

வீட்டுத் தோட்டங்களில் மிளகாய் செடியில் இலைகள் சுருண்டு உதிர்வதும், பூக்கள் கொட்டுவதும் பெரும் கவலையைத் தருகிறதா? இந்தச் சிக்கல்களுக்கு என்ன காரணம்? அவற்றை எளிமையான இயற்கை முறையில் எப்படித் தீர்ப்பது? கொத்து கொத்தாக மிளகாய் காய்க்க நீங்கள் செய்ய வேண்டிய ரகசியங்களை இந்தத் தொகுப்பில் தெரிந்து கொள்வோம்!
நம் வீட்டு தோட்டத்திலோ அல்லது தொட்டிகளிலோ மிளகாய் செடியை ஆர்வமுடன் வளர்க்கிறோம். நன்றாக காய்க்கும் ஒரு மிளகாய் செடி வீட்டில் இருந்தால் அதை வைத்து அன்றாட நம் தேவையை பூர்த்தி செய்து விடலாம். ஆனால் இதில் உள்ள முக்கிய சவால் என்னவெனில் இலைகள் சுருண்டு உதிர்வதும், மற்றும் பூக்கள் கொட்டுவதும் கஷ்டமாகி விடும். அதனால் நாம் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை. இலை மற்றும் பூக்கள் உதிர்வதற்கான 5 காரணங்களையும், அந்த சிக்கலை தீர்க்க இயற்கையான முறையில் வீட்டு முறைப்படி எளிதில் செய்யக் கூடிய பொருளைக் கொண்டு தீர்வையும் காண்போம்.
1. தண்ணீர் அதிகம் அல்லது குறைவாக ஊற்றுவது:
மண்ணில் அதிகப்படியான தண்ணீர் தேங்கினால் வேர் அழுகல் ஏற்பட்டு, சத்துக்களை உறிஞ்ச முடியாமல் இலைகளும் பூக்களும் உதிரும்.
அதேபோல் தண்ணீர் மிகவும் குறைந்தால், செடி தன்னைத் தற்காத்துக் கொள்ள பூக்களையும் இலைகளையும் கொட்டிவிடும்.
தீர்வு: மேல் மண் 1 முதல் 2 அங்குலம் காய்ந்த பிறகு மட்டும் தண்ணீர் ஊற்ற வேண்டும். தொட்டியில் வளர்த்தால், அடியில் உபரி நீர் வெளியேறத் துளைகள் சரியாக இருக்கிறதா என்று உறுதி செய்யவும். மேலும் வெயில் காலத்தில் தினமும் ஒரே அளவுடன் தண்ணீர் ஊற்றவும். மழைக்காலத்தில் மண்ணில் ஈரப்பதம் இல்லை என்றால் மட்டும் ஊற்றலாம். இவ்வாறு செய்வதால் மிளகாய் செடி பசுமையான இலைகளோடு வளரும்.
2. ஊட்டச்சத்து குறைபாடு:
பூ பிடிக்கும் தருணத்தில் செடிக்கு அதிக ஊட்டச்சத்து தேவைப்படும். கால்சியம், பொட்டாசியம் மற்றும் போரான் குறைபாடு இருந்தால் பூக்கள் பிஞ்சாக மாறாமல் உதிர்ந்துவிடும். மண்ணை கிளறி சரியான அளவில் உரம் போட்டு பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் இலை சுருண்டு பூக்கள் உதிரும்.
தீர்வு: ஒரு லிட்டர் தண்ணீரில் 2 ஸ்பூன் முட்டை ஓட்டின் தூள் மற்றும் 100 மில்லி புளித்த மோர் கலந்து 10 நாட்களுக்கு ஒருமுறை வேர்ப்பகுதியில் ஊற்றி மண்ணை கிளறி விட வேண்டும்.
இப்படி செய்வதனால் பூ உதிர்வு மொத்தமாக நின்று ஒவ்வொரு கணுவிலும் விரல் நீள மிளகாய் கொத்து கொத்தாக காய்க்கும்.
3. பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்குதல்:
இலை பேன், அசுவினி, செஞ்சிலந்தி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகள் இலைகளின் அடியில் இருந்து சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் சுருண்டு, உதிரத் தொடங்கும். மேலும் சாம்பல் நோய் மற்றும் இலைப்புள்ளி நோயும் இலைகளை உதிரச் செய்யும்.
தீர்வு: 100 மில்லி வேப்ப எண்ணெயில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு நுரைக்க கலக்கிக் கொள்ளவும். இந்த கலவையை 10 லிட்டர் தண்ணீரில் கலக்கினால் சக்தி வாய்ந்த இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து தயார். இந்த கரைசலை மிளகாய் செடிகளின் இலைகளுக்கு அடியிலும், மேலேயும் தெளித்தால் பூச்சிகளும் மற்றும் சாம்பல்நோய், இலைப்புள்ளி நோய் முதலியவை கட்டுப்பட்டு இலை உதிர்வதைத் தடுக்கலாம். இலைகள் அதிகம் சுருங்கியிருந்தால், பாதிக்கப்பட்ட பகுதிகளை நறுக்கி அப்புறப்படுத்தவும்.
4. காலநிலை மற்றும் வெப்பநிலை மாற்றம்:
குடைமிளகாய் வகைகளுக்கு உகந்த பகல் நேர வெப்பநிலை 21 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம்;
மிளகாய் போன்ற காரமான வகைகளுக்கு 29 டிகிரி செல்சியஸ் வரை தேவைப்படலாம்.
இரவு நேர வெப்பநிலை 16°C-க்குக் கீழே குறைவதோ அல்லது 24°C-க்கு மேலே உயர்வதோ மொட்டுகள் உதிர்வதைக் குறிக்கும். மேலும், அதிகப்படியான வெயில் (35°C-க்கு மேல்) அல்லது அதிகப்படியான மழைக்காலத்தில் பூக்களின் மகரந்தச்சேர்க்கை பாதிக்கப்பட்டு பூக்கள் உதிரும்.
5. மகரந்தச்சேர்க்கை சரியாக நடக்காதது:
போதுமான காற்றோட்டமோ அல்லது தேனீக்கள் போன்ற பூச்சிகளோ இல்லாத போது இது நடக்கும். மேலும், மகரந்தச் சேர்க்கையின் போது மிளகாய்ப் பூக்கள் வெப்பநிலைக்கு இன்னும் அதிக உணர்திறன் கொண்டவை. மகரந்தச்சேர்க்கை சரியாக நடக்கவில்லை என்றால், பூக்கள் காய்க்காமல் காய்ந்து உதிர்ந்துவிடும்.
தீர்வு: காலையில் பூ க்கள் விரிந்திருக்கும் போது, செடியை லேசாகத் தட்டி விடலாம். மேலும் தோட்டத்தைச் சுற்றி வண்ணமயமான பூச்செடிகளை வளர்ப்பதன் மூலம் தேனீக்களை ஈர்க்கலாம்.
இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், உங்கள் வீட்டுத் தோட்டத்து மிளகாய் செடியில் கொத்து கொத்தாக காய்கள் காய்த்து, தினசரி சமையலுக்கான காரசாரமான மிளகாயை வீட்டிலேயே பறித்து மகிழுங்கள்.