
வனத்தில் வாழும் விலங்குகளில் சில தாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான இரையைப் பிடிக்கவும், வேட்டையாடுபவர்களின் பார்வையிலிருந்து தப்பிக்கவும் சில வில்லத்தனமான செயல்களை கையாண்டு வருவது வழக்கம். அப்படிப்பட்ட 10 விலங்குகள் பற்றின விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.
1.பனிக் கரடி (Snow Leopard): உரு மாறக்கூடிய (அதாவது பாறை மீது செல்கையில் பிரவுன் கலர், பனி மீது வெள்ளை நிறம்) தோலை உடைய இந்த பனிக் கரடி, மலை அல்லது பனி மூடிய நிலப் பரப்புகளின் மீது சத்தமில்லாமல் பதுங்கிச் சென்று தனது இரையை ஒரே பாய்ச்சலில் கவ்விப் பிடித்துக் கொண்டு நொடியில் மறைந்து, தன் இருப்பிடம் சென்றுவிடும்.
2.ஜாகுவார் (Jaguar): வலிமையுடைய இந்த விலங்கு
மரங்களடர்ந்த காடு மற்றும் நீர் நிலைகள் வழியே, சத்தமின்றித் தன் இரையைப் பின் தொடர்ந்து செல்லும். சமயம் பார்த்து இரை மீது பாய்ந்து அதன் மண்டை ஓட்டை நொறுக்கி ஒரே அமுக்கில் கொன்று இழுத்துச் சென்றுவிடும்.
3.ஆந்தை (Owl): தனித்துவமான இறகுகளாலான இறக்கை உடையது ஆந்தை. சத்தமின்றி பறந்து சென்று கொறிப்பிகள் (Rodents) போன்ற தன் இரையின் பின்னே பதுங்கியிருந்து, துல்லியமாக கணக்கிட்டு அவற்றைப் பிடித்து உண்பதில் அதற்கு நிகர் வேறொன்றும் இல்லை எனலாம்.
4.ஆக்ட்டோபஸ் (Octopus): தன் உருவை நினைத்தபடி மாற்றிக்கொள்வதில் ஆக்ட்டோபஸைத், 'தல' என்றால் தப்பே இல்லை. அது இருக்குமிடத்தின் சுற்றுச் சூழலுக்கு தகுந்தவாறு தன் நிறத்தையும் உடல் அமைப்பையும் மாற்றிக்கொள்ளும் திறமையுடையது. தேவைப்படும்போது திரவ வடிவமாகி பாறைகளின் வெடிப்புகளுக்குள் சென்று மறைந்து கொள்ளவும் செய்யும்.
5.சிறுத்தைப் பல்லி (Leopard Gecko): ஊர்வன இனத்தைச் சேர்ந்தது இது. மிக அமைதியாய் இருப்பதுபோல் நடித்து, துல்லியமாக கணக்கிட்டு, மெதுவாக ஊர்ந்து சென்று, தனக்கு இரையாக்க நினைத்த பூச்சி மீது பாய்ந்து, அந்தப் பூச்சி தனக்கு நேரவிருக்கும் ஆபத்தை உணரும் முன்பே அதை விழுங்க ஆரம்பித்துவிடும்.
6.டைகர் (Tiger): உயர்ந்து வளர்ந்து, காய்ந்து சருகான புற்களுக்கிடையே, அதற்கு இணையான கோடுகள் உள்ளதுபோல் தன் உருவை மாற்றிக்கொண்டு, சிறு உறுமலுடன் இரையை கண்டறிந்து பிடித்துக் கொண்டு அடர்ந்த காட்டிற்குள் சென்று விடுவது இதன் வழக்கம்.
7.கும்பிடு பூச்சி (Praying Mantis): 'பெருமாள் பூச்சி' எனவும் அழைக்கப்படும் இந்தப் பூச்சி தன் நிறத்தை ஒத்த இலை அல்லது பூ மீது அமைதியாக அமர்ந்து கொள்ளும். தன் இரையைக் கண்டவுடன் மின்னல் வேகத்தில் பாய்ந்து அதைப் பிடித்துக்கொள்ளும்.
8.பச்சோந்தி (Chameleon): இதன் நிறம் மாறும் குணம் பிரசித்தி பெற்றது. இதை வேட்டையாட வருபவர்கள் அல்லது மற்ற பூச்சிகள் இது இருப்பதை கண்டுபிடிக்க முடியாதபடி நிறத்தை மாற்றிக்கொண்டு அமர்ந்திருந்து, தன் காரியத்தை சாதித்துக் கொள்ளும்.
9.நரி (Fox): சிவப்பு நரி அமைதியும் சுறு சுறுப்பும் உடையது. இருட்டு நேரத்தில்தான் இருப்பதை மறைத்து எலி போன்ற பிராணிகளை வேட்டையாடுவதில் திறமைசாலி.
10.ஃபோஸ்ஸா (Fossa): இது மடகாஸ்கர் பகுதியில் காணப்படும் ஒரு விலங்கு. இரை தேட இரவில் புறப்பட்டுச் செல்லும். மரங்களின் கூம்படுக்குகளின் அடியில் மறைந்திருந்து, லெமூர் (Lemur) போன்ற விலங்குகள் மீது நம்ப முடியாத வேகத்தில் பாய்ந்து, பிடித்துச்செல்லும்.