ட மரங்கள் பொதுவாக ரூ. 1000ல் இருந்து ரூ.3500 வரை இருக்கும். அதேபோல் பழமையான போன்சாய் மரங்கள் விலை அதிகம். அதாவது எவ்வளவு பழமையானதாக இருக்கிறதோ அந்தளவுக்கு அதன் விலையும் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி பெரிய மரங்கள், அரிய வகையான போன்சாய் மரங்கள், பயிற்சி மற்றும் ஸ்டைலிங் கொண்ட மரங்கள், அதிக கவனம் தேவைப்படும் போன்சாய் மரங்களுக்கு விலை அதிகமாக இருக்கும்.
சில கலாச்சாரங்களில், குறிப்பாக ஃபெங் சுய் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளில், போன்சாய் மரங்கள் நல்ல அதிர்ஷ்டத்தையும் நேர்மறை ஆற்றலையும் தருவதாக நம்பப்படுகிறது. இவை பெரும்பாலும் ஒருவருக்கு அதிர்ஷ்டம், செழிப்பு மற்றும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளைக் கொண்டாட பரிசளிக்கப்படுகின்றன.
போன்சாய் மரங்கள் அமைதி, சமநிலை, நேர்மறை ஆற்றல், நல்லிணக்கம் மற்றும் அதிர்ஷ்டத்தின் சின்னங்களாகக் கருதப்படுகின்றன. இவை ஜப்பான், தைவான் மற்றும் சீன கலாச்சாரங்களில் குறிப்பாகப் போற்றப்படுகின்றன.
சில வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் போன்சாய் மரம், செடிகளை வீட்டிற்குள் வைப்பது நல்லதல்ல என்று அறிவுறுத்துகிறார்கள், ஏனெனில் அவை மெதுவான மற்றும் குன்றிய வளர்ச்சியைக் குறிக்கின்றன என்று நம்பப்படுகிறது. ஆனால் அவற்றை தோட்டம் அல்லது வராண்டா போன்ற திறந்தவெளியில் வைக்கலாம் என்று கூறுகின்றனர். ஃபிகஸ் போன்சாய் போன்ற சில போன்சாய் வகைகள், குறிப்பாக நல்ல அதிர்ஷ்டம் மற்றும் நேர்மறை ஆற்றலுடன் தொடர்புடையவை. அதேபோல் ஜேட் செடிகள் (Jade plants) நல்ல அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் தரும் அதிர்ஷ்ட தாவரங்களாக கருதப்படுகின்றன.
இயற்கையில், மரங்கள் முதுமையால் இறக்காது. அவற்றின் அழிவு பொதுவாக புயல்கள், மின்னல் தாக்குதல்கள் அல்லது சுற்றுச்சூழல் அழுத்தங்கள் போன்ற வெளிப்புற காரணிகளால் ஏற்படுகிறது. இருப்பினும், போன்சாய் மரங்கள் இந்த அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. இதனால் அவை காடுகளில் இருப்பதை விட வீடுகளில் இருக்கும் போது நீண்ட காலம் வாழ்கின்றன.
சரியான கவனிப்புடன், ஒரு போன்சாய் மரம் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கூட வாழ முடியும். இது ஒரு நேசத்துக்குரிய சொத்தாக மாறும். எடுத்துக்காட்டாக பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து, போன்சாய் மாஸ்டர்களின் தலைமுறைகளால் பராமரிக்கப்படும் போன்சாய் மரங்கள் ஏராளமாக உள்ளன. மிகவும் பிரபலமான எடுத்துக்காட்டுகளில் ஒன்று இத்தாலியில் உள்ள க்ரெஸ்பி போன்சாய் அருங்காட்சியகத்தில் உள்ள ஃபிகஸ் போன்சாய் ஆகும். இது 1,000 ஆண்டுகளுக்கும் மேலானது என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பழங்கால போன்சாய் மரம் கவனமாக பராமரிக்கப்படுவதால், நீண்ட ஆயுளையும் மீள்தன்மையையும் எடுத்துக்காட்டுகிறது.
மற்றொரு குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டு, ஜப்பானில் உள்ள மான்சாய்-என் போன்சாய் நர்சரியில் உள்ள ஒரு வெள்ளை பைன் போன்சாய் ஆகும். இது 400 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே குடும்பத்தால் பராமரிக்கப்படுகிறது. இந்த போன்சாய் கலையின் நீடித்த கவர்ச்சி மற்றும் காலத்தால் அழியாத அழகுக்கு ஒரு உயிருள்ள சான்றாக செயல்படுகிறது.
ஜப்பானின் தகாமட்சுவில் நடந்த சர்வதேச போன்சாய் மாநாட்டில் 1.3 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்ட இந்த நூற்றாண்டின் பழமையான பைன் தான் மிகவும் விலையுயர்ந்த போன்சாய் மரமாகும்.