வீட்டுத் தோட்டத்தில் பூச்சிகள் தொல்லையா? இயற்கை முறையில் விரட்ட சூப்பர் டிப்ஸ்!

வீட்டுச் செடிகளில் பூச்சிகள் தாக்காமல் இருக்க வேப்பங்கொட்டை கரைசல், பூண்டு மிளகாய் கரைசல் போன்ற எளிய இயற்கை வழிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.
பூச்சிகள் | organic pest control
பூச்சிகள் | organic pest controlImage credit: Gemini AI
கலைமதி சிவகுரு

கலைமதி சிவகுரு, 1983-ல் நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் பட்டம் பெற்றவர். இவரது படைப்புகள் மங்கையர் மலர், தேவதை, தினத்தந்தி குடும்ப மலர் இதழ்களில் வெளியாகிப் பரிசுகள் பெற்றுள்ளன. தற்போது கல்கி குழுமத்தில் எழுதுகிறார். சமையல், ஆன்மிக வாசிப்பு, தையல் கலையில் ஆர்வம் கொண்டவர்.

Updated on: 

வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கும் செடிகளைப் பூச்சிகள் நாசமாக்கி விடுகின்றனதா? கவலை வேண்டாம்! ரசாயன மருந்துகளைத் தவிர்த்து, உங்கள் சமையலறைப் பொருட்களையும் இயற்கையான இலைகளையும் கொண்டே மிக எளிதாகப் பூச்சிகளை விரட்ட முடியும். உங்கள் தோட்டத்தைப் பசுமையாகவும் ஆரோக்கியமாகவும் பாதுகாக்க உடனே தொடர்ந்து படியுங்கள்!

வீட்டுத் தோட்டக்கலை என்பது நமது மனதுக்கு அமைதியையும், வீட்டிற்கு நறுமணத்தையும் அளிக்கக்கூடிய ஒரு அருமையான பொழுதுபோக்கு. ஆனால், நாம் ஆசையாக வளர்க்கும் செடிகளில் பூச்சிகள் தாக்கினால், அது பெரும் கவலையைத் தரும். செடிகளுக்குப் பிரச்சனை தரும் ரசாயன பூச்சிக்கொல்லிகளைத் தவிர்த்து, இயற்கையான முறையில் பூச்சிகளைத் தடுத்துப் பாதுகாக்க சில எளிய வழிகள் உள்ளன.

வீட்டுச் செடிகளில் பூச்சி தாக்காமல் இருக்கப் பின்பற்று வேண்டிய 3 மிக எளிய மற்றும் இயற்கையான வழிகள் இதோ:

1. வேப்பங் கொட்டை கரைசல்:

பூச்சி விரட்டிகளில் இயற்கையின் வரப்பிரசாதம் வேப்பங்கொட்டை ஆகும். இது செடிகளுக்கு எந்த வித பாதிப்பையும் தராமல், பூச்சிகளை திறம்பட விரட்டுகிறது.

தயாரிக்கும் முறை: 5 கிராம் வேப்பங் கொட்டையை நன்றாக இடித்து 1 லிட்டர் தண்ணீரில் 4 நாட்கள் ஊற வைத்து பின்னர் அதை வடிகட்டி அத்துடன் கூடுதலாக 1 லிட்டர் தண்ணீர் கலந்து எடுத்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை: இந்தக் கரைசலை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி, செடியின் இலைகளின் மேல் மற்றும் அடிப்புறங்களில் வாரத்திற்கு ஒரு முறை தெளிக்க வேண்டும். இது மாவுப்பூச்சி, இலைப்பேன் மற்றும் அசுவினி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளையும் இலையை உண்ணும் புழுக்களையும் கட்டுப் படுத்தி தாவரங்களை பாதுகாப்பாக வைக்கிறது. இவை சிலந்திகள் மற்றும் தேனீக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்துவது இல்லை.

இதையும் படியுங்கள்:
மிளகாய் செடி தொட்டியில் வளர்ப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி.
பூச்சிகள் | organic pest control

2. இலைகளின் மூலம் பூச்சிக்கொல்லி கரைசல்:

பல வகையான பூச்சிகள், குறிப்பாக ஈக்கள் மற்றும் சிறு பூச்சிகளை இந்த இயற்கையான திரவத்தை வைத்தே நாம் கட்டுப்படுத்தலாம்.

தயாரிக்கும் முறை: புங்கன் இலை, எருக்கு இலை, இலுப்பை இலை, அரளி இலை ஒரு கைப்பிடி வீதம் சம அளவில் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 3 நாட்கள் ஊற வைத்து வடிகட்டி அத்துடன் மாட்டின் கோமியம் 1 லிட்டர் கலந்து மேலும் தண்ணீர் சேர்த்து வைத்துக் கொள்ளலாம்.

பூச்சிகள் | organic pest control
பூச்சிகள் | organic pest controlImage credit: Gemini AI

பயன்படுத்தும் முறை: இந்த தண்ணீரை ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து தாவரங்களின் மேல் தெளித்து விடலாம். மேலும் தாவரத்தின் கீழ் பகுதியிலும் ஊற்றும் போது பூச்சிகள் தாவரங்களின் அருகில் வரவே வராது.

3. பூண்டு, இஞ்சி மற்றும் மிளகாய் கரைசல்:

பூண்டு, இஞ்சி மற்றும் மிளகாயின் காரமும், கடுமையான வாசனையும் பூச்சிகளை செடியை விட்டு ஓடச் செய்யும் மிகச்சிறந்த இயற்கை ஆயுதமாகும்.

தயாரிக்கும் முறை: சில பூண்டுப் பற்கள், ஒரு பெரிய துண்டு இஞ்சி மற்றும் இரண்டு பச்சை மிளகாயை நன்றாக அரைத்து, ஒரு கப் தண்ணீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் இந்த நீரை வடிகட்டி, அதனுடன் மேலும் இரண்டு லிட்டர் தண்ணீர் சேர்த்து நீர்த்துப் போகச் செய்ய வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மாடியில் உள்ள செடிகளின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவது ஏன்? தடுப்பது எப்படி?
பூச்சிகள் | organic pest control

பயன்படுத்தும் முறை: இந்த காரமான கரைசலைச் செடிகளின் மீது தெளித்தால், ஈக்கள், புழுக்கள் மற்றும் பூச்சிகள் செடியின் அருகில் வர அஞ்சும். குறிப்பாக, எறும்புகளின் தொல்லை அதிகமாக இருக்கும் இடங்களுக்கும் இதைப் பயன்படுத்தலாம்.

இயற்கையான முறையில் வீட்டுச் செடிகளைப் பராமரிப்பது செடியின் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, நம் சுற்றுச்சூழலுக்கும் மிகவும் நல்லது.

மேற்சொன்ன இந்த மூன்று எளிய முறைகளைத் தொடர்ந்து பின்பற்றி வந்தால், ரசாயன மருந்துகள் இன்றியே உங்கள் வீட்டுத் தோட்டத்தை பசுமையாகவும், பூச்சிகள் அற்ற ஆரோக்கியமான இடமாகவும் பாதுகாக்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com