
பொது மக்களிடையே சிறு செடிகளில் இருந்து தொடங்கப்பட்ட மாடித்தோட்டமானது, இன்று அளப்பரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் பலரும் மாடித்தோட்டத்தில் அதிக ஈடுபாட்டுடன் செடிகளை வளர்க்கின்றனர். மாடித் தோட்டத்தால் பலரது வீடுகள் பசுமைப் பூங்காவாக மிளிர்கின்றன. மிக எளிதாக வளரக்கூடிய காய்கறி மற்றும் பூச்செடிகளையே மக்கள் முதலில் வளர்க்கத் தொடங்கினர். ஆனால், இன்று மரங்களைக் கூட மாடித்தோட்டத்தில் வளர்க்கின்றனர். இதன் வரிசையில் தற்போது வீட்டிலேயே காலிஃபிளவரை எப்படி அறுவடை செய்யலாம் எனப் பார்ப்போம்.
அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் காய்கறிகளில் காலிஃபிளவரும் ஒன்று. வீட்டுத் தோட்டத்தில் ஆர்வமுள்ளவர்கள் வழக்கமான காய்கறிகளோடு, காலிஃபிளவரையும் மிக எளிதாக வளர்க்க முடியும். இதற்கென தனியாக நேரத்தை செலவிட வேண்டிய அவசியமில்லை. மற்ற காய்கறிகளைப் பராமரிக்கும் போதே இதனையும் வளர்த்துக் கொள்ளலாம்.
விதைத்தல்:
தரமான காலிஃபிளவர் விதைகளை எடுத்து, மண் கலவை கொண்ட ஒரு ட்ரேயில் விதைக்க வேண்டும். காலிஃபிளவரை அதிக எண்ணிக்கையில் பயிரிட விரும்பினால், ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் கொத்தாக வளர்க்க வேண்டும். பின்பு நெல் விதைப்பில் பின்பற்றப்படும் நாற்று நடுதல் முறைப்படி, 3 வாரங்களுக்குப் பிறகு வேறு இடத்தில் இந்தச் செடிகளை பிடுங்கி நட்டால் நல்ல மகசூல் கிடைக்கும். அதிலும் 5 முதல் 6 இலைகள் வந்த பிறகு நட்டால் மகசூல் இன்னும் கூடுதலாக கிடைக்கும். காலிஃபிளவரை வளர்க்க ஜனவரி மாதத்திற்குள் விதைகளை விதைத்து விட வேண்டும். மிதமான வெயிலே போதும் என்பதால், நிழலான இடங்களில் வளர்ப்பது நல்லது. செடிக்கு ஈரப்பதம் இருக்கும் அளவிற்கு மட்டும் தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.
பூச்சி மேலாண்மை:
காலிஃபிளவர் செடி வளரும் போது புழு மற்றும் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இதனைத் தடுப்பதற்காக நோய் எதிர்ப்புச் சக்தி வாய்ந்த மீமாயில் கரைசலைத் தெளிக்க வேண்டும். மொட்டுகள் வெளி வந்ததும், 2 வாரங்களுக்கு ஒருமுறை இலைகளின் மீது மட்டும் இந்தக் கரைசலைத் தெளிக்க வேண்டும்.
பராமரிப்பு: காலிஃபிளவர் பூ வெளியில் தெரிந்ததும், பூக்களை வெயில் படாதவாறு இலைகளைக் கொண்டு மூட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், காலிஃபிளவரின் நிறம் மாறாமல் வெண்ணிறத்திலும், அதேநேரம் உலர்ந்து போகாமலும் இருக்கும்.
அறுவடை:
காலிஃபிளவரை 80 முதல் 100 நாட்களுக்குள் அறுவடை செய்து விடலாம். 2 மாதங்களில் மொட்டுகள் வெளியில் தெரியத் தொடங்கும். பிறகு அடுத்த ஒரு மாதத்தில் அறுவடை செய்யலாம். காலிஃபிளவர் வெளியில் தென்பட்ட சில நாட்களிலேயே, அதன் அருகில் ஒருசில பூ மொட்டுகள் வரத் தொடங்கும். இவ்வாறு பக்கவாட்டில் பூக்கள் வரத் தொடங்கி விட்டாலே, காலிஃபிளவர் அறுவடைக்குத் தயாராகி விட்டது என்பதை புரிந்து கொள்ளலாம். ஆகையால் பக்கவாட்டில் பூக்கள் வருவதற்கு முன்னரே அறுவடை செய்வது நல்லது.
பல்வேறு உணவுகளில் பயன்படும் காலிஃபிளவரை வீட்டுத் தோட்டத்திலும், மாடித் தோட்டத்திலும் பயிரிட்டுப் பயனடைவோம்.