
வாழைப்பழம் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் மலிவு விலையில் கிடைக்கும் பழம். வாழைப்பழம் மலிவு விலையில் கிடைத்தாலும் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மிகவும் உயர்வானவை. ஆசிய நாடுகளில் வாழைப்பழம் பெரும்பாலும் தினசரி உண்ணப்படுகிறது. ஆசிய நாடுகள் மட்டுமின்றி. உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் வாழைப்பழத்தின் பயன்பாடு உள்ளது. வாழைப்பழ சாகுபடி பல்வேறு நிலப்பரப்புகளிலும் செய்ய ஏற்றது. இதற்கு அதிக அளவில் செலவு செய்யத் தேவையில்லை.
எளிமையான முறையில் பயிர் செய்யப்படும் ஒரு பழமாக இது உள்ளது. மேலும், இதில் பல நூற்றுக்கணக்கான வகைகள் உள்ளன. வறுமை வாய்ந்த நாடுகளில் ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருளாக வாழைப்பழம் முதன்மை இடத்தில் உள்ளது. குழந்தைகள் முதல் சிறுவர்கள் வரை உடல் வளர்ச்சிக்குத் தேவையான அத்தியாவசியமான வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் வாழைப்பழத்தில் உள்ளதால், அவர்களுக்கு தினசரி ஒரு வாழைப்பழம் கொடுக்க நிபுணர்கள் அறிவுரை கூறுகிறார்கள்.
உணவுக்குப் பின் வாழைப்பழம் சாப்பிடுவது பாரம்பரியமாக பல நாடுகளில் உள்ளது. இவ்வளவு சிறப்பு மிக்க வாழைப்பழ உற்பத்தி எதிர்காலத்தில் கடுமையாக பாதிக்கப்படும் என்று கிறிஸ்டியன் எய்ட் நிறுவனம் கூறியுள்ளது.
உலக அளவில் அதிகம் சாப்பிடும் பழங்களில் முதன்மையாக உள்ள வாழைப்பழம் எதிர்காலத்தில் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் போகலாம். காலநிலை மாற்றத்தால் வாழை மரங்கள் அதிகளவில் பாதிப்பை சந்திக்க நேரிடும் என்று அறிக்கை கூறுகிறது. சர்வதேச அளவில் 400 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், தங்கள் உணவுத் தேவைகளில் 15 முதல் 27 சதவீதம் வாழைப்பழங்களை சாப்பிட்டே பூர்த்தி செய்கின்றனர்.
காலநிலை மாற்றம் காரணமாக வாழைப்பழங்களில் பூஞ்சை நோய்கள் பரவும். கருப்பு இலை பூஞ்சை நோய் வாழை செடிகளின் ஒளிச்சேர்க்கை திறனை 80 சதவிகிதம் குறைக்கும். மேலும், பனாமா நோய், ஃபுசேரியம் டிராபிகல் ரேஸ் 4 வகை பூஞ்சை நோய்கள் வாழை மரங்களை கடுமையாக பாதிக்கிறது. இந்தப் பூஞ்சைகள் மண் மூலமாக அடுத்த வாழை மரத்திற்கு பரவி அழிக்கும் தன்மை கொண்டது. இந்த தொற்று கேவென்டிஷ் வகை வாழை மரங்களை அதிகம் தாக்கும் என்பதால், இனி அந்த வாழைகளை அங்கு வளர்க்க இயலாது.
2050ம் ஆண்டு காலக்கட்டத்தில் காலநிலை மாற்றம் காரணமாக இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் வாழைப்பழ விளைச்சல் பெருமளவில் குறையும் என்று அறிக்கை கூறுகிறது. கொலம்பியா மற்றும் கோஸ்டாரிகா போன்ற முக்கிய வாழைப்பழ ஏற்றுமதியாளர்களும் இதனால் பாதிக்கப்படுவார்கள்.
காலநிலை மாற்றம் காரணமாக 2080ம் ஆண்டுக்குள் லத்தீன் அமெரிக்காவின் வாழை சாகுபடி அதிகளவில் பாதிக்கப்படும். இதனால் ஏற்றுமதி வாழை உற்பத்திக்கு ஏற்ற விவசாய நிலப்பரப்பளவு 60 சதவிகிதம் குறையும். கவுதமாலா நாட்டில் உள்ள வாழை மரங்களில் பெரும்பகுதி தற்போதே அழிந்து கொண்டு வருகின்றன. இந்நிலை தொடர்ந்தால் காலநிலை மாற்றம் பல விவசாயங்களை அழித்து விடும் வாய்ப்பு உள்ளது. இதை மனதில் கொண்டு சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் நோக்கத்தை அறிந்து மக்கள் செயல்பட வேண்டும்.