
மேற்கு ஐபீரிய மூவலந்தீவு, வட ஆப்பிரிக்கா, கிரேக்கம், பால்கன், துருக்கி, சிரியா, இசுரேல், லெபனான், ஜோர்டான், ஈரான் முதல் உக்ரேனின் வடக்கு, தென் சைபீரியா, மங்கோலியா மற்றும் சீனாவின் கிழக்கு முதல் வடமேற்கு வரையான பிரதேசங்களை தாயகமாகக் கொண்ட தூலிப் (tulip) லிலியாசே என்றழைக்கப்படும் மலர் அல்லி குடும்பத்தைச் சேர்ந்ததாகும். தண்டுக் கிழங்கு கொண்ட நீடித்து நிற்கும் காட்சிப் பூக்களைக் கொண்ட 75 காட்டு இனங்களைக் கொண்ட தூலிபா வகை தாவரமான இதன் மலரைக் கொண்டு, பொருளாதார வரலாற்றில் முதன் முதலாக, ஊக வணிகமான, ‘பொருளியல் குமிழி’ ஏற்பட்டது. இதற்கு. ‘தூலிப் மோகம்’ (Tulip Mania) என்ற பெயரும் ஏற்பட்டது.
1630ம் ஆண்டில் தூலிப் மலர் வணிகத்தில் பெருமளவு லாபம் கிடைப்பதாக, செய்திகள் பரவத் தொடங்கின. இந்தச் செய்திகளைக் கண்ட தொழில் முறை மலர் வணிகர்கள், மலர் விரும்பிகளையும், ஊக பேரத்தில் ஈடுபடுபவர்களையும் அணுகினர். விதையிலிருந்து வளர ஏழு ஆண்டுகள் எடுத்துக் கொள்வதோடு குறைந்த ஆயுளே இவை கொண்டுள்ளவை என்பதால் தூலிப் குமிழ்களின் தேவை அதிகரித்த அளவு உற்பத்தி இல்லை. இதனால், அவற்றின் விலை பன்மடங்கு அதிகரித்தது.
உழவர்களும், நெசவாளர்களும் தாங்கள் செய்து வந்த தொழிலை விடுத்து, தங்களிடமிருந்த கைப்பொருளை எல்லாம் அடகு வைத்து, அதன் மூலம் கிடைத்த பணத்தில் தூலிப் வணிகத்தில் ஈடுபட்டனர். இந்த தூலிப் மலர் வணிகத்தில், 1633ம் ஆண்டில் மூன்றே மூன்று அரிய குமிழ்களுக்காக ஒரு பண்ணை வீடு கைமாறியது. 1636 முதல் 1637ம் ஆண்டில் தூலிப் வெறி உச்சத்தில் இருந்தபோது சில குமிழ்கள் ஒரே நாளில் பத்து முறை வரை கைமாறின.
ஏழு ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்காக அவர்களது தந்தை விட்டுச் சென்ற 70 தூலிப் மலர்களை ஏலம் விட்ட ஒரு நிகழ்வில், ஒரு அரிய வகை குமிழ் அதுவரை இல்லாத சாதனை அளவாக 5,200 கில்டர் பணத்துக்கு விலைபோனது. ஒரு புதிய வகை ஒற்றைக் குமிழ் மணமகளுக்கு வரதட்சணையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால், அதன் பிறகு நடந்த ஒரு வழமையான ஏலத்தில் வாங்குவோர் இல்லாமல் போக, பீதி பரவி விலைகள் திடுமெனச் சரிந்தன.
சில நாட்களுக்கு முன்பு வரை 5,000 கில்டர்களுக்கு விற்கப்பட்ட தூலிப் குமிழ்கள், அதில் நூற்றில் ஒரு பங்கு விலைக்குக் கூட விற்க முடியாமல்போனது. தூலிப் மலர் வணிகம் முற்றிலுமாகச் சரிந்துபோனது. 1636ம் ஆண்டு தொடக்கத்தில் செம்பெர் அகஸ்டஸ் என்ற சிற்றினத்தைச் சேர்ந்த இரண்டே இரண்டு குமிழ்களே மொத்த டச்சுப் பகுதியிலும் இருந்ததாகவும், அதில் ஒன்றுக்கு விலையாக 12 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டதாகவும் ‘தூலிப் வெறி’ நிகழ்வை 1841ம் ஆண்டில் பிரபலப்படுத்திய சார்லசு மேக்கே குறிப்பிடுகிறார்.
இன்னொரு குமிழுக்கு விலையாக 4,600 கில்டர்கள், ஒரு வண்டி, இரு சாம்பல் நிறக் குதிரைகள், அவற்றுக்கான சேணங்கள் ஆகியவை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வுகள் நடைபெற்ற காலத்தில், ஒரு சிறந்த கைவினைஞரின் ஆண்டு வருவாயே ஏறத்தாழ 300 கில்டர்கள்தான் என்பது கவனிக்கத்தக்கது. ஒரு சொத்தை அதன் அடிப்படை மதிப்பின் காரணமாகக் கொள்ளாமல், மாறாக வேறு யாராவது அதிக விலை கொடுக்க வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கையின் காரணமாக வாங்க விருப்பம் கொள்ளும் இந்தக் கோட்பாடு, ‘தூலிப் மோகம்’ என்றானது. அத்துடன் இது மிகப் பெரிய முட்டாள்தனமான கோட்பாட்டின் தொடக்கக் கால எடுத்துக்காட்டாகவும் கருதப்படுகிறது.